என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பச்சிளம் குழந்தைகள் வலியால் அலறி துடித்தன.
    • காயம்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. மாநிலத்தின் மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளில் ஒன்றான இங்கு எலித்தொல்லை அதிகரித்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்தநிலையில் குழந்தைகள் நல வார்டில் புதிதாக பிறந்த 2 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தன.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது அந்த குழந்தைகளின் கை விரல்கள் மற்றும் காதுகளை அங்கு சுற்றித்திரிந்த எலிகள் கடித்து குதறின. இதனால் பச்சிளம் குழந்தைகள் வலியால் அலறி துடித்தன. காயம்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • அன்றாடம் பயன்படுத்தும் பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மாறுகின்றன.
    • குறைந்தவிலை கார்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படும்.

    புதுடெல்லி:

    தற்போது, ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது.

    சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.

    அதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 சதவீத வரிஅடுக்கில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி அடுக்குக்கும், 28 சதவீத வரிஅடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிஅடுக்குக்கும் மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனால், அன்றாடம் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும் என்று கருதப்படுகிறது.

    கடந்த மாதம் கூடிய மந்திரிகள் குழு, ஜி.எஸ்.டி. வரிஅடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் தெரிவித்தது. தனது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடக்கிறது. அதில், அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    ரூ.40 லட்சம் வரை மதிப்புடைய மின்சார வாகனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும் என்று மந்திரிகள் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க விரும்பும் மத்திய அரசு, மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.தான் விதிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தும் என்று தெரிகிறது.

    வரிகுறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீடு தரவேண்டும் என்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதுபற்றியும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    நெய், 20 லிட்டர் குடிநீர், காற்று செலுத்தப்படாத பானங்கள், தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள் ஆகியவை 12 சதவீத வரியில் இருந்து 5 சதவீத வரிக்கு மாற்றப்படும்.

    அன்றாடம் பயன்படுத்தும் பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மாறுகின்றன.

    சிலவகை டெலிவிஷன்கள், வாஷிங் மெஷின்கள், பிரிஜ்கள் ஆகியவை 28 சதவீத ஜி.எஸ்.டி.யில் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி.க்கு குறைக்கப்படும். எனவே, மேற்கண்ட பொருட்களின் விலை குறையும்.

    குறைந்தவிலை கார்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படும்.

    ஆனால், எஸ்.யு.வி. ரக கார்கள் மற்றும் சொகுசு கார்கள் மீது 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதனால் அவற்றின் விலை உயரும் என்று தெரிகிறது.

    • பா.ம.க.வின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் அச்சிடப்பட்டு உள்ளது.
    • இதற்கு முன்பு டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாசின் புகைப்படங்களுடன் பெயர் இடம் பெற்று இருக்கும்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை டாக்டர் ராமதாஸ் நாளை(வியாழக்கிழமை) எடுப்பார் என்று கட்சியினர் கூறி வருகிறார்கள்.

    இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பேராசிரியர் தீரன் உள்பட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள அறிக்கை குறித்தும், தொடர்ந்து கட்சிக்கும், நிறுவனர், தலைவரான டாக்டர் ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு வரும் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது, 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டம் முடிந்து வெளியே வந்த, புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி நிருபர்களிடம் கூறுகையில், 2026 தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும், தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் எங்களிடம் தெரிவித்தார் என்றார்.

    இதனிடையே தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க.வின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் அச்சிடப்பட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அதில் டாக்டர் அன்புமணி ராமதாசின் புகைப்படம், பெயர் இடம்பெறவில்லை.

    இதற்கு முன்பு டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாசின் புகைப்படங்களுடன் பெயர் இடம் பெற்று இருக்கும். ஆனால் தற்போது டாக்டர் ராமதாஸ் படம் மற்றும் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது எந்த மாதிரியான நடவடிக்கையை டாக்டர் ராமதாஸ் எடுக்க உள்ளார் என்று பலரும் எதிர்நோக்கி இருக்கிறார்கள். இந்த சூழலில் உறுப்பினர் படிவம் மற்றும் அடையாள அட்டைகளில் அவரது படம் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.
    • மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கலைவாணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தனக்கு கால் அமுக்கி விடுமாறு கூறி வந்ததாக தெரிகிறது. சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இது தொடர்பான சில வினாடிகள் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இது சம்பந்தமாக தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை கலைவாணியை அந்த பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர்.
    • கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியது.

    கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், டியாகோ ஜோட்டாவுக்கு போர்ச்சுகல் அணி வீரர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ ஜோட்டாவின் தந்தையை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். .

    • புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல தலைநகர் டெல்லியிலும் தெருநாய்கள் தொந்தரவு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கிடையே திருமண விழாவில் தெருநாய்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விலங்குகள் நல ஆர்வலரான அவர், தனது திருமணத்தில் தெருநாய்கள் இடம் பெற வேண்டும் என விரும்பினார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக நண்பர்கள் உறுதியளித்தனர். அதன்படி திருமணநாளின்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த அனைத்து நாய்களையும் அங்கே திரட்டினர்.

    பின்னர் அவற்றை குளிப்பாட்டி, திருமண விருந்து பரிமாறினர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஐதராபாத் செல்லும்.

    மதுரை கோட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * ஈரோடு ஜங்சனில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16845), வரும் 30-ந்தேதி வரையில் (9,16,23,30 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) திண்டுக்கல்-செங்கோட்டை இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ஜங்சன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16846), வரும் 30-ந்தேதி வரையில் இன்று (புதன்கிழமை), 10, 17, 24 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) செங்கோட்டை-திண்டுக்கல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு ஜங்சன் செல்லும்.

    * செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16848), வரும் 30-ந்தேதி வரையில் இன்று (புதன்கிழமை), 10, 17, 24 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்று வழித்தடம் வழியாக மயிலாடுதுறை செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * நாகர்கோவிலில் இருந்து நாளை (வியாழக்கிழமை), 7, 11, 14, 18, 21, 25, 28 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16352), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மும்பை செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * கன்னியாகுமரியில் இருந்து வரும் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12666), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். கூடுதலாக, அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), வரும் 30-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தவிர எஞ்சிய நாட்கள்) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * கன்னியாகுமரியில் இருந்து வரும் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07229), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஐதராபாத் செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குவாலியர் மண்டல கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக மகாநாரியமன் இருந்தார்.
    • மிக இளைய வயதில் (29) ம.பி. கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.

    மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய பாஜக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மகாநாரியமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    குவாலியர் மண்டல கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அவர் மிக இளைய வயதில் (29) ம.பி. கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானவர் என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.

    மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ தலைவராக இருந்து இப்போது ஐசிசி தலைவராக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார்.
    • பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.

    பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று ஒரு பழமொழி உண்டு. அது இப்படித்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் சண்டிலா அருகே உள்ள முரார்நகரை சேர்ந்தவர் ஷீலு. இவருக்கும் அடமாவ் கிராமத்தை சேர்ந்த சாண்டீரா என்கிற பப்லு என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    புதுமண தம்பதிகள் இருவரும் அடமாவ் கிராமத்தில் 2 மாதங்கள் வசித்து வந்தனர். ஷீலு கர்ப்பிணியானார்.

    இந்தநிலையில் வீட்டை விட்டு சென்ற பப்லு, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய தந்தை புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பப்லுவை தீவிரமாக தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.

    8 ஆண்டுகளாக பப்லு பற்றிய எந்த தகவலும் தெரியாமல், ஷீலு தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு குழந்தையும் பிறந்தது.

    சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார். அதில் ஒரு வீடியோவில் மாயமான தனது கணவர் பப்லு இருப்பதை பார்த்தார். பல முறை அந்த வீடியோவை பார்த்து அதில் இருப்பது தனது கணவர்தான் என்பதை உறுதிப்படுத்திய ஷீலு, அதுபற்றி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடியபோது பப்லு, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் லூதியானா சென்று பப்லுவை தேடிப்பிடித்தனர். அப்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து 8 ஆண்டுகள் அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் அம்பலமாகியது.

    இதையடுத்து அவரை சொந்த கிராமத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு எதற்காக அவர் வீட்டை விட்டு ஓடினார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறினர்.

    பப்லு ஓடிப்போனதற்கு 8 ஆண்டுகளாக பழியை சுமந்து வந்த ஷீலு, மீண்டும் தனது கணவரை ஏற்பாரா என்பதும் பின்னர்தான் தெரியவரும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ரிஷபம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

    மிதுனம்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தை செலவிடும் சூழ்நிலை உண்டு

    கடகம்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

    சிம்மம்

    கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானே தேடிவரும்.

    கன்னி

    முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் சீராக நடைபெறும்.

    துலாம்

    வருமானம் உயரும் நாள். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக வரும் அழைப்புகள் ஆச்சரியமூட்டும்.

    விருச்சிகம்

    மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர் வழிப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். உடல் நலம் சீராகும். உத்தியோக உயர்வு உண்டு.

    தனுசு

    தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியவேண்டிய நாள். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    மகரம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும்.

    கும்பம்

    நண்பர்களின் சந்திப்பால் நன்மைகள் ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள்.

    மீனம்

    சச்சரவுகள் அகலும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நெடுநாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

    • லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்த புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், இங்கிலாந்தில் கால் பதித்த போது பாசத்துடன் அரவணைக்கப்பட்டேன் என கூறியுள்ளார்.



    லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்த புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

    • 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டது.

    180 பயணிகளுடன் இன்று காலை 4.45 மணிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். 

    ×