என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இளம்பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது இணையதள வாசிகளிடையே பேசும்பொருளாகி உள்ளது.
    • பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் அரசு வேலை இவருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு பெரும் சுமையாகவே தெரிந்துள்ளது.

    அரசு வேலை என்பது பலருக்கும் லட்சியமாக உள்ளது. அந்த லட்சியத்திற்காக பாடுபடுபவர்கள் வெற்றியும் பெறுகிறார்கள், தோல்வியும் அடைகிறார்கள். தோல்வி அடைந்தாலும் விடாது அரசு வேலைக்காக அரும்பாடுபடுகிறார்கள்.

    இந்த நிலையில், அரசு வங்கி வேலைக்காக அயராது படித்து, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வங்கியில் வேலைபார்த்த 29-வயது இளம்பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது இணையதள வாசிகளிடையே பேசும்பொருளாகி உள்ளது.

    டெல்லியை சேர்ந்த 29 வயதான வாணி என்பவர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியை முடித்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மீரட் கிளையில் கடன்களை நிர்வகிக்கும் ஸ்கேல்-I அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் அரசு வேலை இவருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு பெரும் சுமையாகவே தெரிந்துள்ளது. இதனால் அவர் தனது வேலையை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளில் நான் மிகவும் எரிச்சலூட்டுபவளாகவும், எளிதில் கோபப்படுபவளாகவும் மாறிவிட்டேன். பணத்தை விட மன அமைதியைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உணர்கிறேன். அதேநேரம் நான் இப்படிச் சொல்வதால் யாரும் வங்கிப் பணியில் சேர வேண்டாம் என நான் சொல்லவில்லை. எனது கதையை மட்டுமே நான் இங்கு பகிர்கிறேன் என கூறியுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் கலவையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், இதற்கு தைரியம் தேவை! எல்லோராலும் இதைச் செய்ய முடியாது. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள், மகிழ்ச்சியாக இருங்கள் என்றும், மற்றொருவர், இப்போதெல்லாம், எல்லோரும் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்து சமூக வலைத்தளத்தில் டிரெண்ட்டாக மாறுகிறார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

    கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு, என்னிடம் சில சேமிப்புகள் உள்ளன. மேலும் வேலையில் இருந்தபோது அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே நான் செலவிட்டேன். நான் எந்தக் கடனும் எடுக்கவில்லை, அதனால் எனக்கு EMI இல்லை. எனது மாதாந்திர செலவுகள் 5 ஆயிரத்திற்கும் குறைவு என வாணி பதில் அளித்துள்ளார். 



    • ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
    • ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது.

    திருச்சி:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று (செவ்வாய்க்கிழமை) 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.

    மைசூருவில் இருந்து நேற்று நண்பகல் 12 மணி அளவில் சென்னை வருகை தந்த அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விருந்தளித்து உபசரித்தார்.

    பின்னர் இன்று (புதன்கிழமை) காலை 9:30 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமான மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். தொடர்ந்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அதே ஹெலிகாப்டரில் மாலை 4 மணிக்கு திருச்சி கொள்ளிடம் யாத்திரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதையை அளிக்கப்படுகிறது.

    அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோவிலுக்குள் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்கிறார். தொட ர்ந்து அவர் கோவில் வளாகத்தை சுற்றி பார்க்கிறார். மேலும் கோவிலில் உள்ள சிற்பங்களையும் அவர் பார்வையிடுகிறார்.

    தரிசனம் முடிந்த உடன் அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மாலை 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

    ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    • வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் 219 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    பாகிஸ்தான் நாட்டின் நட்சத்திர வேகபந்து வீச்சாளராக திகழ்ந்தவர்கள் வாசிம் அக்ரம். இடது கை வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். இவருக்கு இணையான ஸ்விங் பவுலர் இல்லை எனலாம். அதேவேளையில் யார்க்கர் பந்துகளும் வீசுவதில் வல்லவர். இம்ரான் கான், வாசிம் அக்கரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியபோது, தலைசிறந்த வேகப்பந்து அணியாக திகழ்ந்தது.

    தற்போதைய காலத்தில் பும்ரா போன்ற வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். அந்த காலத்து கிரிக்கெட் வீரர்களுடன் தற்போதைய வீரர்களை ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள். குறிப்பாக வாசிம் அக்ரம் உடன், பும்ராவை ஒப்பிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் 1990-களையும், தற்போதைய காலக்கட்டத்தை ஒப்பீடு செய்வது குறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:-

    1990 மற்றும் இன்றைய காலக்கட்டத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது அர்த்தமற்றது. நான் இடது கை பழக்கம் உள்ளவனாக இருந்தபோது, பும்ரா வலது கை பழக்கம் உள்ளவர். சமூக ஊடகங்களில் மக்கள் வாதிடுவதை விரும்புகிறார்கள்.

    இவ்வாறு வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். வாசிம் அக்ரம் 1985 ஆண்டு முதல் 2002ஆம் அண்டு வரை 17 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

    பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் 219 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பும்ரா 2018ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

    • சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.
    • காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவீத நோயாளிகளுக்கு இன்புளூயன்சா A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே காணப்படுகிறார்க்ள்.

    இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவீத நோயாளிகளுக்கு இன்புளூயன்சா A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது. வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • அல்காரஸ் 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
    • ஜோகோவிச் 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தினார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 2ஆம் நிலை வீரரான அல்காரஸ், 10 நிலை வீரரான செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-4, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

     முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.

    இந்திய நேரப்படி சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு காலிறுதியில் இருந்து வோண்ட்ரோசோவா விலகியதால் முதல் தரநிலை வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பெகுலா- சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    • நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கு விற்பனையானது.
    • தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்று சவரனுக்கு 160 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கு விற்பனையானது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் வரலாற்றில் புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,805-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்துள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800

    01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640

    31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-09-2025- ஒரு கிராம் ரூ.137

    01-09-2025- ஒரு கிராம் ரூ.136

    31-08-2025- ஒரு கிராம் ரூ.134

    30-08-2025- ஒரு கிராம் ரூ.134

    29-08-2025- ஒரு கிராம் ரூ.131

    • ஆப்கானிஸ்தானின் செதிகுல்லா அடல், இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் விளாசினர்.
    • ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் செதிகுல்லா அடல் 64 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 65 ரன்களும் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் பஹீம் அஷ்ஃரப் 4 விக்கெட் விழ்த்தினார்.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயுப் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சகிப்ஜதா பர்ஹான் 18 ரன்களில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பரூக்கி வீழ்த்தினார்.

    அதன்பின் பஹர் ஜமான் (25), சர்மான் ஆகா (20) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், நூர் அகமது முகமது நபி ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    10ஆவது வீரராக களம் இறங்கிய ஹாரிஸ் ராஃப் அதிரடியாக விளையாடி, ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தினார். அவரால் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் (16 பந்தில் 4 சிக்கர்) எடுத்த போதிலும் பாகிஸ்தானால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதலாவதாக மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நகரமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்து, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
    • முனியப்பனை ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க கூறியபோது, மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த முனியப்பன் பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 28-ந்தேதி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரம்யா ராஜா என்பவர் தனது பகுதியில் நடந்த பணிகளுக்கான நிதி சம்பந்தமான கோப்பினை கேட்டுள்ளார்.

    அப்போது இளநிலை உதவியாளர் முனியப்பன் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரம்யா ராஜா அவரிடம் ஏன்? இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக நகரமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்து, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

    இதையடுத்து நகராட்சி ஆணையர் இல்லாதபோது அவரது அறைக்கு முனியப்பனை வரவழைத்து, அங்கிருந்த நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் முனியப்பனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.

    முனியப்பனை ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க கூறியபோது, மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.

    மன்னிப்பு கேட்டால் போதுமா? என்று கேட்டதால் முனியப்பன் தானாகவே சென்று ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதுள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பிட்ட கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
    • பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    2026 மார்ச் மாதத்திற்குள் சாத்தியமான ஒரு பெரிய நெருக்கடிக்குத் தயாராகும்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரான்ஸ் அரசு பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    போர்க்காலத்தில் காயமடையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதால், விழிப்புடன் இருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • பச்சிளம் குழந்தைகள் வலியால் அலறி துடித்தன.
    • காயம்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. மாநிலத்தின் மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளில் ஒன்றான இங்கு எலித்தொல்லை அதிகரித்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்தநிலையில் குழந்தைகள் நல வார்டில் புதிதாக பிறந்த 2 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தன.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது அந்த குழந்தைகளின் கை விரல்கள் மற்றும் காதுகளை அங்கு சுற்றித்திரிந்த எலிகள் கடித்து குதறின. இதனால் பச்சிளம் குழந்தைகள் வலியால் அலறி துடித்தன. காயம்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • அன்றாடம் பயன்படுத்தும் பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மாறுகின்றன.
    • குறைந்தவிலை கார்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படும்.

    புதுடெல்லி:

    தற்போது, ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது.

    சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.

    அதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 சதவீத வரிஅடுக்கில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி அடுக்குக்கும், 28 சதவீத வரிஅடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிஅடுக்குக்கும் மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனால், அன்றாடம் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும் என்று கருதப்படுகிறது.

    கடந்த மாதம் கூடிய மந்திரிகள் குழு, ஜி.எஸ்.டி. வரிஅடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் தெரிவித்தது. தனது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடக்கிறது. அதில், அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    ரூ.40 லட்சம் வரை மதிப்புடைய மின்சார வாகனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும் என்று மந்திரிகள் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க விரும்பும் மத்திய அரசு, மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.தான் விதிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தும் என்று தெரிகிறது.

    வரிகுறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீடு தரவேண்டும் என்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதுபற்றியும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    நெய், 20 லிட்டர் குடிநீர், காற்று செலுத்தப்படாத பானங்கள், தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள் ஆகியவை 12 சதவீத வரியில் இருந்து 5 சதவீத வரிக்கு மாற்றப்படும்.

    அன்றாடம் பயன்படுத்தும் பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மாறுகின்றன.

    சிலவகை டெலிவிஷன்கள், வாஷிங் மெஷின்கள், பிரிஜ்கள் ஆகியவை 28 சதவீத ஜி.எஸ்.டி.யில் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி.க்கு குறைக்கப்படும். எனவே, மேற்கண்ட பொருட்களின் விலை குறையும்.

    குறைந்தவிலை கார்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படும்.

    ஆனால், எஸ்.யு.வி. ரக கார்கள் மற்றும் சொகுசு கார்கள் மீது 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதனால் அவற்றின் விலை உயரும் என்று தெரிகிறது.

    ×