என் மலர்
நீங்கள் தேடியது "திமுக கவுன்சிலர்"
- திருநின்றவூர் நகரச் செயலாளர் தீவை.ரவி மற்றும் அவரது மனைவி நகரமன்ற தலைவர் உஷாராணி ஆகியோர் 10 லட்சம் லஞ்சம் கேட்டு வீட்டுமனை பிரிவிற்கு அனுமதி வழங்க மறுப்பதாக புகார்
- நகராட்சி மன்ற தலைவர் அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், நகராட்சியில் உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் அதிமுக கவுன்சிலருக்கே வழங்கி வருவதாக குற்றச்சாட்டு
திருநின்றவூர் நகராட்சி 27 வது வார்டில் 78 சென்ட் நிலத்தில் வீட்டுமனை பிரிவு அமைந்து வருகிறது. இந்த இடத்தில் வீட்டுமனைப் பிரிவு அமைப்பதற்கான அனுமதியை கடந்தாண்டு CMDA வழங்கிய நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற திமுக நகர இலக்கிய அணி அமைப்பாளராக இருக்கும் BLR யோகானந்தம் என்பவர் திருநின்றவூர் நகராட்சியில் மனு அளித்துள்ளார். இந்த மனு பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருநின்றவூர் நகராட்சியில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் நகரமன்ற தலைவர் உஷாராணி தலைமையில் ஆணையர் ஜீவிதா உள்ளிட்ட அதிகாரிகளும், 20க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். அப்போது வீட்டு மனை அமைக்கும் திமுக நிர்வாகி யோகனந்தம் மனைவியும், 6 வது வார்டு கவுன்சிலருமான தேவி, வீட்டுமனைக்கு அனுமதி வழங்க நகரமன்ற தலைவர் உஷாராணி மற்றும் ஆணையர் ஜீவிதா ஆகியோர் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்பதாக மன்ற கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.

திருநின்றவூர் நகர மன்ற தலைவர் உஷாராணி
அதேபோல் அவரது கணவரும் மன்ற கூட்டத்தின் வாசலில் நின்று திருநின்றவூர் நகரச் செயலாளர் தீவை.ரவி மற்றும் அவரது மனைவி நகரமன்ற தலைவர் உஷாராணி ஆகியோர் 10 லட்சம் லஞ்சம் கேட்டு வீட்டுமனை பிரிவிற்கு அனுமதி வழங்க மறுப்பதாக புகார் தெரிவித்தார். இதேபோல் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்களும் நகரமன்ற தலைவர், நகராட்சி ஆணையரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் நகரமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்த திமுக கவுன்சிலர்கள் சிலர் கூட்டாக வெளி நடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர்கள், வீட்டுமனை அனுமதி பெற நகர மன்ற தலைவர், ஆணையர் உள்ளிட்டோர் லஞ்சம் கேட்பதாகவும், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் அலைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு முன்பு இருந்த ஆணையர் கீர்த்தனா கோப்புகளை ஒளித்து வைத்ததாகவும், தற்போது உள்ள ஆணையரும் லஞ்ச பணத்திற்காக அலைக்கழித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் நகராட்சி மன்ற தலைவர் அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், நகராட்சியில் உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் அதிமுக கவுன்சிலருக்கே வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர். நகராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்தவர் இருந்தும், திமுக கவுன்சிலர்களுக்கே இந்த நிலைமை என்றும், இதுதொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.






