என் மலர்
இந்தியா

பாஜக 50 இடங்களை கூட தாண்டாது: அமித் ஷாவுக்கு மேற்கு வங்க அமைச்சர் பதிலடி
- மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும்- அமித் ஷா.
- மேற்கு வங்க மாநிலத்திற்கு அமித் ஷா சுற்றுலா பயணி போன்று வந்து சென்று கொண்டிருப்பார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக-வின் மூத்த அமைச்சருமான அமித் ஷா மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ளார்.
மேற்கு வங்கம் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித் ஷா "நாங்கள் ஊடுருவல்காரர்களை அடையாளம் மட்டும் காணமாட்டோம். அவர்களை வெளியேற்றுவோம். ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு புதிய பாஜக அரசு பெங்காலில் அமையும். மக்கள் இதை முடிவு செய்துவிட்டனர். மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும்" என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில கல்வித்துறை அமைச்சருமான பிரத்யா பாசு கூறுகையில் "மேற்கு வங்க மாநிலத்திற்கு அமித் ஷா சுற்றுலா பயணி போன்று வந்து சென்று கொண்டிருப்பார். இதுபோன்ற பயணம் எந்த பயனும் தராது. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக-வால் 50 இடங்களை கூட தாண்ட முடியாது, மோசமான தோல்வியை சந்திக்க இருக்கிறது" என்றார்.






