என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள்.
    • தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    த.வெ.க. தலைவர் விஜய், "அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்பதை ஏதோ அவர் மிகப்பெரிய தியாகம் செய்வதைப் போல ஊடகங்களும் அதை பெரிது படுத்தியுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பல்லாண்டு காலம் முதலமைச்சராக இருந்த தோழர். இ.எம்.எஸ், தோழர் ஜோதி பாசு, தோழர் நிரூபன் சக்கரவர்த்தி, தோழர் தசரத் தேவ், தோழர் இ.கே. நாயனார், தோழர். மாணிக் சர்க்கார், தோழர் புத்ததேவ் பட்டாச்சாரியா, தோழர் வி.எஸ் அச்சுதானந்தன் இவர்கள் அனைவரும் அரசியலில் 60, 70 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள். அது மட்டுமல்லாமல் தோழர் இ.எம்.எஸ், தோழர் பி.சுந்தரைய்யா, தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித் இவர்கள் அனைவரும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தலைவர்கள் மட்டுமல்ல, அடிப்படைக் கட்சி உறுப்பினர்கள் கூட தங்களுடைய சொத்துக்களை மக்கள் பயன்பாட்டுக்காக கட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வது தான் கம்யூனிஸ்டுகளின் அரசியல். பணம் சம்பாதிக்காமல் இருப்பதல்ல! வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய். அதிலும் மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் என்று கூறியுள்ளார். 

    • இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    • பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா அனுமதித்ததற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஒவைசி கடுமையாக விமர்சித்தார்.

    இதுகுறித்து பேசிய ஒவைசி, "அசாம் முதல்வர், உத்தரபிரதேச முதல்வர் மற்றும் அவர்கள் அனைவருக்கும் எனது கேள்வி என்னவென்றால், பஹல்காமில் நமது 26 குடிமக்களின் மதத்தைக் கேட்டு அவர்களைச் சுட்டுக் கொன்ற பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியை விளையாட மறுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா?

    26 உயிர்களை விட பணம் மதிப்புமிக்கதா? நேற்றும் அந்த 26 குடிமக்களுடன் நாங்கள் நின்றோம், இன்றும் அவர்களுடன் நிற்கிறோம், நாளையும் அவர்களுடன் நிற்போம்" என்று தெரிவித்தார்.

    • 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியை விட நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நெல்கொள்முதல் அதிகம்.
    • ஓசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரும் வரை வழிநெடுக ஏராளமான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    * மக்களின் அன்பால் நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் வர இயலாமல் போனது.

    * தி.மு.க. ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

    * தி.மு.க. ஆட்சியில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * மக்களை தேடி மருத்துவம் திட்டம் கிருஷ்ணகிரியில் தான் தொடங்கப்பட்டது.

    * 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியை விட நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நெல்கொள்முதல் அதிகம்.

    * ஊரக பகுதிகள் போல் நகரப் பகுதிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது தி.மு.க. ஆட்சியில் தான்.

    * ஓசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.

    * கெலமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

    * கெலமங்கலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும்.

    * ஓசூரில் எல்சி 104 ரெயில்வே கேட் பகுதியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

    * ஓரில் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

    * தி.மு.க. ஆட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகின்றனர்.

    * சொல்லாத வாக்குறுதிகள் பலவற்றை தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியுள்ளது.

    * தி.மு.க. ஆட்சி மீது வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்புகின்றனர்.

    * மலிவான அரசியல் செய்யும் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். 

    • கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடைக்கு முதலமைச்சர் வந்தார்.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கிருஷ்ணகிரி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக காலை ஓசூர் தனேஜா விமான ஓடு தளத்தை வந்தடைந்து அங்கிருந்து கார் மூலமாக கிருஷ்ணகிரிக்கு வந்தார்.

    அங்கு சுங்கச்சாவடி அருகில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணா சிலை, பெங்களூரு சாலை, 5 ரோடு, சென்னை பை-பாஸ் சாலை வரையில் முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது. அப்போது பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அவர் பெற்று கொண்டார்.

    இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடைக்கு முதலமைச்சர் வந்தார். அங்கு காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    அங்கு நடைபெற்ற அரசு விழாவில் கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,885 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    விழாவில் மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசினார்.

    • 2017-ம் ஆண்டு 65 லட்சம் மக்கள் ஜி.எஸ்.டி.யில் இணைந்தார்கள்.
    • தற்போது 1.51 கோடி மக்கள் ஜி.எஸ்.டி.யில் உள்ளார்கள்.

    ராயப்பேட்டை:

    சென்னை ராயப்பேட்டையில் ஜி.எஸ்.டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    * ஜி.எஸ்.டி. மூலம் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்துள்ளது.

    * ஒட்டுமொத்தமாக 22.08 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிற்கு ஜி.எஸ்.டி மூலம் வருமானம் கிடைத்துள்ளது.

    * 2017-ம் ஆண்டு 65 லட்சம் மக்கள் ஜி.எஸ்.டி.யில் இணைந்தார்கள். தற்போது 1.51 கோடி மக்கள் ஜி.எஸ்.டி.யில் உள்ளார்கள்.

    * மாநிலங்கள் சேர்ந்துதான் ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    • நேட்டோ நாடுகள் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கவேண்டும்
    • வரி மற்றும் பொருளாதார தடைகள் விதிப்பது பிரச்சனையை இன்னும் சிக்கலாக தான் மாற்றும்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா, சீனாவுக்கு டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இரண்டு நாடுகளும் டிரம்ப் மிரட்டலுக்க செவி சாய்க்கவில்லை. இதனால் இந்திய பொருட்களுக்கு எதிராக 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தினார். அதேவேளையில் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்காமல் இருந்தார்.

    ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் நேட்டோ நாடுகள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ நாடுகள் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் டிரம்புக்கு சீனா பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியதாவது:-

    சீனா ஒரு பொறுப்பான பெரிய நாடு. அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் சிறந்த சாதனையைக் கொண்ட நாடு ஆகும். போரால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. வரி மற்றும் பொருளாதார தடைகள் விதிப்பது பிரச்சனையை இன்னும் சிக்கலாக தான் மாற்றும். சீனா போர்களில் பங்கேற்கவோ அல்லது திட்டமிடவோ இல்லை. அமைதிப் பேச்சு வார்த்தைகளை ஊக்குவிப்பதும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை காண்பதும் சீனாவின் நோக்கமாகும் என்றார்.

    • அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
    • வரும் 17,18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

    எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை ஒட்டி வரும் 17,18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    • அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது.
    • பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்" எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

    இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.

    வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் என பதிவிட்டுள்ளார். 



    • இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
    • ஜூலியா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் ஜாஸ்மின் லம்போரியா ஆவர்.

    பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் (பெதர் வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார்.

    அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) வீழ்த்தினார். ஜூலியா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் ஆவர்.

    உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட் டம் வென்ற 9-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பெற்றார். மேரி கோம் (6 தடவை), நிகாத் ஜரீன் (2 முறை), சரிதா தேவி, ஜென்னி, லேகா, நிது கங்காஸ், லவ் லினா போர்க்கோஹெய்ன் சவிதா புரா (தலா 1 தடவை) ஆகியோர் ஏற்கனவே உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று இருந்தனர்.

    தனது 3-வது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 24 வயதான ஜாஸ்மின் தங்கம் வென்று சாதித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனை நுபுர் ஷியோரனுக்கு (80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் அகதா காஸ்மார்ஸ்கா விடம் 2-3 என்ற கணக்கில் தோற்று இருந்தார்.

    மற்றொரு இந்திய வீராங்கனை பூஜாவுக்கு (80 கிலோ பிரிவு) வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அவர் அரை இறுதியில் எமிலி அஸ்கித்திடம் (இங்கிலாந்து) 1-4 என்ற கணக்கில் தோற்று இருந்தார்.

    • ரஜினி, அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்.
    • நான் இப்போது போதிப்பது உங்களுக்கு புரியாது, பாதிக்கும்போது உங்களுக்கு தெரியும்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும்.

    * ரஜினி, அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும்.

    * நான் இப்போது போதிப்பது உங்களுக்கு புரியாது, பாதிக்கும்போது உங்களுக்கு தெரியும்.

    * நான் இப்போது பேசுவது உங்களுக்கு வேடிக்கையாகத்தான் தெரியும்.

    * உங்கள் பிள்ளைகளுக்கு மலையை வெட்டி, மணலாக்கி, கல்லாக்கி, பெரிய வீட்டை வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை என் பிள்ளைகளுக்கு வாழறதுக்காக வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறேன்.

    * நீங்க காசை சேர்த்துவைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறீங்க. நான் சுவாசிக்க நல்ல காற்றை வைத்துவிட்டு சாகணும்னு நினைக்கிறேன்.

    * கனிம கொள்ளையை தடுக்க ஒரே வழி என்னை அதிகாரத்தில் அமர வைப்பதுதான். வேறு வழியே கிடையாது

    * கனிம கொள்ளை குறித்து என்கிட்ட கேட்குறீங்க.. நேற்று ரொம்ப கூட்டம் வந்ததுல அவர் கிட்ட கேட்க வேண்டியதுதானே என்றார்.

    அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    2019-ம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியானது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இதைத்தொடர்ந்து அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தண்டகாரண்யம் என்றால் ராமாயண இதிகாசத்தில் உள்ள காட்டின் பெயராகும். இப்படம் பயங்கரவாதத்தையும், காவல் அதிகாரிகள் மற்றும் காட்டை சம்மந்தப்பட்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    ×