என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க திட்டம்
    • போரூர் - வடபழனி வழித்தடத்தில் நடைபெற்ற முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு

    சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் - வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

    பூந்தமல்லி- போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது .

    பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் ரெயில் சேவையைத் தொடங்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

    இந்நிலையில், போரூர் - வடபழனி வழித்தடத்தில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட சோதனை ஓட்டம் தொடர்பான வீடியோவை சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். குறிப்பாக பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதியிலிருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.

    கடந்த மாதம் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.வாகவும், பா.ம.க. செயல் தலைவராகவும் இருக்கும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக டாக்டர் அன்புமணி அறிவித்தார். ஆனால் தன்னை நீக்க டாக்டர் ராமதாசை தவிர யாருக்கும் அதிகாரமில்லை என்று அவர் அதிரடியாக அறிவித்தார்.

    பா.ம.க.வுக்கு மொத்தம் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜி.கே.மணி, அருள் ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் அன்புமணி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

    ஜி.கே.மணி மீது அன்புமணி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீதும் டாக்டர் ராமதாஸ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.

    ஏற்கனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    அதற்கு 3 பேரும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக ராமதாஸ் தரப்பு பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 20.7.2025-ல் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாசிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

    அவர்கள் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் 3 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் இந்த 3 பேரிடமும் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
    • சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்கி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இரண்டு அடுக்கு (டபுள் டக்கர்) பஸ் சேவை கடந்த 1970 ஆண்டு முதல் இருந்து வந்தது. இந்த சேவை 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த சேவையை கொண்டு வர தமிழக அரசு ஆர்வம் காட்டியது.

    அதன் காரணமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இதற்கான பணிகள் நடந்து வந்தன. அதன் முதல் கட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 20 பஸ்களை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

    அதன்படி அமெரிக்க வாழ் தமிழர்கள் நிதி பங்களிப்புடன் முதல் கட்டமாக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டக்கர் பஸ்ஸை அசோக் லேலண்ட் நிறுவனத்திலிருந்து சுற்றுலாத்துறை வாங்கியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பஸ்ஸின் இரு பக்கவாட்டிலும் தஞ்சை பெரிய கோவில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் மிகப்பெரிய அளவில் தமிழ் வாழ்க என எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது.

     

    இந்த டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் புதிய சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பேருந்தில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் பேருந்தில் உள்ள வசதிகள் குறித்து விளக்கினர்.

    சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்கி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மும்பை என்பது அது ஒரு சர்வதேச நகரம் என்று அண்ணாமலை பேசியத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது
    • தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் என்று அண்ணாமலையை ராஜ் தாக்கரே விமர்சித்தார்.

    மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே தமிழர்களை இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.. வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.

    இந்நிலையில், ராஜ் தாக்கரே விமர்சனத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை, "மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவதாகவும், மேலே Ink அடிப்பதாகவும் மிரட்டலுடன் சிவசேனா பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன். முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். Ink அடித்துப் பாருங்கள். மிரட்டல், உகுட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். மும்பை உலகத்தின் தலைநகர் என்று சொல்லும் போது அது மராட்டியர்களால் கட்டிய நகரம் இல்லை என்று ஆகிவிடுமா?" என்று தெரிவித்தார்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • தினமும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120-க்கும் சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 287 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

    10-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

    9-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    8-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,000

    7-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-1-2026- ஒரு கிராம் ரூ.275

    10-1-2026- ஒரு கிராம் ரூ.275

    9-1-2026- ஒரு கிராம் ரூ.268

    8-1-2026- ஒரு கிராம் ரூ.272

    7-1-2026- ஒரு கிராம் ரூ.277

    • அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
    • கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,

    இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து #HouseArrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.

    சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

    திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் மு.க.ஸ்டாலின் ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.

    கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 



    • பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்காக கடந்த 9-ந்தேதி முதல் நேற்று இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 496 பேர் தங்களது சொந்து ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.

    அதேபோல், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    • தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ரவுடி ஆதியை வெட்டிக்கொன்றது தோழி சுசித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தலைமறைவான சுசித்ராவின் உறவினர்களாக சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுவதற்காக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வந்திருந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

     

    தனி விமானத்தில் டெல்லி செல்லும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.



    இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

    முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 29,30,31-ந்தேதிகளில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • திமுகவின் ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    • சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்

    பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள அவர், 

    'சனாதன பண்பாட்டிற்கு ஒரு மகத்தான, பெருமைமிக்க வரலாறு உள்ளது. அதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு உண்மையிலேயே ஒப்பற்றது. இந்தியாவின் ஆன்மா உலகத்திடம் உரையாடிய புண்ணிய பூமி. 1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைப் பாறையில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட தியானம், ஒரு ஆன்மிக சாதனை மட்டுமல்ல; அது இந்திய மறுமலர்ச்சியின் பிரகடனமாகும். இங்கிருந்தே அவர் தேசத்தின் எழுச்சிக்கான உறுதியை எடுத்துக் கொண்டு, சனாதன சிந்தனையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார்.

    இன்று பிரதமர் மோடியும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கி வருகிறார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள், நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது மூலம் தமிழர் பெருமையை நிலைநாட்டியது , திருக்குறளின் போதனைகளையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கருத்துகளையும் தேசிய சிந்தனையுடன் இணைப்பது ஆகியவற்றின் மூலம், தமிழின் பெருமை இமாலய உச்சத்தை எட்டியது.

    பிரதமர் தலைமையில், ராமர் கோயில், காசி விஸ்வநாதர் வழித்தடம், சோமநாத், மத்திய பிரதேசத்தின் மகாகால் லோக் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களின் மூலம், இந்தியா ஒரு முழுமையான மத-பண்பாட்டு மறுமலர்ச்சியை கண்டுள்ளது. இது பாரதத்தின் பண்டைய ஆன்மிக இறையான்மையும் தேசிய விழிப்புணர்வையும் மீட்டெடுப்பதில் ஒரு சகாப்தம் படைக்கும் தருணமாகும்.

    ஆனால் அதே சமயம், தமிழ்நாட்டின் இந்த மகத்தான பாரம்பரியம், திமுக ஆட்சியின் கீழ் அவமதிக்கப்படுகிறது. தமிழ் கடவுளான முருகனுக்கு தீபம் ஏற்றுதல் முதல் இந்து நம்பிக்கைகளை சிதைப்பது வரை, சனாதன வேள்விகள் தொடர்ந்து கேலி செய்யப்படுகின்றன. ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    ராமசேதுவை எதிர்த்ததன் மூலம் காங்கிரஸ் தன் வீழ்ச்சிக்கான விதைகளை விதைத்தது போல, கோயம்புத்தூரின் புனித மண்ணிலிருந்து நான் உறுதியாக கூறுகிறேன்—சனாதன மரபுகளை தொடர்ந்து இகழும் திமுகவின் அரசியல் வீழ்ச்சி இம்மண்ணிலிருந்து துவங்கும்.

    ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுபட்டு, நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி; வளர்ச்சி, பொறுப்புள்ள ஆட்சி, மற்றும் சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்..! வாழ்க தமிழ்நாடு..! வளர்க பாரதம்..! " எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • படத்திற்கான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றபின்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கவேண்டும்.
    • முழுக்க முழுக்க திமுகவைதானே குறைக்கூறினார்.

    சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜன நாயகன் தணிக்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

    "பராசக்தியை ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் ரிலீஸ் செய்துள்ளது. மத்திய அரசு தடைசெய்யவேண்டும் என்றால், ரெட் ஜெயண்ட் படத்திற்குத்தான் தடைவிதித்திருக்க வேண்டும். ஏனெனில் எங்களுக்கு எதிரி திமுகதான். ஜன நாயகன் குறித்து பேசுபவர்கள் மூளையில் இருக்கும் அறிவைப் பயன்படுத்தமாட்டார்களா? குழந்தை அழுதால்கூட மோடியை காரணம் கூறுபவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    படத்திற்கான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றபின்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கவேண்டும். அதுதான் அடிப்படை விதி. இது தயாரிப்பாளர்களின் தவறு. பின்னர் மத்திய தணிக்கை வாரியத்தை தவறு கூறாதீர்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விடுமுறை நாட்கள் இடையில் இருந்துள்ளன. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அவர்கள் 24 மணிநேரமும் உங்களுக்காக வேலைசெய்ய வேண்டுமா? ஒரு ரசிகையாக எனக்கும் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாதது குறித்து வருத்தம் உள்ளது. ஆனால் விதிமுறைகள் எப்பொழுதும் மாறாது. இது அனைத்து படங்களுக்கும் பொருந்தும். குறைக்கூறுவதற்கு முன் யோசியுங்கள். " என தெரிவித்தார். 

    தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு நாளை விஜய் ஆஜராவது குறித்த கேள்விக்கு, 

    கரூர் பிரச்சனை எழுந்தபோது முதலில் சிபிஐ விசாரணை கோரியது யார்? நாங்கள் கேட்டோமா? முதலில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டது விஜய்தான். அவர்மீது தவறு இல்லை இல்லையா? முழுக்க முழுக்க திமுகவைதானே குறைக்கூறினார். அவர் கேட்டார்; விசாரணை நடக்கிறது; அவர் ஆஜராகிவிட்டு வருவார். என தெரிவித்தார். 


    ×