என் மலர்
இந்தியா
- தனது வாகனத்தின் பேட்டரி மைலேஜ் தராதது குறித்து பலமுறை ஷோரூமில் புகார் அளித்துள்ளார்.
- அவர் ஆத்திரத்துடன் கத்துவதும், தீயை அணைக்க முயன்றவர்களிடம் வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், தனது மின்சார ஆட்டோவின் மைலேஜ் மற்றும் பேட்டரி பிரச்சினையால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ஒருவர் ஷோரூம் வாசலிலேயே அதற்கு தீ வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மோகன் என்ற அந்த முன்சார ஆட்டோ ஓட்டுநர், தனது வாகனத்தின் பேட்டரி, மைலேஜ் தராதது குறித்து பலமுறை ஷோரூமில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், பலமுறை அலைந்தும் தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த அவர் கடந்த திங்கள்கிழமை, ஜோத்ப்பூரில் உள்ள ஷோரூம் முன் தனது வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
அங்கிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று காலமானார்.
- அவரது மறைவுக்கு அவாமி லீக் கட்சி தலைவரான ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்தார்.
புதுடெல்லி:
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கிடையே, கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர். கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கு டாக்காவில் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார். இதற்காக ஜெய்சங்கர் நாளை வங்கதேச தலைநகர் டாக்கா செல்கிறார்.
வங்கதேசம் உடனான உறவில் விரிசல் நிலவி வரும் சூழ்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- 2025-26 நிதியாண்டின் 2-வது நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
- இதன் மூலம் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. 2030-க்குள் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து சிறந்த வளர்ச்சி எண்ணிக்கையால், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. 2025-26 நிதியாண்டின் 2-வது காலாண்டில் இந்தியாவின் உண்மையான உள்ளாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாகும். முதல் காலாண்டில் 7.4 சதவீதமாக இருந்த நிலையில், 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சீனா 2-ஆவது இடத்தில் உள்ளது. 2026-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. ஐஎம்எஃப் 2025-ல் 6.6 சதவீதமாகும், 2026-ல் 6.2 சதவீதமாக இருக்கும் என கணித்தள்ளது.
- கோகிலு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் டிசம்பர் 20-ம் தேதி அகற்றப்பட்டன.
- மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் யலஹங்கா கோகிலு பகுதியில் பக்கீர் காலனி, வசீம் லே அவுட் ஆகிய இடங்களில் பொது இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் டிசம்பர் 20-ம் தேதி அகற்றப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், கோகிலுவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு நடவடிக்கையின்போது இடிக்கப்பட்ட உண்மையான நபர்களுக்கு மாற்று வீடுகளை வழங்குவதற்கான மாநில அரசின் முடிவை கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே. சிவகுமார் இன்று ஆதரித்தார். அதே நேரத்தில் திருப்திப்படுத்தும் அரசியல் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.
அந்த வீடுகளில் வசித்தோருக்கு மனிதாபிமான அடிப்படையில் மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. தகுதியானவர்களுக்கு நிச்சயம் வீடு கிடைக்கும். அதுவரை அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். ஆக்கிரமிப்புகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இல்லை.
ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பிறகு தகுதியுள்ள உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே நிவாரணம் என்பது மனிதாபிமான நடவடிக்கை என வலியுறுத்திய அவர், சட்டவிரோத ஆக்கிரமிப்பு இடங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு விரைந்து நிவாரணம் வழங்கவேண்டும் என சில பா.ஜ.க. தலைவர்களும் சில பிரிவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
- பெங்காலி பேசும் மக்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் ஊடுருவல்காரர்களாக நடத்தப்படுகிறார்கள்.
- அவர்கள் பெங்காலியில் பேசுகிறார்கள் என்பது மட்டும் அவர்களுடைய ஒரே குற்றம்.
பெங்காலி (மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) பேசும் மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குடியெர்ந்து வேலைபார்த்து வருகிறார்கள். அவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரை சந்தித்தபோது, வெளிமாநிலத்தில் குடிபெயர்ந்து வேலை பார்க்கும் பெங்காலி பேசும் மக்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தலையிட வேண்டும். அதேபோல் பிற்படுத்தப்பட்ட மதுவா சமுதாயம் மேற்கு வங்கத்தில் பிரச்சினையை மேற்கொண்டு வருகின்றனர் என வலியுறுத்தியுள்ளார்.
பெங்காலி பேசும் மக்கள் தாக்கப்படும் சூழ்நிலையை தான் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், இது நடக்கக் கூடாது என பிரதமர் உறுதி அளித்ததாகவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம ஏதும் இல்லை. சில நாட்களுக்கு முன்னதாக நான் டெல்லி வந்திருந்தேன். அப்போது, தற்செயலாக பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றார்.
மோடியிடம் ஒரு கடிதம் வழங்கியுள்ளார். அதில் "பெங்காலி பேசும் மக்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் ஊடுருவல்காரர்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் பெங்காலியில் பேசுகிறார்கள் என்பது மட்டும் அவர்களுடைய ஒரே குற்றம்.
சம்பந்தப்பட்ட நிர்வாகத்தால் அவர்கள் பெரும்பாலும் அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர்களாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, ஊடுருவல்காரர்களாகக் கருதப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஆன்லைன் போர்டல் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.
- விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் தாங்கள் வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒருநாள் முன்னரே தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
"மூத்த வழக்கறிஞர்கள், வாதிடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது பதிவுபெற்ற வழக்கறிஞர்கள், நோட்டீஸ் அனுப்பப்பட்ட மற்றும் வழக்கமான விசாரணை என அனைத்து விவகாரங்களிலும், தங்களது வாய்மொழி வாதங்களை முன்வைப்பதற்கான கால அளவை விசாரணை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு நாளைக்கு முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும். பதிவுபெற்ற வழக்கறிஞர்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 'வருகை சீட்டுகளை' சமர்ப்பிக்கும் ஆன்லைன் போர்டல் வாயிலாகவே இதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வாதாடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது மூத்த வழக்கறிஞர்கள், தங்களின் 'பதிவுபெற்ற வழக்கறிஞர்' மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நோடல் வழக்கறிஞர் மூலமாகவோ, ஐந்து பக்கங்களுக்கு மிகாத ஒரு சுருக்கமான குறிப்பு அல்லது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்த காலக்கெடுவை உறுதி செய்யும் வகையில், அதன் நகலை எதிர் தரப்பினருக்கு வழங்கிய பிறகு, விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாகத் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து வழக்கறிஞர்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் மற்றும் தங்களுடைய வாய்மொழி வாதங்களை அதற்குள் முடித்துக் கொள்ள வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் துணை ஜனாதிபதியாக 2022 முதல் செயல்பட்டு வந்தவர் ஜகதீப் தன்கர்.
- ஜூலையில் தனது பதவியை ராஜினாமா செய்த அவர், டெல்லியில் தனியார் பண்ணை வீட்டிற்கு மாறினார்.
புதுடெல்லி:
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக 2022 முதல் செயல்பட்டு வந்தவர் ஜகதீப் தன்கர் (74).
கடந்த ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை தலைவராக இருந்த அவர், முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்றார். அன்றைய தினமே, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஜூலையில் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஜகதீப் தன்கர் டெல்லி சத்தர்பூரில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டிற்கு மாறினார்.
அரசு விதிகளின்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வசிப்பதற்கான பங்களாவை நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்க வேண்டும்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து 5 மாதங்கள் ஆன நிலையிலும் ஜகதீப் தன்கருக்கு அரசு பங்களா ஒதுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
அரசு விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் துணை ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுக்கு, டில்லியில் உள்ள லுட்யென்ஸ் அரசு தோட்டத்தில் டைப் - 8 பங்களா அல்லது அவர்களின் சொந்த ஊரில், 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
- நாளை ராஜஸ்தானின் ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம்
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மகனான ரைஹான் வதேராவிற்கும், டெல்லியைச் சேர்ந்த அவிவா பேக் என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 7 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்தநிலையில் இரு குடும்பத்தினர் முன்னிலையில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் ரைஹான். அதனை அவிவா ஏற்றுக்கொண்ட நிலையில் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நாளை ராஜஸ்தானின் ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த அவிவா பேக்?
அவிவா பேக் டெல்லியை சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். Atelier 11 என்ற புகைப்பட ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். அவிவா பேக் மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லியில் வசிக்கின்றனர். அவரது தந்தை இம்ரான் பெக் ஒரு தொழிலதிபர். ரைஹான் வதேராவும் ஒரு புகைப்பட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும்- அமித் ஷா.
- மேற்கு வங்க மாநிலத்திற்கு அமித் ஷா சுற்றுலா பயணி போன்று வந்து சென்று கொண்டிருப்பார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக-வின் மூத்த அமைச்சருமான அமித் ஷா மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ளார்.
மேற்கு வங்கம் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித் ஷா "நாங்கள் ஊடுருவல்காரர்களை அடையாளம் மட்டும் காணமாட்டோம். அவர்களை வெளியேற்றுவோம். ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு புதிய பாஜக அரசு பெங்காலில் அமையும். மக்கள் இதை முடிவு செய்துவிட்டனர். மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும்" என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில கல்வித்துறை அமைச்சருமான பிரத்யா பாசு கூறுகையில் "மேற்கு வங்க மாநிலத்திற்கு அமித் ஷா சுற்றுலா பயணி போன்று வந்து சென்று கொண்டிருப்பார். இதுபோன்ற பயணம் எந்த பயனும் தராது. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக-வால் 50 இடங்களை கூட தாண்ட முடியாது, மோசமான தோல்வியை சந்திக்க இருக்கிறது" என்றார்.
- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
- பொருளாதார நிபுணர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி உள்ளிட்ட சூழல்களுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பான கருத்துகளைக் கேட்பதற்காக, புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
- மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.
- SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:-
* ஏ.ஐ. பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி.
* மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.
* தேர்தல் வரும் நிலையில் சோனார் பங்க்ளா (Sonar Bangla) வாக்குறுதியை கொடுத்தார்கள். ஆனால், பெங்காலி பேசும் மக்கள் மற்ற மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள்.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது மேற்கு வங்கத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
* SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
- அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
- சிவசேனா 100 இடங்கள் கோரியநிலையில், பாஜக 75 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்தது.
மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 இடங்களை கோரிய ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 90 இடங்களை ஒதுக்கியுள்ளது பாஜக.
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகிறது. இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
அதேசமயம் பா.ஜ.கவும், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின்கீழ் பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், பாஜக தலைவர் அமித் சதம் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக சிவசேனா 100 இடங்கள் கோரியநிலையில், பாஜக 75 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்தது. இதற்கு சிவசேனா உடன்படாத நிலையில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தற்போது எண்ணிக்கை நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜ.க தற்போது 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.






