என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு.
    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

    தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், கூடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் 13ம் தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க இணைந்துள்ளது.
    • த.வெ.க. நிர்வாகிகள் ஜி.கே.மணி மகன் மூலம் ராமதாஸ் தரப்பிடம் பேச்சு

    தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இதனால் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் தற்போது அன்புமணி தலைமையிலான பா.ம.க.வும் இணைந்துள்ளது.

    ஆனால் ராமதாஸ், அந்த கூட்டணி செல்லாது. சட்டரீதியாகவும் இந்த கூட்டணி செல்லாது. என்னுடன் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என சமீபத்தில் நிரூபர்களிடம் கூறி இருந்தார். மேலும் பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. தைலாபுரத்திலிருந்து தைலமும் சென்றுவிட்டது என சூசகமாக தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது போல் தெரிவித்திருந்தார். அதேபோல தமிழக வெற்றிக் கழக முக்கிய நிர்வாகிகளும் ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் மூலமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த பரபரப்பான நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இருந்து இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னைக்கு புறப்படுகிறார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை முடித்த பிறகு நாளை காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க திட்டம்
    • இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும்.

    சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் - வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் இன்று முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

    பூந்தமல்லி- போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது .

    பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது

    இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதியிலிருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • காங்கிரஸ் கட்சி கரைந்து வரும் கட்சி.
    • தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடையும்.

    தமிழக பா.ஜ.க துணை தலைவர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    நாட்டின் ஆத்மாவாக இருப்பவர் மகாத்மா என்பதை எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் கட்சி அரசின் திட்டங்களுக்கு சோனியா குடும்ப பெயரை மட்டுமே சூட்டி பெருமைப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி எந்த திட்டமாக இருந்தாலும் சரி, பிரதம மந்திரி திட்டம் என்றுதான் அறிவித்து வருகிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தையும் 125 நாட்களாக அதிகரித்து உள்ளார்.

    அதைப்பற்றி எல்லாம் காங்கிரஸ்காரர்கள் பேச மாட்டார்கள். நாட்டுக்காக உழைத்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், வ.உ.சிதம்பரனார் என்று பலரை சொல்லலாம். அவர்களின் பெயர்களை எல்லாம் வைக்க சொல்லி போராடலாமே.

    இது மக்களை ஏமாற்றுவதற்காக காங்கிரஸ் நடத்தும் போராட்டம். நாட்டில் இப்போது மக்கள் விரும்பாத கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது.

    எனவே அவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது தான் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியது. மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இன்று நாடு அமைதியாக இருக்கிறது. உலகம் முழுவதும் இந்தியாவுக்கு மோடி பெருமை சேர்த்து உள்ளார்.

    காங்கிரஸ் கட்சி கரைந்து வரும் கட்சி. இப்போது கூடுதல் தொகுதிகள் கேட்பதாக தகவல்கள் வருகிறது. அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் ஜெயிப்போம் என்று சொல்ல முடியுமா? தேர்தல் நேரத்தில்தான் தி.மு.க. மக்களைப் பற்றி யோசிப்பது போல் பாசாங்கு காட்டுவார்கள்.

    ஆசிரியர்கள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், அரசு ஊழி யர்கள் போராட்டம், டாக்டர்கள் போராட்டம் என்று பலரும் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் இதுவரை யோசிக்காத தி.மு.க. தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறது.

    தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும் பங்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குகின்ற னர். ஆனால் இப்போது தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் அவர்களைப் பற்றி யோசிப்பது போல் வெளிக் காட்டுவதற்காக பணத்தை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

    ஆனால் இந்த முறை மக்கள் ஏமாறமாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடையும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன், ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும்.
    • நான் விஜய்யின் ரசிகையாக, எல்லா படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறேன்.

    விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் விஜய் இதுகுறித்து இதுவரை வாய்திறந்து பேசவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக நிர்வாகி கஸ்தூரி, "தணிக்கை துறை ஜன நாயகன் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி இருப்பதில் யாரும் தலையிட முடியாது.

    விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன், ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும். இதனை சென்சாரிலேயே முடித்திருந்தால், இன்று திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும். நான் விஜய்யின் ரசிகையாக, எல்லா படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறேன். இப்போது அவர் அமைதியாக இருக்கிறார்.

    இவரை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா? இல்லை செயலிழந்தவராக பார்ப்பதா? பாராலிஸ் வந்தவர் போல இருக்கிறார். யார் இறந்தாலும் பேசுவதில்லை. 41 பேர் இறந்த பிறகு, நான்கு நாள் கழித்து யோசித்து பேசுகிறார். அவர் படத்துக்கு ஒரு பிரச்னை வந்தாலும் பேசாமல் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

    • கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்து இருப்பது கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்துள்ளது.
    • சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் கொண்டாடி வருகிறார்.

    கோவையில் இன்று நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    நம்முடைய பண்டிகைகள் பாரத நாட்டின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வு ஆகும். முதன்முறையாக நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எந்த விதமான இந்துக்களின் பண்டிகைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில்லை.

    பொங்கல் பண்டிகையின்போது மட்டும் சமத்துவ பொங்கல் என்ற ஒன்றை கொண்டாடுகிறார். அனைத்து பானைகளிலும் பஞ்சை வைத்து சிறுபான்மையினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் கொண்டாடி வருகிறார்.

    சிறுபான்மையின மக்கள் அவர்களது மதப் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் தமிழகத்திலேயே இல்லாத ஒன்றாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாதவர்களுடன் சேர்ந்து இந்து மக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.

    பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார். அதன்பின்னர் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும். கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்து இருப்பது கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    த.வெ.க. தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்காக கூடுதல் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு வழக்கமாக பாதுகாப்பு கேட்பது என்பது ஒரு நடைமுறை. ஆனால் நிச்சயமாக கரூரை விட நல்ல பாதுகாப்பு டெல்லியில் வழங்கப்படும் என வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

    • தமிழ் மொழி மட்டுமே அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பாலம்.
    • ஒன்றாக இணையாத எந்த இனமும் உலகில் வென்றதாக வரலாறு கிடையாது

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'அயலக தமிழர் தினம்' கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தார்.

    உணவு, கலாச்சாரம், வணிகம், கைவினைப் பொருட்கள் மற்றும் தமிழ் இலக்கியம் சார்ந்த 252 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    எப்போதுமே தூரம் அதிகமாகும்போது, உறவும் பாசமும் இன்னும் அதிக மாகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இன்று உலகின் பல நாடுகளில் இருந்து வாழுகின்ற நீங்கள் தமிழ் உணர்வோடு தமிழ் பற்றோடு தமிழ்நாட்டின் மீது இருக்க கூடிய பாசத் தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நீங்கள் அத்தனை பேரும் வருகை தந்துள்ளீர்கள்.

    வெளிநாடுகளில் நீங்கள் பல விதமான விழாக்களை பார்த்திருப்பீர்கள். கொண் டாடியிருப்பீர்கள். ஆனால் இது எதுவும் நம்முடைய தமிழர் திருநாள் பொங்கலுக்கு ஈடாகாது.

    ஏனென்றால் பொங்கல் என்பது நம்முடைய தமிழ் பண்பாட்டோடு தமிழ் உணர்வோடு கொண்டாடப்படுகின்ற ஒரு விழா. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகை நேரத்தில் அயலக தமிழக உறவுகள் உங்கள் அத்தனை பேரையும் சந்திப்பது என்னுடைய சொந்த சகோதரர்கள், சகோதரிகள் என் குடும்பத்தினரை சந்திக்கின்ற அந்த மகிழ்ச்சியை எனக்கு தருகின்றது.

    அயலகத் தமிழர் தினத்தை நம் திராவிட மாடல் அரசு ஏற்பாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதில் நான் தவறாமல் கலந்து வருகிறேன்.

    இந்த நிகழ்ச்சியின் இந்த ஆண்டுக்கான தலைப்பு 'தமிழால் இணைவோம்... தரணியில் உயர்வோம்...' என்ற மிகச் சிறப்பான தலைப்பு வைக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

    தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது. யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம் தாய்மொழி தமிழ்மொழி.

    தமிழ் என்ற அடையாளத்துக்கு முன்னாடி வேறு எந்த அடையாளமும் போட்டி போட முடியாது.

    ஜாதி, மதம், பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, ஆண், பெண் என்று எல்லா பேதங்களையும் தாண்டிதான் நம் அத்தனை பேரையும் இணைத்திருப்பது நம்முடைய தாய்மொழி, தமிழ்மொழி.

    அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்தால்தான் இன்றைக்கு தரணியை வென்று கொண்டிருக்கிறோம். ஒன்றாக இணையாத எந்த இனமும், உலகில் உயர்ந்த வரலாறே கிடையாது.

    அந்த வகையில் உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைக்கக் கூடிய அந்த பணி என்பது மிக மிக முக்கியமானது. இந்த நேரத்தில் மிக அவசியமானது.

    அதைவிட முக்கியம் அவர்களது நலன்களை பாதுகாக்கின்ற இந்த பணி என்பது மிக முக்கியம். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காகதான் சின்ன சின்ன வேலைகளை செய்ய நிறைய பேர் வெளி நாடு போவார்கள். அங்கு செட்டில் ஆவார்கள். ஆனால் இன்றைக்கு தமிழ் நாட்டில் இருந்து என்ஜினீ யர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று செட்டில் ஆகியிருக்கிறீர்கள்.

    தொழிலாளியாக சென்ற காலத்தில் குடும்பத்தை இங்குவிட்டு விட்டு தனியாக அங்கு சென்றிருப்பீர்கள். இப்போது குடும்பத்தையும் அழைத்துச் சென்று அங்கேயே தங்குகிற அளவுக்கு பெரிய வேலைகளில் இருக்கிறீர்கள்.

    இந்த வளர்ச்சி என்பது தானாக நடந்த வளர்ச்சி அல்ல. இந்த முன்னேற்றத்துக்கு பெயர்தான் திராவிட மாடல் இப்படி குடும்பத்தோடு வெளிநாட்டில் வசிக்கும் போதுதான் தமிழ்நாட்டில் இருந்து இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகள் நமக்குள் உருவாகும். அதை உணர்ந்துதான் நமது முதலமைச்சர் அயலக தமிழர் நல வாரியத்தை முதன் முதலில் தொடங்கி வைத் தார். இதில் இன்று 32 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக இருக்கிறீர்கள்.

    இதன் மூலம் அயலக தமி ழர்களுக்கு பல்வேறு முன்னெடுப்புகளை முதல்மைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

    உக்ரைன், ஈரான், இஸ் ரேல் போன்ற நாடுகளில் போர் நடந்தபோது அங்கிருந்த தமிழர்களை பாதுகாப்பாக நம்முடைய துறைதான் மீட்டு வந்தது.

    வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ஏதாவது சிக்கல் என்றால் அதற்கு தீர்வுகாண இந்த துறை எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு போகும்போது அங்குள்ள தமிழர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இங்கு தொழில் முதலீடு செய்ய வேண்டுகோள் வைக்கிறார்.

    அதன் தொடர்ச்சியாக உங்களது முயற்சியின் காரணமாக இன்றைக்கு நம்பர்-1 பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. அந்த சாதனையில் உங்களது பங்கு மிகப்பெரியது.

    நம் அரசின் சார்பில் 'உங்க கனவ சொல்லுங்க' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். மக்களின் கனவுகளை கேட்டு அறியும் இந்த நிகழ்ச்சி போல், அயலக தமிழர்களும் உங்க கனவுகளை இந்த வாரி யத்தின் பொறுப்பாளர்க ளிடம், அமைச்சர் நாசரிடம் தெரியப்படுத்துங்கள்.

    உங்களது தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்ற திட்டங்களை நமது முதலமைச்சர் நிச்சயம் தீட்டி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், துரைமுருகன், தா.மோ. அன்பரசன், ஆவடி நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
    • தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் தெரிவிப்பு

    மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னையின் பெருமையாகவும், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தரும் முக்கிய சுற்றுலாதலமாகவும் விளங்கும் மெரினா கடற்கரை, சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழ்கிறது. மெரினா கடற்கரையை சர்வதேசதரத்தில் மேம்படுத்தி பாதுகாத்திட பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மெரினா கடற்கரையை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 (Solid Waste Management Rules, 2016)ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக, மெரினா கடற்கரையின் தூய்மையை உறுதி செய்வதற்காக Chennai Enviro Solutions Pvt. Ltd (SPV) என்ற தனியார் நிறுவனம் மூலம் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் 7 இயந்திரங்கள் (Beach Cleaning Machines) மற்றும் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 274 தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளிலிருந்து மட்டும் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது.

    மேலும், பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 53 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், பொதுமக்களின் போதியஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால், கடற்கரையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் காணப்படுவதால் அழகற்றதாகவும், சுகாதார குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. குறிப்பாக, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடாமல், திறந்த வெளிகளில் வீசப்படுகிறது.

    இதன் காரணமாக சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையின் அழகும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதோடு, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சென்னை நகரின் நற்பெயருக்கும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

    எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளுக்கு பெருமளவில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் போது, அனைவரும் பொறுப்புனர்வோடு குப்பை கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மை பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதனை மீறி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் படி ரூ.5,000/– அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும் இதன்மூலம் கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. தூய்மையான கடற்கரை – சுகாதாரமான சென்னை – அனைவரின் பொறுப்பு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
    • புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக வரும் போகிப் பண்டிகையின்போது பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தெருக்களில் போட்டு எரிப்பது வழக்கமாக உள்ளது.

    இதைப்போல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல் பஜார், பொழிச்சலூர், பம்மல் அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், போகிப் பண்டிகையையொட்டி பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை தெருக்களில் போட்டு, அதிகாலையில் எரிப்பதால், கடுமையான புகைமூட்டங்கள் ஏற்பட்டு, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியை சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் பனிமூட்டமும் அதிகாலை நேரத்தில் இருப்பதால், ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

    பொதுமக்கள் போகிப் பண்டிகையின் போது அதிகாலை நேரத்தில், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள், அதிக அளவு புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்து விடுங்கள்.

    அவ்வாறு எரிப்பதால், அடர் மூடுபனியில், கரும் புகை கலந்து, விமான ஓடுபாதை தெரியாத அளவு, சூழ்ந்து கொள்கிறது. இதனால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படுவதோடு, விமான பயணிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    எனவே குடியிருப்பு பகுதி மக்கள் விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    போகிப்பண்டிகையின் போது பழையபொருட்களை எரித்ததால் கடந்த 2018-ம் ஆண்டு அதிகபட்சமாக 73 புறப்பாடு விமானங்கள், 45 வருகை விமானங்கள் என மொத்தம் 118 விமான சேவைகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டது .

    இதன் பின்னர் விழிப்புணர்வுகளால் போகிப்பண் கையின் போது பழைய பொருட்களை எரிப்பது குறைந்து விமான சேவைகள் பாதிக்கப்படுவது, படிப்படியாக குறைந்து வருகிறது.

    கடந்த 2024-ம் ஆண்டு, போகிப் பண்டிகை புகை மூட்டம் பனிமூட்டம் காரணமாக 51 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது இதைப்போன்ற பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி, இந்திய விமான நிலைய ஆணையம் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாலை 4 மணியில் இருந்து, காலை 8 மணி வரையில், சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் என சுமார் 30 வருகை, புறப்பாடு விமானங்கள் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது

    புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது

    இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் குணா குகை, துன்பாறை, மோயார் சதுக்கம், பேரிஜம் ஏரி, பைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்யப்படும் என்றும் நேரடிப் பணமாக இனி வசூலிக்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது

    • திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.

    விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு, வாக்குச்சாவடி மாநாடு என பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.

    • டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகிறார்.
    • டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக நாளை காலை 7 மணிக்கு தவெக தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 7 மணிக்கு விமானம் மூலமாக விஜய் டெல்லி புறப்படுகிறார்.

    கடந்த 6ம் தேதி சம்மன் அனுப்பிய நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகிறார்.

    மேலும், கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணைக்காக டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    தவெக தலைவர் விஜய் நாளை டெல்லி செல்லும் நிலையில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக தவெக கடிதம் எழுதியுள்ளது.

    தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு தவெக நிர்வாகி நிர்மல்குமார் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளது.

    ×