என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • திமுகவின் ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    • சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்

    பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள அவர், 

    'சனாதன பண்பாட்டிற்கு ஒரு மகத்தான, பெருமைமிக்க வரலாறு உள்ளது. அதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு உண்மையிலேயே ஒப்பற்றது. இந்தியாவின் ஆன்மா உலகத்திடம் உரையாடிய புண்ணிய பூமி. 1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைப் பாறையில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட தியானம், ஒரு ஆன்மிக சாதனை மட்டுமல்ல; அது இந்திய மறுமலர்ச்சியின் பிரகடனமாகும். இங்கிருந்தே அவர் தேசத்தின் எழுச்சிக்கான உறுதியை எடுத்துக் கொண்டு, சனாதன சிந்தனையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார்.

    இன்று பிரதமர் மோடியும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கி வருகிறார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள், நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது மூலம் தமிழர் பெருமையை நிலைநாட்டியது , திருக்குறளின் போதனைகளையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கருத்துகளையும் தேசிய சிந்தனையுடன் இணைப்பது ஆகியவற்றின் மூலம், தமிழின் பெருமை இமாலய உச்சத்தை எட்டியது.

    பிரதமர் தலைமையில், ராமர் கோயில், காசி விஸ்வநாதர் வழித்தடம், சோமநாத், மத்திய பிரதேசத்தின் மகாகால் லோக் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களின் மூலம், இந்தியா ஒரு முழுமையான மத-பண்பாட்டு மறுமலர்ச்சியை கண்டுள்ளது. இது பாரதத்தின் பண்டைய ஆன்மிக இறையான்மையும் தேசிய விழிப்புணர்வையும் மீட்டெடுப்பதில் ஒரு சகாப்தம் படைக்கும் தருணமாகும்.

    ஆனால் அதே சமயம், தமிழ்நாட்டின் இந்த மகத்தான பாரம்பரியம், திமுக ஆட்சியின் கீழ் அவமதிக்கப்படுகிறது. தமிழ் கடவுளான முருகனுக்கு தீபம் ஏற்றுதல் முதல் இந்து நம்பிக்கைகளை சிதைப்பது வரை, சனாதன வேள்விகள் தொடர்ந்து கேலி செய்யப்படுகின்றன. ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    ராமசேதுவை எதிர்த்ததன் மூலம் காங்கிரஸ் தன் வீழ்ச்சிக்கான விதைகளை விதைத்தது போல, கோயம்புத்தூரின் புனித மண்ணிலிருந்து நான் உறுதியாக கூறுகிறேன்—சனாதன மரபுகளை தொடர்ந்து இகழும் திமுகவின் அரசியல் வீழ்ச்சி இம்மண்ணிலிருந்து துவங்கும்.

    ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுபட்டு, நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி; வளர்ச்சி, பொறுப்புள்ள ஆட்சி, மற்றும் சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்..! வாழ்க தமிழ்நாடு..! வளர்க பாரதம்..! " எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • படத்திற்கான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றபின்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கவேண்டும்.
    • முழுக்க முழுக்க திமுகவைதானே குறைக்கூறினார்.

    சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜன நாயகன் தணிக்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

    "பராசக்தியை ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் ரிலீஸ் செய்துள்ளது. மத்திய அரசு தடைசெய்யவேண்டும் என்றால், ரெட் ஜெயண்ட் படத்திற்குத்தான் தடைவிதித்திருக்க வேண்டும். ஏனெனில் எங்களுக்கு எதிரி திமுகதான். ஜன நாயகன் குறித்து பேசுபவர்கள் மூளையில் இருக்கும் அறிவைப் பயன்படுத்தமாட்டார்களா? குழந்தை அழுதால்கூட மோடியை காரணம் கூறுபவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    படத்திற்கான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றபின்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கவேண்டும். அதுதான் அடிப்படை விதி. இது தயாரிப்பாளர்களின் தவறு. பின்னர் மத்திய தணிக்கை வாரியத்தை தவறு கூறாதீர்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விடுமுறை நாட்கள் இடையில் இருந்துள்ளன. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அவர்கள் 24 மணிநேரமும் உங்களுக்காக வேலைசெய்ய வேண்டுமா? ஒரு ரசிகையாக எனக்கும் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாதது குறித்து வருத்தம் உள்ளது. ஆனால் விதிமுறைகள் எப்பொழுதும் மாறாது. இது அனைத்து படங்களுக்கும் பொருந்தும். குறைக்கூறுவதற்கு முன் யோசியுங்கள். " என தெரிவித்தார். 

    தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு நாளை விஜய் ஆஜராவது குறித்த கேள்விக்கு, 

    கரூர் பிரச்சனை எழுந்தபோது முதலில் சிபிஐ விசாரணை கோரியது யார்? நாங்கள் கேட்டோமா? முதலில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டது விஜய்தான். அவர்மீது தவறு இல்லை இல்லையா? முழுக்க முழுக்க திமுகவைதானே குறைக்கூறினார். அவர் கேட்டார்; விசாரணை நடக்கிறது; அவர் ஆஜராகிவிட்டு வருவார். என தெரிவித்தார். 


    • கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு உரிமை இல்லை
    • அன்புமணி தனது தலைவர் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள மோசடி செய்துள்ளார்.

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், கட்சி மற்றும் அதன் தேர்தல் கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார.

    அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதும், கூட்டணி அமைத்ததும் சட்டவிரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது என தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவெடுக்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், அன்புமணிக்கு அந்த உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    அன்புமணி தனது தலைவர் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள மோசடி செய்துள்ளதாகவும், தற்போது பாமகவின் தலைவர் பதவியை தானே (ராமதாஸ்) ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பாமகவின் பெயர், கொடி அல்லது 'மாம்பழம்' சின்னத்தைப் பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    • ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்.
    • ஆர்.எஸ்.எஸ். போடும் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

    அகில இந்திய அளவில் நடைபெறும் ஏகலைவா பள்ளிகளில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான தேர்வு எழுதுவதில், தமிழ்ப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "ஏகலைவா பள்ளிகள் என்ற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள மலைவாழ் மாணவர்களுக்கென ஒன்றிய அரசு நடத்தும் ஏகலைவா மாடல் ரெசிடென்சியல் ஸ்கூல் (EMRS) – பள்ளிகள் தமிழ்நாட்டில் விழுப்புரம், சேலம், ஊட்டி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் செயல்படுகின்றன.

    தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளி...

    தமிழுக்கு இடமில்லை!

    கடந்த 19.09.2025 இல் மேல்நிலைப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கான தேர்வுகள் 13.12.2025,14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. தேர்வில் பகுதி-6 இல் மொழிகளுக்கான பகுதியில் ஆங்கிலம், அசாமி, வங்காளம், போடோ, டோகிரி, கரோ, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, காசி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிசோ, நேபாளி, ஒடிசா, சந்தலி, தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றன.

    உள்ளூர் மொழிகள் காலிப் பணியிடங்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு, தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் மொழிப் பட்டியலில், தமிழ் இல்லாத காரணத்தால் பகுதி-6 இல் ஆங்கிலத்தையே தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய இக்கட்டான சூழல் அமைந்தது. பகுதி 6-இன் 30 மதிப்பெண்களுக்கு 12 தகுதி மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய சூழலில், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் ஹிந்தியிலும், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் ஆங்கிலத்திலும் பதில் அளிக்க வேண்டும். அடுத்து உள்ள உள்ளூர் மொழி என்னும் பிரிவுக்கான 10 மதிப்பெண்களுக்கு என குறிக்கப்பட்டுள்ள மொழிகளில் தமிழ் இல்லாத காரணத்தால், அப் பிரிவிற்கும் ஆங்கிலத்தையே தேர்வு செய்து எழுத வேண்டிய கடுமையான நிலை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் நேர்ந்துள்ளது.

    40% மதிப்பெண்கள் கட்டாயமாம்!

    அனைத்திந்தியத் தேர்வுகள் எதிலும், இந்தியக் குடிமக்களாகப் பங்கேற்றுப் பணியில் தேர்வடைய எல்லோருக்கும் உரிமை உண்டு - தமிழர்களுக்கும் உண்டு. ஆனால், கட்டாயம் 40% மதிப்பெண்கள் எடுத்தால் தான், பிற கேள்விகளே திருத்தப்படும் என்று சொல்லப்படக் கூடிய கட்டாயமான மொழிப் பிரிவில் தமிழ் ஏன் இடம்பெறவில்லை?

    தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளிகள் இருக்கின்றன. அதில் பணியாற்ற மாட்டார்களா? அது குறித்த விவரம் என்ன? கடந்த சில ஆண்டுகளாகத் தமிழுக்கான ஆசிரியர்களே ஒன்றிய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் நிரப்பப்படவில்லை என்பது ஒன்றிய அரசின் வாயிலாகவே வெளிப்பட்டதே! அதே போல, ஏகலைவா பள்ளிகளில் உள்ள நிலைமை என்ன? எத்தனை இடங்கள் உள்ளன? அவற்றில் இட ஒதுக்கீட்டின் நிலை எவ்வாறு இருக்கிறது? தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நிரப்பப்படாத பணியிடங்கள் எவ்வளவு? போன்ற கேள்விகள் எழுகின்றன.

    இவற்றுக்கு உரிய பதில்களை ஒன்றிய அரசு தரவேண்டாமா?

    தேர்வில் உள்ளூர் மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதே! இது அநீதி அல்லவா?

    ஒரே ஆண்டில் இரு காசி தமிழ்ச் சங்கமத்தின் பின்னணி!

    தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி தங்கள் பிரச்சாரத்திற்காக, காசித் தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் "சங்கிமத்"தைத் ஒரே ஆண்டில் இரண்டு முறை நடத்திய ஒன்றிய அரசு, தமிழைப் போற்றுவதாக வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு, தமிழுக்குத் தர வேண்டிய உரிமையை மறுப்பதேன்?

    ''தமிழுக்காகப் பேசுகிறோம், தமிழுக்காக உருகுகிறோம்'' என்றெல்லாம் நாடகமாடும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் இரட்டை வேடத்திற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?

    தமிழுக்கு உரிய நிதியையும் ஒதுக்காமல், தமிழர்களுக்கு உரிய வேலை வாய்ப்பையும் பறிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். போடும் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

    ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த அநீதிக்குரிய பரிகாரம் வழங்கப்படவேண்டும். இல்லையேல், தமிழ்நாடெங்கும் கிளர்ச்சியைத் தொடங்க வேண்டி இருக்கும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து குரல் எழுப்பிட வேண்டும்.

    தமிழ் புறக்கணிப்பை, ஹிந்தித் திணிப்பை எந்த நிலையிலும் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது. நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் களத்திலும் இப்பிரச்சினை நிச்சயம் எதிரொலிக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

    • இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு பாதிப்புகள் ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்
    • இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரிக்க வலியுறுத்தல்

    இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கோரி, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவது தனது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை தாம் பெற்றுள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர் என்றும், பலர், இதனைதங்கள் சமூகத்திற்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருத்தத்தோடு சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் அரசியலமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள்) அனைத்தும் ஒரு ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன என்றும், இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்துள்ள அவர், உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள்தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள் மற்றும் தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான, பாராளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்வையில் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. .க.ஸ்டாலின் அவர்கள், இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒரு ஒற்றையாட்சி "எக்கியராஜ்ய" (ஒற்றையாட்சி அரசு) மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது என்றும், இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம் அவர்களை மேலும் ஓரங்கட்டி, அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் (Thimpu Principles) குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில்,

    * இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்);

    * வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது(தமிழர் தாயகம்);

    * தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை); மற்றும்

    * மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல்;

    போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும்எந்தவொரு புதிய அரசியலமைப்பும், அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்றும், இது மீண்டும் மோதல்களுக்கும், மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் உட்பட, வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், இலட்சக்கணக்கான மக்கள், அங்குள்ளவர்களைத் தங்கள் உறவினர்களாகக் கருதுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இருதரப்பு உறவுகளுக்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதிப்பாட்டிற்கும் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

    இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், குறிப்பாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும்; இனச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும்; மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அணுகுமுறை, பிராந்திய அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியாவின் பங்கை மதிப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி மற்றும் மொழி மற்றும் இனச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்த நமது அரசியலமைப்பு விழுமியங்களுடனும் ஒத்துப்போகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு அது பங்களிக்கும் என உறுதியாக தான் நம்புவதாகவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கணக்கெடுக்கவே முடியாத அளவுக்கு ஏராளமான அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • கடந்த 6 நாள்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஊராட்சிகளில் முக்கியமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

    "தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட திமுக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சி செயலாளர்களில் பெரும்பான்மையினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். தொடக்கத்தில் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட அவர்கள், தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டில் ரூ.1,300 அடிப்படை ஊதியத்தில் பணி நிலைப்பு செய்யப்பட்டு 2018-ஆம் ஆண்டு முதல் ரூ.15,900 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த வகையிலும் நியாயமல்ல.

    ஊராட்சி செயலாளர்களுக்கு இணையான ஊதியம் பெற்று வரும் ஊராட்சி ஒன்றிய பதிவுறு எழுத்தர்களுக்கு அவர்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதே ஊதிய விகிதம் பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பதும், ரூ.2000 மட்டுமே ஓய்வூதியம் வழங்குவதும் பெரும் அநீதியாகும்.

    ஊரக உள்ளாட்சிகளின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் ஊராட்சி செயலாளர்கள் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் 28 மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், அனைத்துப் பணிகளையும் ஊராட்சி செயலாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். கடந்த 6 நாள்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஊராட்சிகளில் முக்கியமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அது குறித்த எந்தக் கவலையும், அக்கறையும் இல்லாமல் இந்த சிக்கலுக்கு தீர்வு காணாமல் அலட்சியம் காட்டி வருகிறது.

    தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கணக்கெடுக்கவே முடியாத அளவுக்கு ஏராளமான அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை வைத்துப் பார்க்கும் போது திமுக ஆட்சியால் பாதிக்கப்படாதவர்களே இல்லையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், இதுகுறித்த கவலையே இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு விழித்துக் கொண்டு ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை
    • எப்போதும் தனித்துதான் திமுக ஆட்சி அமைக்கும் கூட்டணி ஆட்சி கிடையாது

    வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதலமைச்சர் வெளியிட உள்ளார். விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    ஒருவேளை கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக அரசு உயரத்தப்போவதை தான் அமைச்சர் குறிப்பிடுகிறாரோ என்று இணையத்தில் அமைச்சரின் கருத்து வைரலாகியுள்ளது.

    நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது அவர்களது உரிமை. ஆனால், எப்போதும் தனித்துதான் திமுக ஆட்சி அமைக்கும் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்" என்று தெரிவித்தார்.

    • உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்
    • சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும்

    பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று காலை நிதின்நபின், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டார்.

    பொதுமக்களுடன் சேர்ந்து அவர் உற்சாகமாக பொங்கலிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவையொட்டி அங்கு ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் நடந்தது. ஆட்டம்- பாட்டத்துடன் பொங்கல் விழா நடந்தது. முன்னதாக கோவை முதலிபாளையத்தில் கோவை கோட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நிதின் நபின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    'பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் பணியால் பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளோம். இங்கு கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 39 சட்டசபை தொகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. இங்கு 80 சதவீதம் பூத் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. இது நமக்கான வெற்றியை அளிக்கும்.

    ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து உள்ளோம். இந்த தேர்தலில் உங்களின் பணியால் தி.மு.க.வை தோற்கடிப்போம். வெற்றியை நினைத்து அலட்சியமாக இருக்கக் கூடாது. விவேகானந்தர் கூறியது போல இலக்கை அடையும் வரை பணியாற்ற வேண்டும். சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்.

    பிரதமர் மோடி தலைமையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டம் கொண்டு வந்து இருக்கிறோம். தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றம், மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தி.மு.க. அரசின் பிரதான தோல்வியை கையில் எடுத்து பிரசாரம் செய்ய வேண்டும். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும். நாம் உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்." இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

    'பா.ஜ.க. கூட்டணி வலுவிழந்து இருப்பதாகவும், பலர் வெளியேறுவதாகவும் தொடர்ந்து என்னிடம் நிருபர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில், கூட்டணியில் தற்போது பா.ம.க. இணைந்து அவர்களுக்கான பதிலை அளித்துள்ளது. பொங்கல் முடிந்த பிறகு மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருக்கிறது. தி.மு.க.வில் உள்ள கூட்டணிகள் வெளியேறும். அடுத்த 80 நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    பா.ஜ.க. கட்சியின் ஆணி வேராக பூத் கமிட்டி உள்ளது. இன்று முதல் தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு பூத் கமிட்டி பொறுப்பாளர்களும், சிறப்பாக வேலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் பூத் கமிட்டி நிறைவாக உள்ளது. இது மிக முக்கியமான தேர்தல். கடந்த 2021 தேர்தலில் சரிவு வந்தது. அதுபோல வரும் தேர்தலில் நடந்துவிடக் கூடாது. கொங்கு மண்டலம் பா.ஜ.க.வின் எக்கு கோட்டை என்பதை நிருபிக்க வேண்டும்.'

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
    • மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.

    கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.

    இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது.

    20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு.
    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

    தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், கூடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் 13ம் தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க இணைந்துள்ளது.
    • த.வெ.க. நிர்வாகிகள் ஜி.கே.மணி மகன் மூலம் ராமதாஸ் தரப்பிடம் பேச்சு

    தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இதனால் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் தற்போது அன்புமணி தலைமையிலான பா.ம.க.வும் இணைந்துள்ளது.

    ஆனால் ராமதாஸ், அந்த கூட்டணி செல்லாது. சட்டரீதியாகவும் இந்த கூட்டணி செல்லாது. என்னுடன் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என சமீபத்தில் நிரூபர்களிடம் கூறி இருந்தார். மேலும் பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. தைலாபுரத்திலிருந்து தைலமும் சென்றுவிட்டது என சூசகமாக தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது போல் தெரிவித்திருந்தார். அதேபோல தமிழக வெற்றிக் கழக முக்கிய நிர்வாகிகளும் ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் மூலமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த பரபரப்பான நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இருந்து இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னைக்கு புறப்படுகிறார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை முடித்த பிறகு நாளை காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க திட்டம்
    • இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும்.

    சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் - வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் இன்று முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

    பூந்தமல்லி- போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது .

    பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது

    இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதியிலிருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×