search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Councilor"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.
    • காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியில் மொத்தம் 46 ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் தினந்தோறும் காலை முதல் மதியம் வரை தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களில் பெரும்பாலானோர் கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட தொலைதூர இடங்களில் இருந்து வருகின்றனர். இதனால் காலை 6 மணிக்கே அவர்கள் வேலைக்காக வீட்டில் இருந்து புறப்படும் நிலை உள்ளது. இதன்காரணமாக பலர் காலை உணவை சமைத்து கொண்டு வரமுடியாமலும், பலர் சரிவர காலைஉணவு சாப்பிடாமலும் இருந்தனர்.

    இதனை அறிந்த 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கவீ. கணேசன் தூய்மை பணியாளர்களின் பசியை போக்க ஏற்பாடு செய்து உள்ளார். தூய்மை பணியா ளர்கள் 46 பேருக்கும் தினமும் இலவசமாக காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், வடை வழங்கப்படுகிறது. இதற்காக அவர் காலடிப்பேட்டையில் உள்ள தனது வார்டு கவுன்சிலர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் ஏற்பாடு செய்து உள்ளார். அருகில் உள்ள ஓட்டலில் இருந்து டிபன் கொண்டு வரப்படுகிறது. காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை காலை உணவை சாப்பிட 46 தூய்மை பணியாளர்களும் சுழற்சி முறையில் வந்து சாப்பிட்டு செல்கிறார்கள். காலை உணவுக்காக தினமும் ரூ.1800 செலவு செய்து வருகிறார்.

    மேலும் காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாலும் வழங்கப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கவுன்சிலர் கவீ. கணேசனிடம் கேட்ட போது, தொலைதூர இடங்களில் இருந்து வரும் தூய்மை பணியாளர்கள் காலை உணவு தயார் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதனால் பலர் காலை உணவு சாப்பிட முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கு காலை உணவைச் செய்யவோ, வாங்கவோ போதிய பணம் இல்லை.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை உணவாக இட்லி, பூரி, வடகறி, பொங்கல், வடை மற்றும் காபி போன்றவற்றை சொந்த செலவில் வழங்கி வருகிறேன். வார்டு அலுவலகத்தில் காலையில் டீ அல்லது காபி தயாரிப்பதற்காக அவர்களுக்கு கியாஸ் ஸ்டவ் மற்றும் டம்ளர் உள்ளது.

    ஒப்பந்ததாரர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு காலை உணவை வழங்குவதில்லை. தொழிலாளர்களுக்கு கட்டாயமாக காலை உணவை வழங்க வேண்டும், கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று நான் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசி உள்ளேன். தூய்மை பணியாளர்களின் பசியாற உணவு வழங்குவது மன நிறைவை தருகிறது என்றார்.

    • மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன
    • 11-வது வார்டில் தி.மு.க. நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத்பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தலைவராக மெஹரீபாபர்வீன், துணைத்தலைவராக அருள்வடிவு ஆகியோர் உள்ளனர்.

    இந்த நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் தி.மு.க. நகர செயலாளர் முகமதுயூனஸ் மனைவி ஜம்ரூத்பேகம் வார்டு உறுப்பினராக உள்ளார்.

    இவரது வார்டில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல், சீரான குடிநீர் விநியோகம், குடியிருப்புகளில் குப்பைகளை சேகரித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்க வில்லை என கூறப்படுகிறது. ஜம்ரூத்பேகம் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினார்.

    ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே 11-ம் வார்டில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஜம்ரூத்பேகம் வீட்டிற்கு சென்று குப்பைகளை அகற்ற வலியுறுத்தினர்.

    இதனால் வேதனை அடைந்த ஜம்ரூத்பேகம் மகன்களுடன் சேர்ந்து வார்டு பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்றுவது என்று முடிவு செய்தார். இதன்படி அவர் 11-வது வார்டுக்கு குடும்பத்துடன் சென்று அங்கு தேங்கி கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    மேட்டுப்பாளையம் வார்டு உறுப்பினர் நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில், மகன்களுடன் சேர்ந்து குப்பை அள்ளிய வீடியோ சமூகவலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    • கவுன்சிலர் சாந்தமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, 3 பேரும் கையில் கத்தியுடன் நின்றதை பார்த்த உடனே அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் வின்சென்ட் வெங்கடேசபுரத்தில் வசித்து வருபவர் சாந்தமூர்த்தி (வயது 35). இவர் குமாரசாமிபட்டி பகுதி தி.மு.க செயலாளராகவும், 14-வது டிவிசன் கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று இரவு 10 மணிக்கு 3 மர்ம நபர்கள் கத்தியுடன் வந்து, கதவை தட்டி உள்ளனர்.

    கவுன்சிலர் சாந்தமூர்த்தி வந்து யார் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் உங்களை பார்க்க வேண்டும், வெளியே வாருங்கள் என்றனர். ஆனால் கவுன்சிலர் சாந்தமூர்த்தி என்ன பிரச்சினையாக இருந்தாலும் காலையில் பேசி கொள்ளலாம் என தெரிவித்தார். உடனே அந்த மர்ம நபர்கள், வெளியே வாடா, உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறினர்.

    இதையடுத்து கவுன்சிலர் சாந்தமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, 3 பேரும் கையில் கத்தியுடன் நின்றதை பார்த்த உடனே அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். மேலும் அஸ்தம்பட்டி போலீசாருக்கு போன் செய்து இது பற்றி தெரிவித்தார்.

    இதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
    • உடனடியாக அதனை நிறைவேற்றி தரவேண்டும். இல்லையென்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் பாளை மண்டலத்திற்குட்பட்ட 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இந்திரா கருப்பு உடை அணிந்து திடீரென மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:-

    பெண்களுக்கு சமஉரிமை அளிக்கும் வகையில் நெல்லை மாநகராட்சியில் அதிக பெண் கவுன்சிலர்களை ஏற்படுத்தி கொடுத்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஆனால் எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே உடனடியாக அதனை நிறைவேற்றி தரவேண்டும். இல்லையென்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மேயர் சரவணன் கூறும்போது, மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    ×