என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்.. இ.பி.எஸ் பெயரை கூறாமல் தவிர்த்த செங்கோட்டையன்
- இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்ர்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
இவ்விழாவில் பேசிய செங்கோட்டையன், "அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.
எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது" என்று தெரிவித்தார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்ட உரையில் 250-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை ஒரு முறை கூட பயன்படுத்தாமல் உரையை நிறைவு செய்தார்.
இந்த விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக செங்கோட்டையன் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






