என் மலர்tooltip icon

    இந்தியா

    9 வயது குழந்தையை நாய்கள் தாக்கும்போது யார் பொறுப்பேற்பார்கள்? பிரச்சனையை கண்டும் காணாமல் இருக்கவேண்டுமா?  - உச்ச நீதிமன்றம் கேள்வி
    X

    9 வயது குழந்தையை நாய்கள் தாக்கும்போது யார் பொறுப்பேற்பார்கள்? பிரச்சனையை கண்டும் காணாமல் இருக்கவேண்டுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

    • தெருநாய்கள் கடித்தால் ஏற்படும் காயம் அல்லது இறப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் நாய்களுக்கு உணவளிப்பவர்கள் ஆகிய இருவருமே பொறுப்பேற்க வேண்டும்
    • தெருநாய்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. உங்களுக்கு நாய் வேண்டுமென்றால், உரிமம் பெற்று வளர்க்கலாமே

    தெருநாய்கள் கடித்தால் ஏற்படும் காயம் அல்லது இறப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் நாய்களுக்கு உணவளிப்பவர்கள் ஆகிய இருவருமே பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தெருநாய்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள், அவற்றை பொது இடங்களில் நடமாடவிட்டு மக்களை அச்சுறுத்தவோ அல்லது கடிக்கவோ விடாமல், தங்கள் வீட்டிற்கே அழைத்துச் சென்று வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தது.

    தெருநாய்கள் தொடர்பாக வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும்நிலையில், விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.

    "குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு நாய்க்கடி, மரணம் அல்லது காயத்திற்கும், தகுந்த நடவடிக்கை எடுக்காததற்காக அரசாங்கம் அதிகப்படியான இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட வாய்ப்புள்ளது. அதேபோல், நாய்களுக்கு உணவளிப்பதாக சொல்பவர்களுக்கும் இதற்கான பொறுப்பையும், கடமையையும் நிர்ணயிப்போம்.

    அவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென்றால், உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். நாய்கள் ஏன் பொது இடங்களில் சுற்றித் திரிந்து மக்களைக் கடித்து அச்சுறுத்த வேண்டும்?" என்று நீதிபதி விக்ரம் நாத் கேள்வி எழுப்பினார். "9 வயது குழந்தையை நாய்கள் தாக்கும்போது அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? அவர்களுக்கு உணவளிக்கும் அமைப்பா? இந்தப் பிரச்சனையை நாங்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?" என்று நீதிபதி மேத்தா கேள்வி எழுப்பினார்.

    மேலும் "தெருநாய் ஒருவரைத் தாக்கும்போது அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? தெருநாய்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. உங்களுக்கு நாய் வேண்டுமென்றால், உரிமம் பெற்று வளர்க்கலாமே" என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து ஒரு அமைப்பிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், நவம்பர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆதரித்துப் பேசினார். அந்த உத்தரவு சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருப்பதாக அவர் வாதிட்டார். ஏற்கனவே பல்வேறு கமிட்டிகளின் அறிக்கைகள் நீதிமன்றத்திடம் உள்ளதால், இது குறித்து ஆராயப் புதிய நிபுணர் குழு எதுவும் தேவையில்லை என்றும் கூறினார்.

    இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி மேத்தா, "நீதிமன்ற உத்தரவை (நவம்பர் 7 உத்தரவு) பாதுகாக்க வந்த முதல் நபர் இவர்தான்" என்று பாராட்டினார். தெருநாய்களுக்குப் பொது இடங்களிலோ அல்லது நிறுவன வளாகங்களிலோ தங்குவதற்கு எந்தச் சட்டபூர்வ உரிமையும் இல்லை என்று தத்தார் வாதிட்டார். ஒரு மனிதர் தங்க அனுமதி இல்லாத இடத்தில் விலங்குகளும் இருக்க முடியாது என்றும், நாய்களை மீண்டும் அதே இடத்திற்கு அழைத்துச் செல்வது "விலங்கு அத்துமீறல்" ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். சாலைகளில் பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்ட உரிமை குறித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    நகர்ப்புறங்களைத் தாண்டி வனப்பகுதிகளில் உள்ள காட்டு நாய்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். லடாக்கில் சுமார் 55,000 காட்டு நாய்கள் சுற்றித் திரிவதாகவும், அவை அழியும் நிலையில் உள்ள அபூர்வ வனவிலங்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தார். முறையான நடவடிக்கைகளை எடுத்தால், சில ஆண்டுகளிலேயே நாய் கடியையும் அதன் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என்று அவர் கூறினார்.

    தெருநாய் பிரச்சனை இப்போது நீதிமன்ற வளாகம் வரை வந்துவிட்டதாக நீதியரசர் மேத்தா கவலை தெரிவித்தார். சமீபத்தில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை நாய் கடித்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், அங்கு நாயைப் பிடிக்க வந்த நகராட்சி ஊழியர்களை "நாய் விரும்பிகள்" என்று சொல்லிக் கொள்ளும் சில வழக்கறிஞர்களே தாக்கியதை வேதனையுடன் பதிவு செய்தார்.

    விலங்கு நல அமைப்புகளின் வேண்டுகோள்:

    ஒரு விலங்கு நல அறக்கட்டளைக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், இந்தப் பிரச்சனையை 'மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதலாக' மட்டும் பார்க்காமல், சூழலியல் சமநிலை (Ecological balance) என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாம்புக் கடியால் ஏற்படும் இறப்புகள் தொடர்பான தரவுகளைக் குறிப்பிட்ட அவர், எலிகளைக் கட்டுப்படுத்துவதிலும் சுற்றுச்சூழலைச் சமன்படுத்துவதிலும் நாய்களுக்குப் பங்கு உண்டு என்று வாதிட்டார்.

    மனிதாபிமான அணுகுமுறை:

    மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், விலங்குகளைக் கருணையுடன் நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது என்பதை வலியுறுத்தினார். நாய்களைக் கொல்வது போன்ற நடவடிக்கைகளை அவர் எச்சரித்தார். போதிய எண்ணிக்கையில் ABC (விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு) மையங்கள் இல்லாதது போன்ற உள்கட்டமைப்பு குறைபாடுகளே இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று அவர் வாதிட்டார். மேலும், ஒரு இடத்திலிருந்து நாய்களை அகற்றினால், அந்த இடத்தை விட அதிக ஆக்ரோஷமான மற்ற விலங்குகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும் என்றும் எச்சரித்தார்.

    உணர்ச்சிப்பூர்வமான விவாதம்:

    மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி இப்பிரச்சனையை ஒரு "உணர்ச்சிப்பூர்வமான விஷயம்" என்று விவரித்தார். அதற்கு நீதியரசர் மேத்தா, இதுவரை வெளிப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் அனைத்தும் "நாய்களுக்காக மட்டுமே" இருப்பதாகத் தெரிகிறது என்று கருத்து தெரிவித்தார். குருசாமி தனது வாதங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற விவாதங்களை முன்வைத்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் "மேல்தட்டு வர்க்கத்தினர்" என்று நீதியரசர் மேத்தா குறிப்பிட்டார்.

    நீதிபதிகளின் கண்டிப்பு:

    நீண்டகாலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இப்பிரச்சனை பலமடங்கு பெருகிவிட்டதாக நீதியரசர் விக்ரம் நாத் குறிப்பிட்டார். எனவே, அதிகாரிகளை வேலை வாங்கவும், இதற்கான தீர்வைத் தொடங்கவும் நீதிமன்றத்தை அனுமதிக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த விவாதம் ஒரு நீதிமன்ற விசாரணை போல இல்லாமல், ஒரு பொது மேடை (Public platform) விவாதம் போல மாறி வருவதாக நீதியரசர் மேத்தா அதிருப்தி தெரிவித்தார்.

    மூத்த வழக்கறிஞர் பெர்சிவல் பில்லிமோரியா வாதிடுகையில், தெருநாய்கள் குறித்த முறையான கணக்கெடுப்பு (Census) இல்லாததும், ABC (கருத்தடை) திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படாததுமே அடிப்படைப் பிரச்சனை என்றார். அட்டர்னி ஜெனரல் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கவும், திட்டச் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும் அவர் பரிந்துரைத்தார்.

    ஆனால், இந்த வாதங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டவை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். முறையான கணக்கெடுப்பு இல்லாதபோது, நாய்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் எப்படி உறுதியாகக் கூறப்படுகிறது? அத்தகைய வாதங்கள் "யதார்த்தத்திற்குப் புறம்பானவை" என்று நீதியரசர் மேத்தா கேள்வி எழுப்பினார்.

    ஊடகச் செய்திகளை ஆதாரமாக நம்பக்கூடாது என்று பில்லிமோரியா எச்சரித்தார். அதற்கு நீதியரசர் நாத், "அப்படியென்றால் இந்த மனுக்களையே பதிவு செய்திருக்கக் கூடாது என்று சொல்கிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு விளக்கமளித்த பில்லிமோரியா, ஊடகச் செய்திகளை மட்டுமே அதிகமாகச் சார்ந்திருப்பது ஒரு "எதிரொலி அறை" போன்ற மாயையை உருவாக்கிவிடும் என்பதே தனது கவலை என்று கூறினார்.

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம்:

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட காம்னா பாண்டே என்பவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாய் தன்னைத் தாக்கியதாகவும், பின்னர் அந்த நாய் நீண்டகாலமாக மக்களால் (கல்லால் அடித்தும், உதைத்தும்) துன்புறுத்தப்பட்டதை தான் அறிந்ததாகவும் கூறினார்.

    பயத்தினால் ஏற்படும் 'தற்காப்பு ஆக்ரோஷம்' (Defensive aggression) தான் நாய்கள் கடிக்க முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். தன்னை கடித்த நாயையே தான் தத்தெடுத்ததாகவும், அதன் பிறகு அந்த நாய் யாரையும் கடிக்கவில்லை என்றும் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    நாய்களைக் கூண்டில் அடைப்பதற்குப் பதிலாக, நிறுவன வளாகங்களிலேயே அவற்றுக்கான இல்லங்களை (Dog homes) அமைப்பது போன்ற ஒரு முழுமையான அணுகுமுறை தேவை என்று அவர் வலியுறுத்தினார். மற்றொரு வழக்கறிஞர், பொது இடங்களிலிருந்து நாய்களை அகற்ற வேண்டும் என்ற நவம்பர் 7-ம் தேதி உத்தரவை கிராமப்புறங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து வழக்கு ஜன.20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    Next Story
    ×