என் மலர்
உலகம்

கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்கா: இந்தியாவுக்கு மேலும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்த ரஷியா..!
- பேரல் ஒன்றுக்கு 3 முதல் 4 டாலர் வரை தள்ளுபடியில் வழங்க ரஷிய முன்வந்துள்ளதாக தகவல்.
- இந்த மாதம் கடைசியில் பேரல்கள் லோடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படலாம் எனவும் தகவல்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. அதோடு மட்டுமல்லாமல் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரி விதித்தது. மொத்தமாக 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நிறுத்தவில்லை. இந்த நிலையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மேலும் தள்ளுபடி விலையில் விற்க ரஷியா முன் வந்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. பேரல் ஒன்றுக்கு 3 அமெரிக்க டாலர் முதல் 4 அமெரிக்க டாலர் வரை தள்ளுபடி செய்ய உள்ளதாகவும், இந்த கச்சா எண்ணெய் செப்டம்பர் கடைசி மற்றும் அக்டோபர் மாதத்தில் லோடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மூலமாக கிடைக்கும் பணத்தை, உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷியா ஆயுதங்கள் வாங்க பயன்படுத்துவதாக அமெரிக்க குற்றம்சாட்டி வருகிறது.
ரஷியா- உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், ரஷியாவில் இருந்து மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது எனவும் அமெரிக்கா விமர்சனம் செய்து வருகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாடு சீனாவில் நடைபெற்றது. அப்போது இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இந்த தகவல் வெளியாகியுள்ளது.






