search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இட்லி, தோசை, பொங்கல், வடையுடன் கவனிப்பு- துப்புரவு பணியாளர்களுக்கு தினமும் உணவு வழங்கும் கவுன்சிலர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இட்லி, தோசை, பொங்கல், வடையுடன் கவனிப்பு- துப்புரவு பணியாளர்களுக்கு தினமும் உணவு வழங்கும் கவுன்சிலர்

    • தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.
    • காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியில் மொத்தம் 46 ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் தினந்தோறும் காலை முதல் மதியம் வரை தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களில் பெரும்பாலானோர் கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட தொலைதூர இடங்களில் இருந்து வருகின்றனர். இதனால் காலை 6 மணிக்கே அவர்கள் வேலைக்காக வீட்டில் இருந்து புறப்படும் நிலை உள்ளது. இதன்காரணமாக பலர் காலை உணவை சமைத்து கொண்டு வரமுடியாமலும், பலர் சரிவர காலைஉணவு சாப்பிடாமலும் இருந்தனர்.

    இதனை அறிந்த 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கவீ. கணேசன் தூய்மை பணியாளர்களின் பசியை போக்க ஏற்பாடு செய்து உள்ளார். தூய்மை பணியா ளர்கள் 46 பேருக்கும் தினமும் இலவசமாக காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், வடை வழங்கப்படுகிறது. இதற்காக அவர் காலடிப்பேட்டையில் உள்ள தனது வார்டு கவுன்சிலர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் ஏற்பாடு செய்து உள்ளார். அருகில் உள்ள ஓட்டலில் இருந்து டிபன் கொண்டு வரப்படுகிறது. காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை காலை உணவை சாப்பிட 46 தூய்மை பணியாளர்களும் சுழற்சி முறையில் வந்து சாப்பிட்டு செல்கிறார்கள். காலை உணவுக்காக தினமும் ரூ.1800 செலவு செய்து வருகிறார்.

    மேலும் காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாலும் வழங்கப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கவுன்சிலர் கவீ. கணேசனிடம் கேட்ட போது, தொலைதூர இடங்களில் இருந்து வரும் தூய்மை பணியாளர்கள் காலை உணவு தயார் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதனால் பலர் காலை உணவு சாப்பிட முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கு காலை உணவைச் செய்யவோ, வாங்கவோ போதிய பணம் இல்லை.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை உணவாக இட்லி, பூரி, வடகறி, பொங்கல், வடை மற்றும் காபி போன்றவற்றை சொந்த செலவில் வழங்கி வருகிறேன். வார்டு அலுவலகத்தில் காலையில் டீ அல்லது காபி தயாரிப்பதற்காக அவர்களுக்கு கியாஸ் ஸ்டவ் மற்றும் டம்ளர் உள்ளது.

    ஒப்பந்ததாரர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு காலை உணவை வழங்குவதில்லை. தொழிலாளர்களுக்கு கட்டாயமாக காலை உணவை வழங்க வேண்டும், கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று நான் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசி உள்ளேன். தூய்மை பணியாளர்களின் பசியாற உணவு வழங்குவது மன நிறைவை தருகிறது என்றார்.

    Next Story
    ×