என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார்.
    • பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.

    பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று ஒரு பழமொழி உண்டு. அது இப்படித்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் சண்டிலா அருகே உள்ள முரார்நகரை சேர்ந்தவர் ஷீலு. இவருக்கும் அடமாவ் கிராமத்தை சேர்ந்த சாண்டீரா என்கிற பப்லு என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    புதுமண தம்பதிகள் இருவரும் அடமாவ் கிராமத்தில் 2 மாதங்கள் வசித்து வந்தனர். ஷீலு கர்ப்பிணியானார்.

    இந்தநிலையில் வீட்டை விட்டு சென்ற பப்லு, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய தந்தை புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பப்லுவை தீவிரமாக தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.

    8 ஆண்டுகளாக பப்லு பற்றிய எந்த தகவலும் தெரியாமல், ஷீலு தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு குழந்தையும் பிறந்தது.

    சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார். அதில் ஒரு வீடியோவில் மாயமான தனது கணவர் பப்லு இருப்பதை பார்த்தார். பல முறை அந்த வீடியோவை பார்த்து அதில் இருப்பது தனது கணவர்தான் என்பதை உறுதிப்படுத்திய ஷீலு, அதுபற்றி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடியபோது பப்லு, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் லூதியானா சென்று பப்லுவை தேடிப்பிடித்தனர். அப்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து 8 ஆண்டுகள் அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் அம்பலமாகியது.

    இதையடுத்து அவரை சொந்த கிராமத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு எதற்காக அவர் வீட்டை விட்டு ஓடினார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறினர்.

    பப்லு ஓடிப்போனதற்கு 8 ஆண்டுகளாக பழியை சுமந்து வந்த ஷீலு, மீண்டும் தனது கணவரை ஏற்பாரா என்பதும் பின்னர்தான் தெரியவரும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ரிஷபம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

    மிதுனம்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தை செலவிடும் சூழ்நிலை உண்டு

    கடகம்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

    சிம்மம்

    கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானே தேடிவரும்.

    கன்னி

    முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் சீராக நடைபெறும்.

    துலாம்

    வருமானம் உயரும் நாள். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக வரும் அழைப்புகள் ஆச்சரியமூட்டும்.

    விருச்சிகம்

    மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர் வழிப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். உடல் நலம் சீராகும். உத்தியோக உயர்வு உண்டு.

    தனுசு

    தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியவேண்டிய நாள். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    மகரம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும்.

    கும்பம்

    நண்பர்களின் சந்திப்பால் நன்மைகள் ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள்.

    மீனம்

    சச்சரவுகள் அகலும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நெடுநாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

    • லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்த புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், இங்கிலாந்தில் கால் பதித்த போது பாசத்துடன் அரவணைக்கப்பட்டேன் என கூறியுள்ளார்.



    லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்த புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

    • 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டது.

    180 பயணிகளுடன் இன்று காலை 4.45 மணிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். 

    • காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது.
    • வெளியே சென்று வந்த உடன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.

    காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி ஆகிய பாதிப்புகளும் காணப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது.

    இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பருவகால மாற்றம் காரணமாக இன்புளூயன்சா வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் தான் அதிகம் காணப்படுகிறது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது. மருத்துவ சிகிச்சை தேவை. இதேபோல, பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முக கவசம் அணிந்து செல்வது நல்லது. ஆனால், கட்டாயம் கிடையாது. வெளியே சென்று வந்த உடன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • நீட் தேர்வில் -40, -25 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
    • ஜீரோ பர்சன்டைல் முறையால் நீட் தேர்வின் நோக்கமே சீரழிந்துவிட்டது.

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு அறிவித்தது.

    நீட் தேர்வில் தேர்ச்சிக்கு 50 பர்சன்டைல் பெற்றாக வேண்டும் என இருந்ததை மாற்றி 0 பர்சன்டைல் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஜீரோ பெர்சண்டைல் என்பது ஜீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஜீரோ பெர்சண்டைல். எனவே முட்டை மதிப்பெண்ணுக்கும் கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் கிடைக்கும்.

    மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 0 மற்றும் மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நீட் தேர்வில் -40, -25 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி நீட் முதுநிலை தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்த 27 பேருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

    தரமான மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ஜீரோ பர்சன்டைல் முறையால் நீட் தேர்வின் நோக்கமே சீரழிந்துவிட்டதாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-18 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி பின்னிரவு 2.50 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : பூராடம் இரவு 10.28 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை, பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீசோமசுந்தரர் புட்டுத் திருவிழா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி, திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்கடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை.

    கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீஅபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் திருமஞ்சன சேவை. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-பணிவு

    மிதுனம்-இன்சொல்

    கடகம்-பரிசு

    சிம்மம்-உறுதி

    கன்னி-நற்சொல்

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- ஆக்கம்

    மகரம்-பக்தி

    கும்பம்-விவேகம்

    மீனம்-ஆர்வம்

    • ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு நாய்க்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    • தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த இவருக்கு சுமார் 6,000 ஃபாலோயர்கள் இருந்தனர்.
    • விஷம் குடித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    டெல்லி: சமூக ஊடகங்களில் மனைவி ரீல்ஸ் வீடியோ பதிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் கணவர் அவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லி நஜாப்கரின் ரோஷன்புராவில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 35 வயதான அமன் இ - ரிக்ஷா ஓட்டுநராக பணி செய்து தனது மனைவி மற்றும் 6 மற்றும் 9 வயதுடைய இரண்டு மகன்களை காப்பாற்றி வந்தார்.

    இவரது மனைவி சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாக இருந்துள்ளார். தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த இவருக்கு சுமார் 6,000 ஃபாலோயர்கள் இருந்தனர்.

    இது பிடிக்காத கணவன் அமன் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அமன், தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

     தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அமன், விஷம் குடித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருப்பினும் தகவலறிந்து விரைந்த போலீஸ் அமனை காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தற்போது அவர் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

    • பெய்ஜிங்கில் ஷெபாஸ் ஷெரீப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார்.
    • இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்த 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சீனா விழா எடுக்கிறது.

    இந்தியாவுடனான ரஷியாவின் உறவுகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்துள்ளார்.

     நேற்று, சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஷெபாஸ் ஷெரீப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார்.

    அப்போது, "டெல்லியுடனான மாஸ்கோவின் உறவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும், அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் ஷெபாஸ் ஷெரீப் புதினிடம் கூறியுள்ளார்.

    மேலும், "நாங்கள் உங்களுடன் மிகவும் வலுவான உறவுகளை விரும்புகிறோம். இந்த உறவு இந்த பிராந்தியத்தின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு பரஸ்பரம் பயனளிக்கும்" என்று அவர் புதினிடம் கூறினார்.

    இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்த 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சீனா ஏற்பாடு செய்துள்ள மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க புதினும் ஷெரீப்பும் பெய்ஜிங்கிற்கு வந்திருப்பது குறிபிடத்தக்கது.

    • அடைமொழிக்கு ஏற்றவாறு அவரின் பாறை போன்ற கட்டுக்கோப்பான உடல் பிரசித்தி பெற்றது.
    • பாக்சிங் வீரராக ராக் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் படம் வரும் அக்டோபரில் திரைக்கு வர உள்ளது.

    WWE முன்னாள் மல்யுத்த வீரரும் பிரபல ஹாலிவுட் நடிகருமானவர் "The Rock" என ரசிகர்களால் அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் (53 வயது). அடைமொழிக்கு ஏற்றவாறு அவரின் பாறை போன்ற கட்டுக்கோப்பான உடல் வகுக்காவே பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்து குவிந்தன.

    இந்நிலையில் அண்மையில் ராக் பொதுவெளியில் தோன்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். அவரின் பிரதான அடையாளமான அவரது ஆஜானுபாகுவான உடல் தோற்றம் குன்றி ஒல்லியாக அவர் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என்று கவலைப்படுகிறார்கள். அவருக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினை உள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என சமூக ஊடகங்களில் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.

    இருப்பினும், இது அவரது வரவிருக்கும் படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக இருக்கலாம் என்று சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். சிலரோ, வயதானால் அப்படிதான் என ஆறுதல்பட்டுக்கொள்கின்றனர். 

    பாக்சிங் வீரராக ராக் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் படம் வரும் அக்டோபரில் திரைக்கு வர உள்ளது.  இது Mark Kerr என்ற பிரபல பாக்சிங் சாபியனின் வாழக்கை வரலாற்று படமாகும். இந்த படத்திற்காகவே ராக் தனது உடல் எடையில் 27 கிலோ குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    • அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
    • 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.

    கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

    இந்நிலையில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், "இன்று பஞ்சாப் எதிர்கொள்ளும் பேரழிவு சாதாரண வெள்ளம் அல்ல,  37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் ஒரே அடியில் வீடற்றவர்களாகிவிட்டனர். அவர்களின் வாழ்நாள் முழுவதும் சம்பாத்தியமும் கனவுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    நாட்டிற்கு ஏற்பட்ட எந்தவொரு பேரிடரையும் பஞ்சாப் எப்போதும் எதிர்த்து நிற்கிறது. இன்று, பஞ்சாப் நெருக்கடியில் உள்ளது. இந்த கடினமான நேரத்தில் பஞ்சாப் மக்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவுமாறு எனது நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

    ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை பஞ்சாப் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். இந்த பயங்கரமான துயரத்திலிருந்து பஞ்சாபைக் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைவோம்." என்று அழைப்பு விடுத்துள்ளார். 

    ×