என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்- ராமதாஸ்
    X

    அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்- ராமதாஸ்

    • கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.

    கடந்த மாதம் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.வாகவும், பா.ம.க. செயல் தலைவராகவும் இருக்கும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்குவதாக டாக்டர் அன்புமணி அறிவித்தார். ஆனால் தன்னை நீக்க டாக்டர் ராமதாசை தவிர யாருக்கும் அதிகாரமில்லை என்று அவர் அதிரடியாக அறிவித்தார்.

    பா.ம.க.வுக்கு மொத்தம் 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜி.கே.மணி, அருள் ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் அன்புமணி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

    ஜி.கே.மணி மீது அன்புமணி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீதும் டாக்டர் ராமதாஸ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.

    ஏற்கனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடப்பதாக கூறி அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    அதற்கு 3 பேரும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக ராமதாஸ் தரப்பு பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 20.7.2025-ல் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாசிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

    அவர்கள் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் 3 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் இந்த 3 பேரிடமும் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×