என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.
    • ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்திற்கு மதராஸி என்ற தலைப்பு வைத்துள்ளனர். அதனுடன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

    ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

    திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில், மதராஸி படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

     

    • PMSHRI திட்டம் குறித்து முடிவெடுப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
    • அதிமுகவிற்கு கொள்கை நிலைப்பாடுகளோ, போராட்ட வரலாறோ இல்லை.

    PMSHRI திட்டம் தொடர்பாக திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "பாஜக எப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் அடி வாங்குகிறதோ, அப்போதெல்லாம் குறுக்கே புகுந்து காப்பாற்றும் வேலையைச் செய்வது இங்கிருக்கும் அதிமுக அடிமைகள். ஒன்றிய அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளை இவர்களும் எதிர்க்க மாட்டார்கள். எதிர்க்கும் திமுகவுடன் துணையாகவும் நிற்க மாட்டார்கள்.

    PMSHRI திட்டம் குறித்து முடிவெடுப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது, அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்பதுதான் தலைமைச் செயலாளரின் கடிதத்தில் இருக்கும் செய்தி. ஆனால் அதை மறைத்துவிட்டு, பாஜக பரப்பும் அதே பொய்யை அடிமைகளும் பரப்புகிறார்கள்.

    இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த தத்துவார்த்த நிலைப்பாடும் அதிமுகவால் முன்னெடுக்கப்பட்டது அல்ல. அத்தனையுமே திமுகவால் முன்னெடுக்கப்பட்டு மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டவை. அவற்றின் மீது கைவைத்தால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும் என்பதற்காக தாங்களும் அந்த நிலைப்பாட்டில் இருப்பதுபோல் நடிக்கும் கட்சிதான் அதிமுக. அவர்களுக்கென்று கொள்கை நிலைப்பாடுகளோ, போராட்ட வரலாறோ இல்லை.

    தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு எவ்வளவு பறித்தாலும், கூச்சமின்றி அவர்களின் காலில் விழுந்து, ஏலம் எடுத்து வைத்துள்ள தங்களது கட்சிப் பொறுப்பை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அதிமுகவின் நிரந்தரக் கொள்கை" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'.
    • இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.

    ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.

    கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.

    'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

    ஒரு நாய் அதன் குட்டியை விபத்தில் பறிக்கொடுகிறது. அந்த விபத்திற்கு காரணமானவர்களின் மீது நாய் புகாரளிக்கிறது. இந்த வழக்கை SAC நீதி மன்றத்தில் வாதாடுகிறார். இந்த காடிகள் டிரெய்லரின் இடம் பெற்றுள்ளது. திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை மற்றொரு மதத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்றுவதைத் தடை செய்கிறது.
    • மனுக்கள் தாக்கல் செய்வதற்கு ஒரு வரம்பு உள்ளது

    1991 இல் இயற்றப்பட்ட மத வழிபட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு மனுத்தாக்கல் செய்யப்படுவது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களின் மதத் தன்மையில் எந்த மாற்றத்தையும் இந்தச் சட்டம் தடைசெய்கிறது மற்றும் ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்றபோது இருந்த அதே மதத் தன்மையில் அவற்றைப் பாதுகாக்கவும் வழிவகை செய்கிறது.

    இந்தச் சட்டத்தின் பிரிவு 3, ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை மற்றொரு மதத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்றுவதைத் தடை செய்கிறது.

    இந்நிலையில் இதை எதிர்த்து இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் தொடந்து மனுத் தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு ஒரு மனு இன்று(திங்கள்கிழமை) தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய சஞ்சீவ் கண்ணா, "போதும் போதும். இது முடிவுக்கு வர வேண்டும். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் எந்த புதிய மனுவையும் விசாரிக்காது" என்று மனுதாரரின் வழக்கறிஞரிடம் காட்டமாக தெரிவித்தார்.

    "இது மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு. ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் இதைப் பட்டியலிடுங்கள். மனுக்கள் தாக்கல் செய்வதற்கு ஒரு வரம்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

    மேலும் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என சாம் பிட்ரோடா தெரிவித்தார்
    • சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

    இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்துவருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாமல் இருக்கிறது.

    அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்கின்றன. அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.

    இந்நிலையில், சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பேட்டி ஒன்றில் சாம் பிட்ரோடாவிடம் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இணைந்து சீனாவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது

    அதற்கு பதில் அளித்த அவர், "சீனாவிடம் இருந்து நமக்கு என்ன அச்சுறுத்தல் வருகிறது என்று எனக்கு புரியவில்லை. அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். நமது அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே மோதலாக உள்ளது. மேலும் இந்த அணுகுமுறை எதிரிகளை உருவாக்குகிறது. ஆனால் இது நாட்டிற்குள் ஆதரவைப் பெறுகிறது. இந்த மனநிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். முதல் நாளிலிருந்தே சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சாம் பிட்ரோடாவின் இந்த கருத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

    இந்நிலையில், சீனா குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கள், இந்திய தேசிய காங்கிரசின் கருத்துக்கள் அல்ல என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • 2023 அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் தெற்குப் பகுதிக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
    • 1200 பேர் கொன்று குவித்ததுடன், 251 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதிக்குள் நுழைந்து கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதோடு 251 பேர் பயணக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா முனை மீது கொடூர தாக்குதல் நடத்தியது. பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 2023 நவம்பர் மாதம் போர் இடைநிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் முற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் முறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது.

    அதன்பின் தற்போது கடந்த மாதம் 19-ந்தேதி 2-வது கட்டமாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் முதல் வாரத்தோடு முடிவடைகிறது. அதன்பின் நீடிக்குமா? அல்லது மீண்டும் போர் தொடங்குமா? என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 500 நாட்கள் ஆகிறது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு காசா சந்தித்த இழப்புகள் ஏராளம். காசா முனையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேல் எலைக்குள் ஹமாஸ் புகுந்து தாக்குதல் நடத்தியது முதல் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது வரையிலான இந்த 500 போரின் சுருக்கம் பின்வருமாறு:-

    * 2023 அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலால் இஸ்ரேலில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    * காசாவில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.

    * காசாவில் இன்னும் 73 பேர் பணயக் கைதிகளாக உள்ளனர். இதில் அக்டோபர் 7-ந்தேதிக்கு முன்னதாக பிடித்துச் செல்லப்பட்ட 3 பேரும் அடங்குவர்.

    * இவர்களில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலால் நம்பப்படுகிறது. அதில் ஒருவர் அக்டோபர் 7-ந்தேதிக்கு முன்னதாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    * காகாவில் 48,200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஹமாஸ் அமைப்பினர் எத்தனை போர்? பொதுமக்கள் எத்தனை பேர் என காசா சுகாதார அமைச்சகம் வேறுபடுத்தி காட்டவில்லை. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    * பாலஸ்தீனத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    * அக்டோபர் 7-ந்தேதியில் இருந்து 846 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

    * அக்டோபர் 7-ந்தேதியில் இருந்து இஸ்ரேல் காசா மீது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளது.

    * பாலஸ்தீனத்தின் 90 சதவீத மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

    * வடக்கு காசாவில் இருந்து 5 லட்சத்து 86 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

    * காசா மற்றும் லெபனானில் (ஹிஸ்புல்லா) இருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் இஸ்ரேலில் 75 ஆயிரத்து 500 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

    * காசாவில் 2 லட்சத்து, 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்துள்ளன அல்லது தரைமட்டமாகியுள்ளன.

    * 92 சதவீத முக்கியமான சாலைகள் சேதம் அடைந்துள்ளன அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.

    * 84 சதவீத சுகாதாரம் தொடர்பான இடங்கள் சேதம் அடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.

    • மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.
    • ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.

    2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பணிகளை மேற்கொள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    அதிமுகவில் அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதிமுகவின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியை வலுப்படுத்த பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.

    செங்கோட்டையன் மாவட்ட செயலாளர் என்பதால் அவருடைய பெயர் மாவட்ட பொறுப்பாளர் பட்டியலில் இல்லை என கூறப்படுகிறது.

    இதேபோல், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.

    கட்சி வளர்ச்சி பணிகள், பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக அதிமுகவில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து பொறுப்பாளர்கள் வளர்ச்சி பணி செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

    • காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் மத்திய அரசின் அமைப்புகளில் ஊடுருவின.
    • பாஜக 2014 தேர்தல்களில் சோரோஸ்/USAID காரணமாக வெற்றி பெற்றது என்றும் அர்த்தம்.

    நிதி நிறுத்தம்

    பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி வழங்கி வந்த USAID அமைப்புக்கான நிதியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிறுத்துவதாக அறிவித்திருந்தார்.

    அரசு செயல்திறன் மேம்பாட்டு துறை (DODGE) என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு தலைவராக உலக பணக்காரர் எலான் மஸ்க்கை நியமித்தார். இந்த துறை அரசின் வீண் செலவுகளை கண்டறிந்து அதை குறைப்பதற்கான ஆலோசனையை டிரம்ப்புக்கு வழங்கி வருகிறது.

    இதற்கிடையில் USAID மூலம் இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுதுவதாக DODGE அறிவித்தது. இந்த நிதியுதவி ஒப்பந்தம் 2012 இல் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் இந்திய அரசியலில் கவனம் பெற்றுள்ளது. அதாவது, அமெரிக்கா வழங்கி வந்த இந்த நிதி, இந்திய தேர்தலில் அந்நிய நாட்டின் தலையீட்டை உறுதி செய்வதாக பாஜக கூறியுள்ளது.

    பாஜக வாதம் 

    இதுதொடர்பாக பாஜக தலைவர் அமித் மாளவியா வெளியிட்ட எக்ஸ் பதிவில், "2012 ஆம் ஆண்டில், எஸ்.ஒய். குரைஷியின் தலைமையில், தேர்தல் ஆணையம், ஜார்ஜ் சோரோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது USAID ஆல் நிதியளிக்கப்படுகிறது. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் மத்திய அரசின் அமைப்புகளில் ஊடுருவின. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிதியை பாஜக பெறவில்லை. அப்படியென்றால் அமெரிக்காவின் நிதியுதவியைப் பெற்றது யார்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    குரேஷி மறுப்பு

    ஆனால் 2010-2012 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய்.குரேஷி, இந்த கூற்று ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் தலைமை தேர்தல் ஆணையராக  இருந்தபோது, 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் நிதி பெறும் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. ஊடகங்களில் வெளியான செய்தியில் சிறிதும் உண்மை இல்ல" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பயிற்சி மற்றும் வள மையமான IIIDEM மூலம் பிற நாடுகளுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தோம். ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதியுதவி அல்லது நிதி அளிப்பதாக வாக்குறுதி என எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். 

    பவன் கேரா பாயிண்ட்

    இந்நிலையில் பாஜவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தேசிய செய்திதொடர்பாளர் பவன் கேரா பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    2012 ஆம் ஆண்டு, USAID இலிருந்து தேர்தல் ஆணையம் இந்த நிதியைப் பெற்றதாகக் கூறப்பட்டபோது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் என்று இந்த கோமாளியிடம் (பாஜக தலைவர் அமித் மாலவியாவிடம்) யாராவது சொல்லுங்கள்.

    அமித் மாலவியா சொல்லும் கூற்றுப்படி, ஆளும் கட்சி (காங்கிரஸ்) இந்த 'வெளிநாட்டு தலையீடு' என்று அழைக்கப்படுவதைப் பயன்படுத்தி அதன் சொந்த தேர்தல் வாய்ப்புகளை நாசப்படுத்தியது என்று பொருள்படுகிறது. மேலும் எதிர்க்கட்சி (பாஜக) 2014 தேர்தல்களில் சோரோஸ்/USAID காரணமாக வெற்றி பெற்றது என்றும் அர்த்தமாகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    • மலாபுரத்தில் முகமது ஆஷிர் என்ற சிறுவனை 7 தெருநாய்கள் தாக்க முயன்றது.
    • இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    கேரள மாநிலம் மலப்புரம் அருகே 7 வயது சிறுவனை கடிக்க தெரு நாய்கள் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து சித்திக் என்பவரின் மகன் முகமது ஆஷிர் என்பவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்

    முகமது ஆஷிர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, 7 தெருநாய்கள் சிறுவனை தாக்க முயன்றது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

    • திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது.
    • இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.

    தேனி மாவட்டம் போடி அருகே மேலசொக்கநாதபுரம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு திருநெல்வேலி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் எலெக்ரானிக் கம்யூனிகேசேன் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.

    செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில் அந்த கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த மாணவர் மர்மமான முறையில் கழிவறையில் இறந்து கிடந்தார். மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் முடிவில் எறும்பு கடித்து மாணவர் இறந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, "எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்" என்று பொறுப்பற்ற முறையில் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது. இசிஆர் வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற திமுக கொடி கட்டிய குற்றவாளி. இப்போது, எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.

    பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவன் விக்னேஷின் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைத்து திசைதிருப்ப ஸ்டாலின் மாடல் திமுக அரசு முயற்சிக்குமாயின், அது கடும் கண்டனத்திற்குரியது.

    மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    • சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார்.
    • வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், "கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யமுடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது

    இவ்வழக்கின் விசாரணையில் வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையை 12 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

    • பீகாரில் உள்ள ரெயில் நிலையங்களில் பிரயாக்ராஜ் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • கூட்டத்தை கட்டுப்படுத்த செல்லத்தக்க டிக்கெட் இல்லாதவர்கள் நுழைய தடைவித்துள்ளது ரெயில்வே நிர்வாகம்.

    மகா கும்பமேளா விழா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வருகிறது. 45 நாள் திருவிழாவான இந்த கும்பமேளா வருகிற 26-ந்தேதி சிவராத்தியுடன் முடிவடைகிறது.

    கும்பமேளா தொடங்கியதில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் புனித நீராடி வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக உ.பி. அரசு தெரிவித்திருந்தது.

    இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரயாக்ராஜ் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பிரயாக்ராஜ் நகருக்கு வர முடியாமல் பல கி.மீ. தொலைவிற்கு அப்பால் மக்கள் வாகனங்களில் தவித்து வருகின்றனர்.

    மேலும் பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் ஏறுவதற்காக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பீகாரில் உள்ள ரெயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்லும் ரெயிலில் கூட்டம் அலைமோதியதால் இடம் கிடைக்காதவர்கள் ஆத்திரத்தில் ஏ.சி. பெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    சனிக்கிழமை இரவு டெல்லியில் பிரயாக்ராஜ் செல்லும் சிறப்பு ரெயிலுக்காக பக்தர்கள் காத்திருந்த நேரத்தில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிழக்க மத்திய ரெயில்வே (ECR) பீகார் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாத பயணிகள் ரெயில் நிலையத்திற்கு நுழைய தடைவிதித்துள்ளது.

    கிழக்கு மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி சரஸ்வதி சந்த்ரா இது தொடர்பாக கூறுகையில் " கிழக்கு மத்திய ரெயில்வேயின் அதிகார வரம்பிற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மகா கும்பமேளாவிற்கு மக்கள் சுமூகமாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய ரெயில்வே உறுதிப்பூண்டுள்ளது. பீனார் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் நுலைவு வாயில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் நுழைய தடைவிதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    மேலும், டிக்கெட் இல்லாத பயணிகளை தடை செய்ய உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காவல்துறையின் உதவியை ரெயில்வே கேட்டுள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடீரென கூடும் கூட்டத்தை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் ஊழியர்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    பாட்னா, தனாபூர், ஆரா, கயா, சாசராம், முசாபர்பூர், சிதாமர்ஹி, தர்பங்கா உள்ளிட்ட பீகார் மாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்களக்கு இதுவரை இல்லாத அளவிற்கு பிரயாக்ராஜ் செல்ல பயணிகள் வருகை தருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ×