என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அடைமொழிக்கு ஏற்றவாறு அவரின் பாறை போன்ற கட்டுக்கோப்பான உடல் பிரசித்தி பெற்றது.
    • பாக்சிங் வீரராக ராக் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் படம் வரும் அக்டோபரில் திரைக்கு வர உள்ளது.

    WWE முன்னாள் மல்யுத்த வீரரும் பிரபல ஹாலிவுட் நடிகருமானவர் "The Rock" என ரசிகர்களால் அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் (53 வயது). அடைமொழிக்கு ஏற்றவாறு அவரின் பாறை போன்ற கட்டுக்கோப்பான உடல் வகுக்காவே பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்து குவிந்தன.

    இந்நிலையில் அண்மையில் ராக் பொதுவெளியில் தோன்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். அவரின் பிரதான அடையாளமான அவரது ஆஜானுபாகுவான உடல் தோற்றம் குன்றி ஒல்லியாக அவர் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என்று கவலைப்படுகிறார்கள். அவருக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினை உள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என சமூக ஊடகங்களில் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.

    இருப்பினும், இது அவரது வரவிருக்கும் படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக இருக்கலாம் என்று சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். சிலரோ, வயதானால் அப்படிதான் என ஆறுதல்பட்டுக்கொள்கின்றனர். 

    பாக்சிங் வீரராக ராக் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் படம் வரும் அக்டோபரில் திரைக்கு வர உள்ளது.  இது Mark Kerr என்ற பிரபல பாக்சிங் சாபியனின் வாழக்கை வரலாற்று படமாகும். இந்த படத்திற்காகவே ராக் தனது உடல் எடையில் 27 கிலோ குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    • அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
    • 37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.

    கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

    இந்நிலையில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மத்திய அரசு பஞ்சாபிற்கு உதவுமாறு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், "இன்று பஞ்சாப் எதிர்கொள்ளும் பேரழிவு சாதாரண வெள்ளம் அல்ல,  37 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் இவ்வளவு பயங்கரமான பேரழிவைச் சந்தித்துள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் ஒரே அடியில் வீடற்றவர்களாகிவிட்டனர். அவர்களின் வாழ்நாள் முழுவதும் சம்பாத்தியமும் கனவுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    நாட்டிற்கு ஏற்பட்ட எந்தவொரு பேரிடரையும் பஞ்சாப் எப்போதும் எதிர்த்து நிற்கிறது. இன்று, பஞ்சாப் நெருக்கடியில் உள்ளது. இந்த கடினமான நேரத்தில் பஞ்சாப் மக்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவுமாறு எனது நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

    ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை பஞ்சாப் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். இந்த பயங்கரமான துயரத்திலிருந்து பஞ்சாபைக் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைவோம்." என்று அழைப்பு விடுத்துள்ளார். 

    • பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
    • அத்தாவுல்லா மெங்கல்-லின் மகன் சர்தார் அக்தர் மெங்கல் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாகிஸ்தானில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

    தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் மறைந்த தேசியவாத தலைவர் சர்தார் அத்தாவுல்லா மெங்கல்-லின் நினைவு தினத்தை முன்னிட்டு பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.

    பேரணி முடிந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது, மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

    பேரணியில் கலந்து கொண்ட அத்தாவுல்லா மெங்கல்-லின் மகன் சர்தார் அக்தர் மெங்கல் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தானில் தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 62, துணைப்பிரிவு 2 இன் படி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்க முடியாது.
    • வாக்கு திருட்டு குறித்து பேசி வந்த பவன் கேரா தான் உண்மையான திருடன் என பாஜக விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா 2 வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக குற்றம்சாட்டி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 62, துணைப்பிரிவு 2 இன் படி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்க முடியாது. எனவே இது குறித்து தேர்தல் ஆணையம் கேராவிடம் பதில் கோரியுள்ளது.

    "கேராவிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. ஒன்றில் XHC1992338 என்ற எண் உள்ளது, இது ஜங்புரா சட்டமன்றத் தொகுதி 41 ஐச் சேர்ந்தது. மற்றொன்றின் EPIC எண் SJE0755967 ஆகும், இது புது டெல்லி சட்டமன்றத் தொகுதி 40 ஐச் சேர்ந்தது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுபோல தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்புவது இது முதல் முறை அல்ல. தேஜஸ்வி யாதவ், விஜய் குமார் சின்ஹா, ரேணு தேவி போன்ற தலைவர்களும் தலா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கோரியுள்ளது.

    வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தில்லு முல்லு செய்து பாஜகவை வெற்றி பெற வைப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவர்களை குறிவைத்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வருவதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதற்கிடையே வாக்கு திருட்டு குறித்து பேசி வந்த பவன் கேரா தான் உண்மையான திருடன் என பாஜக ஐடி தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். 

    • அவற்றில் சுபம் என்பவருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.
    • இந்த விஷயம் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது.

    பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17- ந் தேதி முதல் செப்டம்பர் 1 வரை 16 நாள் 'வாக்காளர் அதிகார யாத்திரை' மேற்கொண்டார்.

    இடையில் 27 ஆம் தேதி பீகாரின் தர்பங்காவில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தொண்டர்கள் புடை சூழ புல்லட் பைக் பேரணி நடத்தினர்.

    பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளூரில் கிடைக்கும் சில பைக்குகளை பேரணிக்காக எடுத்துச் சென்றிருந்தனர். அவற்றில் சுபம் என்ற  இளைஞருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.

    பேரணிக்கு பின் பிறகு பைக் திருப்பித் தரப்படும் என்று பாதுகாப்பு ஊழியர்கள் உறுதியளித்ததாக சுபம் கூறினார்.

    இருப்பினும், பேரணி முடிந்ததும், தனது பைக்கை எடுத்துச் சென்ற பாதுகாப்பு ஊழியர்களை காணவில்லை 

    பேரணிக்கு சென்ற மற்ற பைக்குகள் திரும்பியபோதிலும், அவரது வாகனம் மட்டும் கிடைக்காததால்  அவர் கவலையில் ஆழ்ந்தார்.

    இந்த விஷயம் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து சுபம் பாட்னாவிற்கு அழைக்கப்பட்டார்.

    அங்கு, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யின் நிறைவு விழாவில், ராகுல் காந்தி புதிய பைக் ஒன்றை சுபம்க்கு பரிசளித்தார்.

    சாவியை ராகுலிடம் இருந்து பெற்றுக்கொண்ட சுபம் அதே பழைய பைக் மாடலை பரிசாக பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்தார். 

    • படகு மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.
    • உணர்ச்சிவசப்பட்ட ​​ பகவந்த் மான் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

    கனமழை மற்றும் வெள்ளத்தால் பஞ்சாப் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டி ராஜோ கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

    படகு மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.

    இதன்போது உள்ளூர் கிராம மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    இதன்போது ஒரு வயதான பெண்மணி தனது துயரத்தைப் பகிர்ந்து கையெடுத்து வணங்கிறார்.  அப்போது உணர்ச்சிவசப்பட்ட பகவந்த் மான் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து ஆராய்ந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கம் முழு இழப்பீடு வழங்கும் என்று பகவந்த் மான் உறுதியளித்தார்.

    • 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    டெல்லியில் 2020 ஆம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட ஏழு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    கலவரம் தொடர்பாக 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ள நிலையில், நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே கலவரம் செய்ய சதி செய்துள்ளதாகவும், தேச விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படும் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

    இதன் பின் பேசிய உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

    2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

    • எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது.
    • மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நூதன முறையில் கடத்தி வரப்பட்ட கொகைனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    சுமார் ரூ.60 முதல் 70 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ கிராம் கொகைன் எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

    சந்தேகம் வராமல் இருக்க, Ferrero Rocher என்ற பிரபல வெளிநாட்டு சாக்லேட் உடைய தங்க நிற தாளில் கொக்கைன் சுற்றப்பட்டு பெட்டிகளில் கடத்தி கடத்தி வரப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முதற்கட்ட விசாரணையில் கடத்துவரப்பட்ட கொகைன், மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்டுள்ள கொகைன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்துள்ளது. 

     அண்மையில் இதேபோல் வெளிநாட்டு சாக்லேட் போர்வையில் டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 5.4 கிலோகிராம் கோகைன் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
    • பாகிஸ்தானை ஒட்டிய இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் மண்ணால் கட்டப்பட்டவை.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

    பாகிஸ்தானை ஒட்டிய இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் மண்ணால் கட்டப்பட்டவை என்பதால் நிலநடுக்கத்தின் தாக்கத்தில் அவை இடிந்து விழுந்தன.

    இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    மீட்டுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் ஞாயிறு இரவு நிலநடுக்கம் ஏற்பட்ட அதே குனார் பகுதியை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

    அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிக்கைபடி, இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதிகளில் இன்றும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.

    குனார் மாகாணத்தின் பேரிடர் மேலாண்மைத் துறையின் செய்தித் தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சான் ஊடகங்களிடம் பேசுகையில், .இந்த புதிய நிலக்காடுகத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். 

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 131 ரன்களுக்கு சுருண்டது.
    • ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி 54 ரன்னில் வெளியேறினார்.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி லீட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 24.3 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 54 ரன்கள் எடுத்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டும், வியான் முல்டர் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

    மார்கிரம், ரிக்கல்டன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். அவர் 55 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    முதல் விக்கெட்டுக்கு மார்கிரம்-ரிக்கல்டன் ஜோடி 121 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • தபாங் டெல்லி கேப்டன் அஷு மாலிக் 15 புள்ளிகள் பெற்றார்.
    • நீரஜ் நன்வால் 7 புள்ளிகள் பெற்றார்.

    புரோ கபடி 2025 சீசனின் முதல் வார போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தபாங் டெல்லி கே.சி.- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இதில் தபாங் டெல்லி கே.சி. 41-34 என வெற்றி பெற்றது.

    தபாங்க் டெல்லி அணியின் கேப்டன் அஷு மாலிக் 15 புள்ளிகள் பெற்றார். நீரஜ் நன்வால் 7 புள்ளிகளும், சுர்ஜீத் சிங், சவுரவ் நந்தல், பசேல் அட்ராசலி ஆகியோர் தலா 3 புள்ளிகளும் பெற்றனர்.

    பெங்களூரு புல்ஸ் அணி சார்பில் அலிரேசா மிர்சையான் 10 புள்ளிகளும், கணேசா 4 புள்ளிகளும் பெற்றனர். ஆகாஷ் ஷிண்டே 3 புள்ளிகள் பெற்றார்.

    • பேரல் ஒன்றுக்கு 3 முதல் 4 டாலர் வரை தள்ளுபடியில் வழங்க ரஷிய முன்வந்துள்ளதாக தகவல்.
    • இந்த மாதம் கடைசியில் பேரல்கள் லோடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படலாம் எனவும் தகவல்.

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. அதோடு மட்டுமல்லாமல் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரி விதித்தது. மொத்தமாக 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.

    அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நிறுத்தவில்லை. இந்த நிலையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மேலும் தள்ளுபடி விலையில் விற்க ரஷியா முன் வந்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. பேரல் ஒன்றுக்கு 3 அமெரிக்க டாலர் முதல் 4 அமெரிக்க டாலர் வரை தள்ளுபடி செய்ய உள்ளதாகவும், இந்த கச்சா எண்ணெய் செப்டம்பர் கடைசி மற்றும் அக்டோபர் மாதத்தில் லோடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மூலமாக கிடைக்கும் பணத்தை, உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷியா ஆயுதங்கள் வாங்க பயன்படுத்துவதாக அமெரிக்க குற்றம்சாட்டி வருகிறது.

    ரஷியா- உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், ரஷியாவில் இருந்து மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது எனவும் அமெரிக்கா விமர்சனம் செய்து வருகிறது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாடு சீனாவில் நடைபெற்றது. அப்போது இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    ×