என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிய கும்பலை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு
- அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பலில் 3 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்.
- 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர்(வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார்.
நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் செல்வசங்கர் வீடு உள்ள தெருவிற்கு வந்தது. பின்னர் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பெட்ரோல் குண்டுகளை அவர் வீட்டின் மீது வீசி விட்டு தப்பிச்சென்றது. இதில் மின்விசிறி, விளக்கு உள்ளிட்டவை சேதம் அடைந்தது.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பலில் 3 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர். இதனிடையே நெல்லை மாநகர பகுதியில் டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் அதே கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
மேலும் அந்த கும்பல் இந்த 2 சம்பவங்களை நிகழ்த்துவதற்கு முன்பாக ஏர்வாடி அருகே தளபதிசமுத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.20 ஆயிரத்தை பறித்துக்கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்ததையும், ஊழியரை தாக்கி விட்டு தப்பி சென்ற காட்சிகளும் சிக்கின.
இதன்மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் , அந்த கும்பல் டவுன் மேலநத்தம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ், பொன்னாக்குடியை சேர்ந்த கார்த்தி, முன்னீர்பள்ளத்தை சேர்ந்த இசக்கிமுத்து உள்பட 4 பேர் என்பது அடையாளம் தெரிந்தது.
இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 3 தனிப்படைகள், சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் ஆகியோர் தலைமையில் தலா 1 தனிப்படையும், நெல்லை மாநகரில் துணை போலீஸ் கமிஷனர் கீதா மேற்பார்வையில் 2 தனிப்படையும் என மொத்தம் 7 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த கும்பல் நேற்று காலையிலேயே சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து ரெயில் மூலமாக தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளிமாநிலத்திற்கு சென்றார்களா? அல்லது சென்னை, மதுரை எங்கேனும் தப்பிச்சென்றார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த கும்பலிடம் செல்போன் இல்லை. அவர்கள் 4 பேரும் மோடத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலமாகவே தொடர்பில் இருந்துள்ளனர். இதனால் அவர்களை செல்போன் சிக்னல் மூலமாக பிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர்களது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.






