என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 14ஆம் தரவரிசையில் உள்ள பாம்ப்ரி ஜோடி, 4ஆம் தரவரிசையில் உள்ள ஜெர்மனி ஜோடியை வீழ்த்தியது.
- ஜெர்மனி ஜோடி கடந்த வருடம் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் உடன் இணைந்து விளையாடி வருகிறார்.
14ஆம் தரநிலை ஜோடியான பாம்ப்ரி- வீனஸ், தரநிலையில் 4ஆம் நிலை ஜோடியான ஜெர்மனியின் டிம் புட்ஸ்- கெவின் கிராவிட்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் பாம்ப்ரி ஜோடி 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி ஜோடி கடந்த அமெரிக்க ஓபனில் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
காலிறுதியில் நிகோலா மெக்டிக் (குரோசியா) - ராஜீ ராம் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது.
- ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை.
- நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.
நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தெருநாய்கள் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தீர்வு ரொம்ப சிம்பிள்-ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னன்னு தெரிந்தவர்கள், கழுதை எங்க காணோம் என்று எங்கேயாவது கவலைப்படுகிறார்களா?
கழுதைகள் எல்லாம் காணாமல் போய்டுச்சு? நமக்காக எவ்வளவு பொதி சுமைந்திருக்கு? இப்ப பார்க்கிறதே இல்லையே... கழுதைய காப்பத்தணும்னு யாராவது பேசுறாங்களா?. எல்லா உயிர்களையும் காப்பத்தணும்னு, எவ்வளவு முடியுமோ காப்பத்தணும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து என்றார்.
மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அதை பா.ஜ.க. விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை. நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான். நாளைக்கு அவர்கள் நல்லது செய்தால் சொல்லத்தான் போகிறோம் என்றார்.
- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் செங்கோட்டையன் அடிக்கடி சசிகலாவை சந்தித்துள்ளார்.
- செங்கோட்டையனுடனான சந்திப்புக்கு பின்னரே சசிகலா காட்டமான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார். இதனால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் கட்சியில் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
இதனால் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வருகிற 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் விலகும்பட்சத்தில் தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் விஜயின் த.வெ.க.வில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகளை ஒன்று திரட்ட செங்கோட்டையன் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் செங்கோட்டையன் அடிக்கடி அவரை சந்தித்துள்ளார். செங்கோட்டையனுடனான சந்திப்புக்கு பின்னரே சசிகலா காட்டமான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறியுள்ள செங்கோட்டையன், சந்திப்பின்போது அணிகள் இணைப்பு பற்றியே பேச வாய்ப்பு உள்ளது.
சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.விற்குள் கொண்டுவர செங்கோட்டையன் காய் நகர்த்துவதாகவும், சசிகலாவுடனான செங்கோட்டையனின் நெருக்கமே இ.பி.எஸ். கோபத்திற்கு காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.
சசிகலா - செங்கோட்டையன் சந்திப்பை அறிந்தே இ.பி.எஸ். புறக்கணித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- மாதம் ரூ.4,200 சம்பளத்தில் Proofreader வேலையை தொடங்கினேன்.
- வங்கியில் இருந்து FD மூலம் மாதம் 60,000 வட்டி கிடைக்கிறது.
பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் 10ம் வகுப்பு வரை தான் படித்திருந்தாலும், தனக்கு கிடைத்த குறைந்த வருமானத்தில் சிறுக சிறுக சேமித்து 1 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டி இருக்கிறார்.
ரூ.1 கோடி சேர்த்ததாக ரெட்டிட் தளத்தில் நபர் ஒருவர் பகிர்ந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அந்த பதிவில், "2000களில் மாதம் ரூ.4,200 சம்பளத்தில் Proofreader வேலையை தொடங்கினேன். 20 வருடங்களுக்கு பிறகு ஓய்வு பெறும் போது ரூ.63,000 சம்பளம் வாங்கினேன். இப்போது வங்கியில் ரூ.1.01 கோடி சேர்த்துள்ளேன். அதில் இருந்து எனக்கு வங்கியில் இருந்து FD மூலம் மாதம் 60,000 வட்டி கிடைக்கிறது. சரியான நிதி திட்டமிடலே இதற்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார்.
கடன் எதுவும் இல்லாமல் ரூ.1 கோடி சேர்த்த நபரின் பதிவு இணையத்தில் பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.
- ஐபிஎல் போட்டியில் விளையாடுவதில்லை என முடிவு எடுத்த நிழைலயில் ILT20 ஏலத்தில் பெயர் பதிவு செய்துள்ளார்.
- ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்லை என அறிவித்தார். இந்திய அணி, ஐபிஎல் போட்டியில் விளையாடாத வீரர் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் அஸ்வின் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி20 (சர்வதேச லீக் டி20 தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் வெளிநாடுகளில் நடைபெறும் லீக்கில் விளையாடுவது உறுதியானது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கிலும் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ டோட் க்ரீன்பெர்க், அஸ்வினுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வின் பிக் பாஷ் லீக்கில் விளையாட முன்வந்தால், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவது முதல் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஆவார்.
- இளம்பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது இணையதள வாசிகளிடையே பேசும்பொருளாகி உள்ளது.
- பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் அரசு வேலை இவருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு பெரும் சுமையாகவே தெரிந்துள்ளது.
அரசு வேலை என்பது பலருக்கும் லட்சியமாக உள்ளது. அந்த லட்சியத்திற்காக பாடுபடுபவர்கள் வெற்றியும் பெறுகிறார்கள், தோல்வியும் அடைகிறார்கள். தோல்வி அடைந்தாலும் விடாது அரசு வேலைக்காக அரும்பாடுபடுகிறார்கள்.
இந்த நிலையில், அரசு வங்கி வேலைக்காக அயராது படித்து, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வங்கியில் வேலைபார்த்த 29-வயது இளம்பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது இணையதள வாசிகளிடையே பேசும்பொருளாகி உள்ளது.
டெல்லியை சேர்ந்த 29 வயதான வாணி என்பவர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியை முடித்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மீரட் கிளையில் கடன்களை நிர்வகிக்கும் ஸ்கேல்-I அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் அரசு வேலை இவருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு பெரும் சுமையாகவே தெரிந்துள்ளது. இதனால் அவர் தனது வேலையை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 3 ஆண்டுகளில் நான் மிகவும் எரிச்சலூட்டுபவளாகவும், எளிதில் கோபப்படுபவளாகவும் மாறிவிட்டேன். பணத்தை விட மன அமைதியைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உணர்கிறேன். அதேநேரம் நான் இப்படிச் சொல்வதால் யாரும் வங்கிப் பணியில் சேர வேண்டாம் என நான் சொல்லவில்லை. எனது கதையை மட்டுமே நான் இங்கு பகிர்கிறேன் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் கலவையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், இதற்கு தைரியம் தேவை! எல்லோராலும் இதைச் செய்ய முடியாது. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள், மகிழ்ச்சியாக இருங்கள் என்றும், மற்றொருவர், இப்போதெல்லாம், எல்லோரும் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்து சமூக வலைத்தளத்தில் டிரெண்ட்டாக மாறுகிறார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு, என்னிடம் சில சேமிப்புகள் உள்ளன. மேலும் வேலையில் இருந்தபோது அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே நான் செலவிட்டேன். நான் எந்தக் கடனும் எடுக்கவில்லை, அதனால் எனக்கு EMI இல்லை. எனது மாதாந்திர செலவுகள் 5 ஆயிரத்திற்கும் குறைவு என வாணி பதில் அளித்துள்ளார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
- ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது.
திருச்சி:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று (செவ்வாய்க்கிழமை) 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.
மைசூருவில் இருந்து நேற்று நண்பகல் 12 மணி அளவில் சென்னை வருகை தந்த அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விருந்தளித்து உபசரித்தார்.
பின்னர் இன்று (புதன்கிழமை) காலை 9:30 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமான மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். தொடர்ந்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அதே ஹெலிகாப்டரில் மாலை 4 மணிக்கு திருச்சி கொள்ளிடம் யாத்திரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதையை அளிக்கப்படுகிறது.
அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோவிலுக்குள் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்கிறார். தொட ர்ந்து அவர் கோவில் வளாகத்தை சுற்றி பார்க்கிறார். மேலும் கோவிலில் உள்ள சிற்பங்களையும் அவர் பார்வையிடுகிறார்.
தரிசனம் முடிந்த உடன் அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மாலை 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
- வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் 219 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் நட்சத்திர வேகபந்து வீச்சாளராக திகழ்ந்தவர்கள் வாசிம் அக்ரம். இடது கை வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். இவருக்கு இணையான ஸ்விங் பவுலர் இல்லை எனலாம். அதேவேளையில் யார்க்கர் பந்துகளும் வீசுவதில் வல்லவர். இம்ரான் கான், வாசிம் அக்கரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியபோது, தலைசிறந்த வேகப்பந்து அணியாக திகழ்ந்தது.
தற்போதைய காலத்தில் பும்ரா போன்ற வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். அந்த காலத்து கிரிக்கெட் வீரர்களுடன் தற்போதைய வீரர்களை ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள். குறிப்பாக வாசிம் அக்ரம் உடன், பும்ராவை ஒப்பிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் 1990-களையும், தற்போதைய காலக்கட்டத்தை ஒப்பீடு செய்வது குறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:-
1990 மற்றும் இன்றைய காலக்கட்டத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது அர்த்தமற்றது. நான் இடது கை பழக்கம் உள்ளவனாக இருந்தபோது, பும்ரா வலது கை பழக்கம் உள்ளவர். சமூக ஊடகங்களில் மக்கள் வாதிடுவதை விரும்புகிறார்கள்.
இவ்வாறு வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். வாசிம் அக்ரம் 1985 ஆண்டு முதல் 2002ஆம் அண்டு வரை 17 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் 219 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பும்ரா 2018ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.
- சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.
- காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவீத நோயாளிகளுக்கு இன்புளூயன்சா A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே காணப்படுகிறார்க்ள்.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவீத நோயாளிகளுக்கு இன்புளூயன்சா A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது. வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அல்காரஸ் 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஜோகோவிச் 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தினார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 2ஆம் நிலை வீரரான அல்காரஸ், 10 நிலை வீரரான செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-4, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.
இந்திய நேரப்படி சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு காலிறுதியில் இருந்து வோண்ட்ரோசோவா விலகியதால் முதல் தரநிலை வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பெகுலா- சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
- நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கு விற்பனையானது.
- தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்று சவரனுக்கு 160 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் வரலாற்றில் புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,805-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800
01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640
31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960
30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960
29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
02-09-2025- ஒரு கிராம் ரூ.137
01-09-2025- ஒரு கிராம் ரூ.136
31-08-2025- ஒரு கிராம் ரூ.134
30-08-2025- ஒரு கிராம் ரூ.134
29-08-2025- ஒரு கிராம் ரூ.131
- ஆப்கானிஸ்தானின் செதிகுல்லா அடல், இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் விளாசினர்.
- ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் செதிகுல்லா அடல் 64 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 65 ரன்களும் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் பஹீம் அஷ்ஃரப் 4 விக்கெட் விழ்த்தினார்.
பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயுப் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சகிப்ஜதா பர்ஹான் 18 ரன்களில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பரூக்கி வீழ்த்தினார்.

அதன்பின் பஹர் ஜமான் (25), சர்மான் ஆகா (20) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், நூர் அகமது முகமது நபி ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
10ஆவது வீரராக களம் இறங்கிய ஹாரிஸ் ராஃப் அதிரடியாக விளையாடி, ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தினார். அவரால் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் (16 பந்தில் 4 சிக்கர்) எடுத்த போதிலும் பாகிஸ்தானால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதலாவதாக மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






