என் மலர்
இந்தியா

IND Vs Pak போட்டி: 26 உயிர்களை விட பணம் மதிப்புமிக்கதா? - பாஜக அரசுக்கு ஒவைசி கண்டனம்
- இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா அனுமதித்ததற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு ஒவைசி கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து பேசிய ஒவைசி, "அசாம் முதல்வர், உத்தரபிரதேச முதல்வர் மற்றும் அவர்கள் அனைவருக்கும் எனது கேள்வி என்னவென்றால், பஹல்காமில் நமது 26 குடிமக்களின் மதத்தைக் கேட்டு அவர்களைச் சுட்டுக் கொன்ற பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியை விளையாட மறுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா?
26 உயிர்களை விட பணம் மதிப்புமிக்கதா? நேற்றும் அந்த 26 குடிமக்களுடன் நாங்கள் நின்றோம், இன்றும் அவர்களுடன் நிற்கிறோம், நாளையும் அவர்களுடன் நிற்போம்" என்று தெரிவித்தார்.






