என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எறும்பு கடித்து மாணவர் மரணமா? திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை விந்தையானதாக மாறிவிட்டது- இபிஎஸ்
    X

    எறும்பு கடித்து மாணவர் மரணமா? திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை விந்தையானதாக மாறிவிட்டது- இபிஎஸ்

    • திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது.
    • இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.

    தேனி மாவட்டம் போடி அருகே மேலசொக்கநாதபுரம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு திருநெல்வேலி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் எலெக்ரானிக் கம்யூனிகேசேன் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.

    செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில் அந்த கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த மாணவர் மர்மமான முறையில் கழிவறையில் இறந்து கிடந்தார். மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் முடிவில் எறும்பு கடித்து மாணவர் இறந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, "எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்" என்று பொறுப்பற்ற முறையில் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது. இசிஆர் வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற திமுக கொடி கட்டிய குற்றவாளி. இப்போது, எறும்பு கடித்து இவ்வளவு இரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.

    பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவன் விக்னேஷின் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைத்து திசைதிருப்ப ஸ்டாலின் மாடல் திமுக அரசு முயற்சிக்குமாயின், அது கடும் கண்டனத்திற்குரியது.

    மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×