என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜனாதிபதி திரவுபதி முர்மு ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தரிசனம்- பக்தர்களுக்கு தடை
    X

    ஜனாதிபதி திரவுபதி முர்மு ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தரிசனம்- பக்தர்களுக்கு தடை

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
    • ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது.

    திருச்சி:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று (செவ்வாய்க்கிழமை) 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.

    மைசூருவில் இருந்து நேற்று நண்பகல் 12 மணி அளவில் சென்னை வருகை தந்த அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விருந்தளித்து உபசரித்தார்.

    பின்னர் இன்று (புதன்கிழமை) காலை 9:30 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமான மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். தொடர்ந்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அதே ஹெலிகாப்டரில் மாலை 4 மணிக்கு திருச்சி கொள்ளிடம் யாத்திரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதையை அளிக்கப்படுகிறது.

    அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோவிலுக்குள் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்கிறார். தொட ர்ந்து அவர் கோவில் வளாகத்தை சுற்றி பார்க்கிறார். மேலும் கோவிலில் உள்ள சிற்பங்களையும் அவர் பார்வையிடுகிறார்.

    தரிசனம் முடிந்த உடன் அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மாலை 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

    ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    Next Story
    ×