என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தெலங்கானாவில் 500 தெருநாய்கள் விஷம் வைத்துக்கொலை!
    X

    தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தெலங்கானாவில் 500 தெருநாய்கள் விஷம் வைத்துக்கொலை!

    • விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், சுமார் 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    • கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்படுகின்றன.

    தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துகளின் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம் கலந்த உணவு மூலம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பவானிபேட்டை, பல்வாஞ்சா, ஃபரித்பேட்டை, வாடி மற்றும் பண்டாரமேஷ்வரபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தெரு நாய்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக விலங்கு நல ஆர்வலர் அதுலபுரம் கௌதம் (35) என்பவர் ஜனவரி 12 அன்று அளித்த புகாரின்மூலம் இந்த செய்தி வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டும் சுமார் 200 நாய்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அந்தந்த கிராமத் தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நாய்களை கொலைசெய்ய பணியமர்த்தப்பட்ட கிஷோர் பாண்டே உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன. பின்னர் கால்நடை மருத்துவக் குழுக்களால் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "இறப்புக்கான சரியான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட விஷத்தின் வகையைக் கண்டறிய உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன," என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    "கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை ஒழிப்போம் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளனர். அதன்பேரில் தற்போது இந்த கொலைகள் நிகழ்த்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த மாத தொடக்கத்தில், ஜனவரி 6 முதல் 9 வரை ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×