என் மலர்tooltip icon

    இந்தியா

    • அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
    • சிவசேனா 100 இடங்கள் கோரியநிலையில், பாஜக 75 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்தது.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 இடங்களை கோரிய ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 90 இடங்களை ஒதுக்கியுள்ளது பாஜக.

    மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகிறது. இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.

    அதேசமயம் பா.ஜ.கவும், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின்கீழ் பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், பாஜக தலைவர் அமித் சதம் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

    முன்னதாக சிவசேனா 100 இடங்கள் கோரியநிலையில், பாஜக 75 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்தது. இதற்கு சிவசேனா உடன்படாத நிலையில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தற்போது எண்ணிக்கை நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜ.க தற்போது 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.


    • ஊர்வலமாகச் சென்று, வீடு வீடாக வாள்களை விநியோகித்துள்ளனர்.
    • இந்து ரக்ஷா தளம் இந்து சமூகத்திற்கு உதவும்.

    உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஷாலிமார் கார்டன் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வாள்களை விநியோகம் செய்ததாக இந்து ரக்ஷா தள (Hindu Raksha Dal) அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இந்து ரக்ஷா தளத்தின் தலைவர் பூபேந்திர சவுத்ரி உட்பட 17 நிர்வாகிகள் மற்றும் அடையாளம் தெரியாத 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைவர் சவுத்ரி தலைமறைவாக உள்ளார். ஷாலிமார் கார்டன் குடியிருப்புப் பகுதியில் ஊர்வலமாகச் சென்று, இந்து சார்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி வீடு வீடாக வாள்களை விநியோகித்துள்ளனர்.

    "நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எந்த அமைப்பையும் போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். பெயரிடப்பட்ட மற்றும் பெயரிடப்படாத அனைத்து குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அனைவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று துணை காவல் ஆணையர் நிமிஷ் பாட்டீல் தெரிவித்தார்.

    இதற்கிடையில், இந்து ரக்ஷா தளத் தலைவர் பூபேந்திரா ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் "இந்து குடும்பங்களைத் தாக்கி இந்து பெண்கள் மற்றும் பெண்களைத் துன்புறுத்தும்" முஸ்லிம்களை எதிர்கொள்ள 250 ஆயுதங்கள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

    மேலும் "முஸ்லிம்களை எதிர்த்துப் போராடுவதற்கு இந்துக்கள் ஆயுதங்களுடன் தயாராக இருக்க வேண்டும். இந்து ரக்ஷா தளம் இந்து சமூகத்திற்கு உதவும். வங்கதேசத்தில் இந்துக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. அங்கு இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். வங்காளதேச இந்துக்களின் நிலைமை இங்கும் உருவாக நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    • தலைவர் சிவக்குமார் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் என்றால், நிச்சயமாக அப்படி ஒரு ஒப்பந்தம் இருந்தால்தான் சொல்வார்.
    • சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட 'பதவிப் பகிர்வு' ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஊகங்கள் எழுகின்றன

    கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் அடுத்த மாத தொடக்கத்தில் பதவியேற்பார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் மீண்டும் கூறியுள்ளார். சிவகுமாரின் ஆதரவாளரான ராமநகரம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜனவரி 6 அல்லது 9 ஆம் தேதிகளில் 200% சிவகுமார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிவித்தார். 

    இதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளித்ததா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'தலைவர் சிவக்குமார் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் என்றால், நிச்சயமாக அப்படி ஒரு ஒப்பந்தம் இருந்தால்தான் சொல்வார். இல்லையென்றால் அவர் அப்படி சொல்லியிருக்கமாட்டார்' என தெரிவித்தார்.

    கர்நாடகாவில் ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தப் பேச்சுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. 2023-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட 'பதவிப் பகிர்வு' ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த ஊகங்கள் எழுந்து வருகின்றன. 

    சிவக்குமாரின் தீவிர ஆதரவாளர்கள் அவருக்குப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், சித்தராமையாவிற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் ஜனவரி 25-ல் மைசூரில் பெரிய அளவிலான மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    இதனிடையே ஜனவரி 6-ஆம் தேதிக்குப் பிறகு, முதலமைச்சர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்புக்குப் பிறகே முதலமைச்சர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு தலைவர்களும் தாங்கள் கட்சி மேலிடத்தின் முடிவிற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறியுள்ளனர். அதேசமயம் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மேலிடம் தன் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், தான்தான் ஐந்தாண்டு காலமும் பதவியில் நீடிப்பேன் என்றும் டிசம்பர் 19 அன்று சட்டப்பேரவையில் தெரிவித்த்து குறிப்பிடத்தக்கது. 

    • வங்காளதேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுகளுக்கும் கலிதா ஜியா ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் எப்போதும் நினைவு கூரப்படும்.
    • 2015-ஆம் ஆண்டு டாக்காவில் அவரை நான் சந்தித்த இனிய சந்திப்பை நினைவுகூர்கிறேன்.

    புதுடெல்லி:

    வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    வங்காளதேச முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வருத்தம டைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், வங்காளதேச மக்கள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்தத் துயர இழப்பைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் மன வலிமையை வழங்க பிரார்த்திக்கிறேன். வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமராக, வங்காளதேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுகளுக்கும் கலிதா ஜியா ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் எப்போதும் நினைவு கூரப்படும்.

    2015-ஆம் ஆண்டு டாக்காவில் அவரை நான் சந்தித்த இனிய சந்திப்பை நினைவுகூர்கிறேன். அவரது தொலைநோக்குப் பார்வையும், மரபும் நமது கூட்டாண்மைக்குத் தொடர்ந்து வழிகாட்டும் என்று நம்புகிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

    இவ்வாறு மோடி தெரிவித்து உள்ளார்.

    • மலைப்பாங்கான நிலப்பரப்பில் உள்ள வளைவுகள் மற்றும் குறுகிய சாலைகள் இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
    • குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் இந்த இதுபோன்ற வாகன விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன.

    உத்தரகாண்ட், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிக்கியாசன் பகுதியில் ஒரு பள்ளத்தாக்கில் இன்று காலை பேருந்து கவிழ்ந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். குமாவோன் மண்டல் விகாஸ் நிகாம் (KMVN) நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து, ராம்நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது. 

    மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    முதற்கட்ட தகவல்களின்படி 7 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக பேசிய மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) தேவேந்திர பிஞ்சா,

    "KMVN மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தபோது பதினெட்டு பேர் இருந்துள்ளனர். உடல்கள் மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார். ஒவ்வொரு ஆண்டும், உத்தரகாண்டில் 1,000 க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவாகின்றன. மலைப்பாங்கான நிலப்பரப்பில் உள்ள வளைவுகள் மற்றும் குறுகிய சாலைகள் இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.

    குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் இதுபோன்ற வாகன விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன. 

    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பாதசாரிகள், பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது.

    மும்பையில் நேற்று இரவு 10 மணியளவில் மாநகராட்சிப் பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மும்பையின் பாண்டூப் (Bhandup) ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஸ்டேஷன் சாலையில், ரிவர்ஸ் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து மாநகர் அரசுப்பேருந்து (BEST bus) அங்கு நின்றிருந்த பாதசாரிகள் மற்றும் பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது.

    இதில் 4 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர். காயமடைந்த 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் (52) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் 

    • சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கை கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகுமாரை 12-ந் தேதி வரை காவலில் வைக்க திருவனந்தபுரம் சிறப்பு விஜிலென்சு கோர்ட்டு உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கை கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்தக்குழு வழக்கு தொடர்பாக பலரை கைது செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கைது செய்தது. முன்னாள் தலைவர் பத்மகுமாருடன் சேர்ந்து சதி செய்து ஆவணங்களை திருடியதாக அவர் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகுமாரை 12-ந் தேதி வரை காவலில் வைக்க திருவனந்தபுரம் சிறப்பு விஜிலென்சு கோர்ட்டு உத்தரவிட்டது. அவரது ஜாமின் மனு நாளை (31-ந் தேதி) விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விரைந்து வந்த போலீசார், சிறுவனின் தாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • பொழுது விடிந்தபிறகு சாலைக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான்.

    ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தின் காட்டுப்பகுதியையொட்டி செல்லும் சாலை ஒன்றில் நேற்று முன்தினம் காலையில் 5 வயது சிறுவன் ஒருவன் அழுதவாறே அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி உதவி கேடடுக்கொண்டு இருந்தான். அவனுக்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் அவனிடம் விவரம் கேட்டனர். அப்போது அவர்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவன் அழைத்து சென்றான்.

    அங்கு சென்று பார்த்தபோது சிறுவனின் தந்தை இறந்து கிடந்தார். அருகே அவனது தாய் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சிறுவனின் தாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழந்தார்.

    பின்னர் இது குறித்து விசாரித்தபோது, அவர்கள் ஜியானந்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. கடந்த 27-ந் தேதி மூவரும் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    உடனே அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மூன்று பேரும் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து அடர்ந்த காட்டுக்குள் சென்றனர். பின்னர் அங்கே விஷம் குடித்துள்ளனர். சிறுவனுக்கும் அவர்கள் விஷம் கொடுத்துள்ளனர்.

    ஒரு சில மணி நேரத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி மயங்கி விழுந்து உயிருக்குப்போராடியவாறே இருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுவன், அடர்ந்த காட்டுக்குள் இரவு முழுவதும் கடும் குளிரில் தனது தந்தையின் உடலுக்கும், மயங்கி கிடந்த தாய்க்கும் காவல் இருந்துள்ளான். பின்னர் பொழுது விடிந்தபிறகு சாலைக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான்.

    நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் தாய்-தந்தையை பறிகொடுத்த சிறுவனை அவனது தாத்தா-பாட்டியிடம் போலீசார் சேர்த்துள்ளனர்.

    • தொலைபேசி கட்டணம், மின்கட்டணம், கடன் கட்டணம் ஆகியவற்றை மாதந்தோறும் செலுத்த ‘ஆட்டோ பே’ என்ற வசதி உள்ளது.
    • அனைத்து யுபிஐ செயலிகளில் இருக்க கூடிய ஆட்டோபேவையும் பார்வையிட்டு மேலாண்மை செய்யலாம்.

    நாட்டில் யு.பி.ஐ. மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் தேசிய பரிவர்த்தனை கழகம் (என்.பி.சி.ஐ.) யு.பி.ஐ.யை மேலாண்மை செய்கிறது. தொலைபேசி கட்டணம், மின்கட்டணம், கடன் கட்டணம் ஆகியவற்றை மாதந்தோறும் செலுத்த 'ஆட்டோ பே' என்ற வசதி உள்ளது.

    பீம் யு.பி.ஐ., கூகுள் பே, போன் பே போன்ற பல்வேறு செயலிகளில் இருக்கும் ஆட்டோ பே வசதியை ஒரே இடத்தில் மேலாண்மை செய்யும் வசதியை என்.பி.சி.ஐ. கொண்டு வந்துள்ளது. இதற்காக ஒரு தளத்தை உருவாக்கி இருக்கிறது. upihelp.npci.org.in என்ற ஒரே தளத்தில் அனைத்து யுபிஐ செயலிகளில் இருக்க கூடிய ஆட்டோபேவையும் பார்வையிட்டு மேலாண்மை செய்யலாம். இந்த வசதி வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    • தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.
    • குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.

    சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் அஜித் பவார் துணை முதல்வர் ஆனார்.

    அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், முதல் கட்டத் தேர்தலிலேயே மகாயுதியில் உள்ள பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.

    2-வது கட்டமாக புனே, பிம்ப்ரி சிஞ்ச்வட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில் பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் கட்சியும், எதிரணியில் உள்ள அஜித் பவார் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்ததன் மூலம் குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.

    பிம்ப்ரி-சின்ச்வாட் எப்போதும் பவார் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்டது. இந்நிலையில் குடும்பப் பிளவால் வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    • "சீனாக்காரன்", "மோமோஸ் விற்பவன்" என்று சிறுமைப்படுத்தியுள்ளனர்.
    • பாஜக தலைமையிலான அரசு இத்தகைய வெறுப்புணர்வைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி வருகிறது

    வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தரகாண்டில் இனவெறி தாக்குதலால் கொள்ளப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    24 வயதான ஏஞ்சல் சக்மா உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் எம்பிஏ பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 9-ம் தேதி, ஏஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேல் ஆகியோர் டேராடூனில் உள்ள சந்தைக்குச் சென்றிருந்தனர்.

    அப்போது அங்கிருந்த ஒரு கும்பல்அவர்களை இனரீதியாக இழிவுபடுத்தி பேசியுள்ளது. "சீனாக்காரன்", "மோமோஸ் விற்பவன்" என்று அவர்களைச் சிறுமைப்படுத்தியுள்ளனர்.

    இதனை ஏஞ்சல் சக்மா தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த கும்பல் கையில் கிடைத்த கற்கள் மற்றும் இரும்புத் கம்பிகளால் ஏஞ்சல் சக்மாவை கொடூரமாக தாக்கியுள்ளது.

    இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாக உயிருக்கு போராடிய நிலையில், டிசம்பர் 26 அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மற்ற இந்திய மாநிலங்களில் உரிய பாதுகாப்போ குறைந்தபட்ச மரியாதையோ இல்லை என இனவெறி தாக்குதலுக்கு சகோதரனை பறிகொடுத்த மைக்கேல் வேதனையுடன் தெரிவித்தார்.

    தொடக்கத்தில் இந்த விவகாரத்தில் காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

    இந்த இனவெறி கொலைக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கரமான குற்றம். பாஜக தலைமையிலான அரசு இத்தகைய வெறுப்புணர்வைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி வருகிறது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

    "இது ஒரு தேசிய அவமானம். நம் நாட்டு மண்ணிலேயே ஒரு இந்தியரை அந்நியர் போல உணரச் செய்வது நாகரீக சமூகத்திற்கு அழகல்ல," என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் எவரும் தப்ப முடியாது என்றும் உறுதியளித்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியைத் தேட காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

    இந்தக் கொடூரமான கொலையைக் கண்டித்து திரிபுராவில் மாணவர்கள் அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தினர்.   

    • 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    • பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.

    பெங்களூருவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவின் எலஹங்கா பகுதியில் உள்ள கோகிலு லேஅவுட், பக்கீர் காலனி மற்றும் வசீம் லேஅவுட் ஆகிய பகுதிகளில் இருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

    இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், "வட இந்தியாவில் கடைபிடிக்கப்படும் புல்டோசர் கலாச்சாரம் இப்போது தென்னிந்தியாவிலும், அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல்" என்று விமர்சித்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்து டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பினராயி விஜயன் போன்ற மூத்த தலைவர்கள் கள நிலவரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.

    இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் குப்பை கிடங்கு மற்றும் கல் குவாரி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டவை. அந்த இடம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றது மற்றும் சுகாதார சீர்கேடு நிறைந்தது.

    நில மாஃபியாக்கள் இது போன்ற குடிசைப்பகுதிகளை உருவாக்கி அரசு நிலத்தை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள். பெங்களூருவை மும்பை போல குடிசை நகரமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    கேரளாவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற பினராயி விஜயன் அரசியல் நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே இந்த நடவடிக்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் தகுதியுள்ளவர்களுக்கு ராஜீவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாற்று இடங்கள் வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. 

    ×