என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருநாய்கள்"

    • விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், சுமார் 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    • கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்படுகின்றன.

    தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துகளின் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம் கலந்த உணவு மூலம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பவானிபேட்டை, பல்வாஞ்சா, ஃபரித்பேட்டை, வாடி மற்றும் பண்டாரமேஷ்வரபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தெரு நாய்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக விலங்கு நல ஆர்வலர் அதுலபுரம் கௌதம் (35) என்பவர் ஜனவரி 12 அன்று அளித்த புகாரின்மூலம் இந்த செய்தி வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டும் சுமார் 200 நாய்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அந்தந்த கிராமத் தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நாய்களை கொலைசெய்ய பணியமர்த்தப்பட்ட கிஷோர் பாண்டே உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன. பின்னர் கால்நடை மருத்துவக் குழுக்களால் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "இறப்புக்கான சரியான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட விஷத்தின் வகையைக் கண்டறிய உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன," என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    "கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை ஒழிப்போம் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளனர். அதன்பேரில் தற்போது இந்த கொலைகள் நிகழ்த்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

    இந்த மாத தொடக்கத்தில், ஜனவரி 6 முதல் 9 வரை ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • தெருநாய்கள் கடித்தால் ஏற்படும் காயம் அல்லது இறப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் நாய்களுக்கு உணவளிப்பவர்கள் ஆகிய இருவருமே பொறுப்பேற்க வேண்டும்
    • தெருநாய்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. உங்களுக்கு நாய் வேண்டுமென்றால், உரிமம் பெற்று வளர்க்கலாமே

    தெருநாய்கள் கடித்தால் ஏற்படும் காயம் அல்லது இறப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் நாய்களுக்கு உணவளிப்பவர்கள் ஆகிய இருவருமே பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தெருநாய்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள், அவற்றை பொது இடங்களில் நடமாடவிட்டு மக்களை அச்சுறுத்தவோ அல்லது கடிக்கவோ விடாமல், தங்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்று வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தது.

    தெருநாய்கள் தொடர்பாக வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும்நிலையில், விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.

    "குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு நாய்க்கடி, மரணம் அல்லது காயத்திற்கும், தகுந்த நடவடிக்கை எடுக்காததற்காக அரசாங்கம் அதிகப்படியான இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட வாய்ப்புள்ளது. அதேபோல், நாய்களுக்கு உணவளிப்பதாக சொல்பவர்களுக்கும் இதற்கான பொறுப்பையும், கடமையையும் நிர்ணயிப்போம்.

    அவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென்றால், உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். நாய்கள் ஏன் பொது இடங்களில் சுற்றித் திரிந்து மக்களைக் கடித்து அச்சுறுத்த வேண்டும்?" என்று நீதிபதி விக்ரம் நாத் கேள்வி எழுப்பினார். "9 வயது குழந்தையை நாய்கள் தாக்கும்போது அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? அவர்களுக்கு உணவளிக்கும் அமைப்பா? இந்தப் பிரச்சனையை நாங்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?" என்று நீதிபதி மேத்தா கேள்வி எழுப்பினார்.

    மேலும் "தெருநாய் ஒருவரைத் தாக்கும்போது அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? தெருநாய்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. உங்களுக்கு நாய் வேண்டுமென்றால், உரிமம் பெற்று வளர்க்கலாமே" என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து ஒரு அமைப்பிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், நவம்பர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆதரித்துப் பேசினார். அந்த உத்தரவு சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருப்பதாக அவர் வாதிட்டார். ஏற்கனவே பல்வேறு கமிட்டிகளின் அறிக்கைகள் நீதிமன்றத்திடம் உள்ளதால், இது குறித்து ஆராயப் புதிய நிபுணர் குழு எதுவும் தேவையில்லை என்றும் கூறினார்.

    இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி மேத்தா, "நீதிமன்ற உத்தரவை (நவம்பர் 7 உத்தரவு) பாதுகாக்க வந்த முதல் நபர் இவர்தான்" என்று பாராட்டினார். தெருநாய்களுக்குப் பொது இடங்களிலோ அல்லது நிறுவன வளாகங்களிலோ தங்குவதற்கு எந்தச் சட்டபூர்வ உரிமையும் இல்லை என்று தத்தார் வாதிட்டார். ஒரு மனிதர் தங்க அனுமதி இல்லாத இடத்தில் விலங்குகளும் இருக்க முடியாது என்றும், நாய்களை மீண்டும் அதே இடத்திற்கு அழைத்துச் செல்வது "விலங்கு அத்துமீறல்" ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். சாலைகளில் பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்ட உரிமை குறித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    நகர்ப்புறங்களைத் தாண்டி வனப்பகுதிகளில் உள்ள காட்டு நாய்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். லடாக்கில் சுமார் 55,000 காட்டு நாய்கள் சுற்றித் திரிவதாகவும், அவை அழியும் நிலையில் உள்ள அபூர்வ வனவிலங்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தார். முறையான நடவடிக்கைகளை எடுத்தால், சில ஆண்டுகளிலேயே நாய் கடியையும் அதன் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என்று அவர் கூறினார்.

    தெருநாய் பிரச்சனை இப்போது நீதிமன்ற வளாகம் வரை வந்துவிட்டதாக நீதியரசர் மேத்தா கவலை தெரிவித்தார். சமீபத்தில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை நாய் கடித்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், அங்கு நாயைப் பிடிக்க வந்த நகராட்சி ஊழியர்களை "நாய் விரும்பிகள்" என்று சொல்லிக் கொள்ளும் சில வழக்கறிஞர்களே தாக்கியதை வேதனையுடன் பதிவு செய்தார்.

    விலங்கு நல அமைப்புகளின் வேண்டுகோள்: 

    ஒரு விலங்கு நல அறக்கட்டளைக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், இந்தப் பிரச்சனையை 'மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதலாக' மட்டும் பார்க்காமல், சூழலியல் சமநிலை (Ecological balance) என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாம்புக் கடியால் ஏற்படும் இறப்புகள் தொடர்பான தரவுகளைக் குறிப்பிட்ட அவர், எலிகளைக் கட்டுப்படுத்துவதிலும் சுற்றுச்சூழலைச் சமன்படுத்துவதிலும் நாய்களுக்குப் பங்கு உண்டு என்று வாதிட்டார்.

    மனிதாபிமான அணுகுமுறை:

    மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், விலங்குகளைக் கருணையுடன் நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது என்பதை வலியுறுத்தினார். நாய்களைக் கொல்வது போன்ற நடவடிக்கைகளை அவர் எச்சரித்தார். போதிய எண்ணிக்கையில் ABC (விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு) மையங்கள் இல்லாதது போன்ற உள்கட்டமைப்பு குறைபாடுகளே இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று அவர் வாதிட்டார். மேலும், ஒரு இடத்திலிருந்து நாய்களை அகற்றினால், அந்த இடத்தை விட அதிக ஆக்ரோஷமான மற்ற விலங்குகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும் என்றும் எச்சரித்தார்.

    உணர்ச்சிப்பூர்வமான விவாதம்:

    மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி இப்பிரச்சனையை ஒரு "உணர்ச்சிப்பூர்வமான விஷயம்" என்று விவரித்தார். அதற்கு நீதியரசர் மேத்தா, இதுவரை வெளிப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் அனைத்தும் "நாய்களுக்காக மட்டுமே" இருப்பதாகத் தெரிகிறது என்று கருத்து தெரிவித்தார். குருசாமி தனது வாதங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற விவாதங்களை முன்வைத்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் "மேல்தட்டு வர்க்கத்தினர்" என்று நீதியரசர் மேத்தா குறிப்பிட்டார்.

    நீதிபதிகளின் கண்டிப்பு:

    நீண்டகாலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இப்பிரச்சனை பலமடங்கு பெருகிவிட்டதாக நீதியரசர் விக்ரம் நாத் குறிப்பிட்டார். எனவே, அதிகாரிகளை வேலை வாங்கவும், இதற்கான தீர்வைத் தொடங்கவும் நீதிமன்றத்தை அனுமதிக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த விவாதம் ஒரு நீதிமன்ற விசாரணை போல இல்லாமல், ஒரு பொது மேடை (Public platform) விவாதம் போல மாறி வருவதாக நீதியரசர் மேத்தா அதிருப்தி தெரிவித்தார்.

    மூத்த வழக்கறிஞர் பெர்சிவல் பில்லிமோரியா வாதிடுகையில், தெருநாய்கள் குறித்த முறையான கணக்கெடுப்பு (Census) இல்லாததும், ABC (கருத்தடை) திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படாததுமே அடிப்படைப் பிரச்சனை என்றார். அட்டர்னி ஜெனரல் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவும், திட்டச் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும் அவர் பரிந்துரைத்தார்.

    ஆனால், இந்த வாதங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டவை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். முறையான கணக்கெடுப்பு இல்லாதபோது, நாய்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் எப்படி உறுதியாகக் கூறப்படுகிறது? அத்தகைய வாதங்கள் "யதார்த்தத்திற்குப் புறம்பானவை" என்று நீதியரசர் மேத்தா கேள்வி எழுப்பினார்.

    ஊடகச் செய்திகளை ஆதாரமாக நம்பக்கூடாது என்று பில்லிமோரியா எச்சரித்தார். அதற்கு நீதியரசர் நாத், "அப்படியென்றால் இந்த மனுக்களையே பதிவு செய்திருக்கக் கூடாது என்று சொல்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு விளக்கமளித்த பில்லிமோரியா, ஊடகச் செய்திகளை மட்டுமே அதிகமாகச் சார்ந்திருப்பது ஒரு "எதிரொலி அறை" போன்ற மாயையை உருவாக்கிவிடும் என்பதே தனது கவலை என்று கூறினார்.

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம்:

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட காம்னா பாண்டே என்பவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாய் தன்னைத் தாக்கியதாகவும், பின்னர் அந்த நாய் நீண்டகாலமாக மக்களால் (கல்லால் அடித்தும், உதைத்தும்) துன்புறுத்தப்பட்டதை தான் அறிந்ததாகவும் கூறினார்.

    பயத்தினால் ஏற்படும் 'தற்காப்பு ஆக்ரோஷம்' (Defensive aggression) தான் நாய்கள் கடிக்க முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். தன்னை கடித்த நாயையே தான் தத்தெடுத்ததாகவும், அதன் பிறகு அந்த நாய் யாரையும் கடிக்கவில்லை என்றும் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    நாய்களைக் கூண்டில் அடைப்பதற்குப் பதிலாக, நிறுவன வளாகங்களிலேயே அவற்றுக்கான இல்லங்களை (Dog homes) அமைப்பது போன்ற ஒரு முழுமையான அணுகுமுறை தேவை என்று அவர் வலியுறுத்தினார். மற்றொரு வழக்கறிஞர், பொது இடங்களிலிருந்து நாய்களை அகற்ற வேண்டும் என்ற நவம்பர் 7-ம் தேதி உத்தரவை கிராமப்புறங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து வழக்கு ஜன.20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

     

     

    • ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது
    • 'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

    உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கையிலெடுத்துள்ள தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.

    இந்நிலையில் இந்தக் கருத்தை குறிப்பிட்டு, "ஆண்களின் மனதையும் கணிக்க முடியாது, அவர்கள் எப்போது குற்றம் செய்வார்கள் என்று தெரியாது, அதற்காக எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்க முடியுமா? என நடிகை திவ்யா ஸ்பந்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "ஒரு ஆணின் மனதையும் படிக்க முடியாது -- அவன் எப்போது பாலியல் வன்கொடுமை/கொலை செய்வான் என்று தெரியவில்லை, எனவே எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா?" எனக் குறிப்பிட்டுள்ளார். இது இணையத்தில் பெரும் விவாதத்தையே தூண்டியுள்ளது. பலரும் இந்த ஒப்பீடே முதலில் தவறு எனக்கூறி வருகின்றனர்.

    நடிகை திவ்யா தமிழில் 'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான AppleBox Studios மூலம் படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். விலங்கு நல ஆர்வலரான இவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் சமூகப் பிரச்சினைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்து தனது கருத்துகளை துணிச்சலாகப் பதிவு செய்து வருகிறார்.


    திவ்யா ஸ்பந்தனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி


    • டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    • உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன

    தேசிய தலைநகர் முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் (DoE) அறிவுறுத்தியுள்ளது.

    பயிற்சியைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சமர்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விலங்கு நல ஆர்வலர்கள், மற்றும் விலங்குகள் நலன் துறையைச் சார்ந்தவர்களுக்கு இந்தப் பணியை ஒதுக்காமல் தங்களுக்கு ஒதுக்குவது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    கல்வி சாராத பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்துவது மாணவர்களின் கல்வியை பாதித்து, ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் தெருநாய் கணக்கெடுப்புக்கு ஆசிரியர்களை நியமிக்கும் இதே போன்ற உத்தரவுகள்  பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நாய் கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.
    • டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.

    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, அவற்றுக்கு 'மைக்ரோ சிப் பொருத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.

    இந்த மேக்ரோ சிப்களை வழங்கும் டெண்டர், 'எக்ஸ்ஹீலர் இன்னோவேடிவ் சொல்யூசன்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பின்னர், அந்த டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.

    இந்த டெண்டரை எதிர்த்து 'எக்ஸ்ஹீலர்' நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, "டெண்டரில் பல்வேறு குளறுபடிகள், விதிமீறல்கள் நடந்துள்ளன எனக்கூறி அந்த டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

    • தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார்.
    • மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார்.

    தெருநாய்கள் பிரச்சனையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என புலம்பி வருகிறார். கடந்த 2006 -ம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வருகிறார்.

    திருமணம் முடிந்த கொஞ்சநாளில் அவரது மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

    தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அதோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் அந்த நாய்களுடன் தூங்கினார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் கணவரும் போலீஸ் நிலையத்துக்கு அலைந்தார். மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார்.

    இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    மனைவிக்கு ரூ. 15 லட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு ரூ. 2 கோடி வேண்டும் என கேட்டுள்ளார்.

    இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    • தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
    • மாநில செயலாளர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    டெல்லியில் தெருநாய்கள் பிரச்சனை தொடர்பாக தாமாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் டெல்லி மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

    அண்மையில் நடந்த விசாரணையில் இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மாநில செயலாளர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    இந்நிலையில் தெருநாய்கள் பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரெயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும். அங்கு தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும்.

    பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.  

    • புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல தலைநகர் டெல்லியிலும் தெருநாய்கள் தொந்தரவு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கிடையே திருமண விழாவில் தெருநாய்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விலங்குகள் நல ஆர்வலரான அவர், தனது திருமணத்தில் தெருநாய்கள் இடம் பெற வேண்டும் என விரும்பினார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக நண்பர்கள் உறுதியளித்தனர். அதன்படி திருமணநாளின்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த அனைத்து நாய்களையும் அங்கே திரட்டினர்.

    பின்னர் அவற்றை குளிப்பாட்டி, திருமண விருந்து பரிமாறினர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • விலங்குகளின் உடல்கள் சாலைகளிலும் அருகிலுள்ள வயல்களிலும் உயிரற்ற நிலையில் கிடப்பதும் பதிவாகி உள்ளது.
    • வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ராஜஸ்தானில் 2 நபர்கள் 2 நாட்களில் 25க்கும் மேற்ப்பட் தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம், நவல்கர் பகுதியில் உள்ள குமாவாஸ் கிராமத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 25க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இரண்டு நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டன.

    வீடியோவில், கிராமத் தெருக்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு ஆண்கள் தெருநாய்களைத் துரத்திச் சென்று அவற்றைச் சுடுவதும். விலங்குகளின் உடல்கள் சாலைகளிலும் அருகிலுள்ள வயல்களிலும் உயிரற்ற நிலையில் கிடப்பதும் பதிவாகி உள்ளது.

    இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

    • தெருநாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அரசாணை வெளியிட்டது.
    • கருணை கொலை செய்யப்படும் தெருநாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும்.

    மோசமான காயமடைந்து, நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

    தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அரசாணை வெளியிட்டது.

    பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்ய வேண்டும். கருணைக்கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கருணை கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவது குறித்த கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூரு மாநகர் வளர்ச்சி அடைந்து வந்தாலும், மறுபுறம் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
    • நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் தெருநாய்கள் வீதம் இந்த அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது.

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் இன்று உலக அளவில் பெங்களூரு பிரபலமாக உள்ளது. 1½ கோடி பேர் வசிக்கும் பெங்களூருவில் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. ஒரு காலத்தில் பூங்கா நகரம் என அழைக்கப்பட்ட பெங்களூரு, தற்போது கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன.

    பெங்களூரு மாநகர் வளர்ச்சி அடைந்து வந்தாலும், மறுபுறம் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் சிறுவர், சிறுமிகள், முதியவர்களை தாக்கி வருகிறது. கடந்த சில மாதத்திற்கு முன்பு 70 வயது மூதாட்டி தெருநாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தார். பெங்களூருவில் மட்டும் கடந்த 6 மாதத்தில் மட்டும் 7 ஆயிரம் பேரை தெருநாய்கள் கடித்துள்ளன.

    கடந்த 2023-ம் ஆண்டு மாநகராட்சி கணக்கெடுப்பின்படி, பெங்களூரு மாநகரில் 2 லட்சத்து 79 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தெருநாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    வெளி மாநிலத்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் அதிக அளவில் வந்து செல்லும் பெங்களூரு மாநகரில் தெருநாய் தொல்லை தீரா தலைவலியாக மாறியுள்ளது.

    தெருநாய் தொல்லைக்கு முக்கிய காரணம் அவற்றுக்கு போதிய அளவில் ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். எனவே தெருநாய்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க பெங்களூரு மாநகராட்சி புதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது தெருநாய்களுக்கு 'சிக்கன் ரைஸ்', 'எக் ரைஸ்' என விதம் விதமான அசைவ உணவு வழங்குவதுதான் அந்த புதிய யோசனை.

    இதற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடியே 88 லட்சத்தை செலவிடவும் மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி சிறப்பு கமிஷனர் சுரல்கர் விகாஸ் கூறுகையில், தெருநாய்கள் மனிதர்களை கடிக்காமல் இருப்பதற்காக கடந்த ஆண்டு பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு சைவ உணவளிக்கும் திட்டத்தை தொடங்கியது. இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உதவிக்கரம் நீட்டினர்.

    இருப்பினும் இந்த திட்டம் போதிய பலனளிக்கவில்லை. எனவே தற்போது பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ் பாக்யா என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2.79 லட்சம் நாய்களுக்கு சத்தான உணவு வழங்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் தெருநாய்கள் வீதம் இந்த அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது என்றார்.

    இதையெல்லாம் பார்க்கும்போது என்னமா யோசிக்கிறாங்கப்பா என்று நினைக்க தோன்றுகிறது.

    இந்த திட்டத்திற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரம் மனிதர்களுக்கே ஒரு வேளை சாப்பாடு கிடைக்காத நிலையில், தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ், எக்ரைஸ் கொடுப்பதா என பொதுமக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறு ருசியான உணவு கொடுத்தால் தெருநாய்களின் அட்டகாசம் மேலும் அதிகரிக்கும் என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு ஆகும்.

    • பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.
    • இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கோத்தகிரி பேருந்துநிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருவதால் தெருநாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று இரவு கோத்தகிரி பேருந்து நிலையத்தில் குன்னூர் செல்வதற்காக பயணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவரை 7 தெருநாய்கள் சுற்றி வளைத்து கடிக்க முயன்றது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தெருநாய்களை துரத்திவிட்டதால் அந்த பயணி தெருநாய்களிடம் தப்பித்து சென்றார். இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×