என் மலர்
தஞ்சாவூர்
- ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது.
- நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றதாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 8.25 அடி அகலம் கொண்டது. மொத்தம் 20 டன் எடை உடையது. இந்த நந்தியெம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி மாட்டுப் பொங்கலான இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலையில் நந்தியெம் பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை உள்பட பல வகையான பழங்களாலும், பால்கோவா உள்பட இனிப்புகளாலும், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியெபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள், பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ-பூஜை நடந்தது.
பின்னர் நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
- இளம்பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பூவாலூர் கிராமத்தை சேர்ந்த நவீன்- ஐஸ்வர்யா சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இளம்பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த பெற்றோரை பட்டுக்கோட்டை காவல்துறை கைது செய்தது.
கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தந்தை பெருமாள், தாய் ரோஜாவை கைது செய்த காவல்துறை, பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தை சேர்ந்த நவீன்- ஐஸ்வர்யா சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஐஸ்வர்யாவை துன்புறுத்தி பெற்றோர் கொலை செய்ததாக கணவன் நவீன் புகார் அளித்த புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- ரெயில் குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
- திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு பிறகு புறப்படும்.
தஞ்சாவூர்:
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக சில விரைவு ரெயில் சேவையில் மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மன்னார்குடி-பகத்கீ கோதி அதிவிரைவு ரெயில் (வண்டி எண்-22674) நாளை (திங்கட்கிழமை) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல் பகத்கீ கோதி-மன்னார்குடி அதிவிரைவு ரெயில் (வண்டி எண்-22673) வரும் 11-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
மேல்மருவத்தூர்-விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரெயில் (06725) முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையேயும், விழுப்புரம்-மேல்மருவத்தூர் முன்பதிவில்லா மெமு ரெயில் (06726) விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையேயும் நாளை மற்றும் 13,20,22,27,29 ஆகிய தேதிகளில் என 6 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல் காரைக்குடி-திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06888) 9, 23 ஆகிய தேதிகளில் குமாரமங்கலம்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஈரோடு-திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06810) 9, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு பிறகு புறப்படும்.
திருச்சி-ஸ்ரீ கங்காப்பூர் விரைவு ரெயில் (22498) 12-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு ஹூப்ளி கோட்டத்தில் நிறுத்தப்பட்டு அதன் பிறகு இயக்கப்படும்.
பெரோஸ்பூர்-மண்டபம் ஹம்ஸபர் விரைவு ரெயில் (20973) 13-ந் தேதியும், மண்டபம்-பெரோஸ்பூர் விரைவு ரெயில் (20974) 16-ந் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.
மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது.
- தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தை சி.ஆர்.சி டெப்போ அருகில் எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் முனீஸ்வரர், நாகம்மன் சன்னதிகளும் பரிவார தெய்வங்களாக உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இங்கு சுமார் 40 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது.
இந்நிலையில் இந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் பால் வடிந்தது. தொடர்ந்து இடைவிடாமல் பால் வடிந்து வருகிறது.
தகவல் அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டு வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை கண்டு வியந்து தரிசனம் செய்து வருகின்றனர். பலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.
இது பற்றி பக்தர்கள் கூறும்போது, காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது. தற்போது 3 இடங்களில் வடிந்து ஓடி கொண்டிருக்கிறது என்றனர்.
தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது.
- பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- பொங்கலுக்கு பின் 16.1.24 முதல் 18.1.24 வரை அவரவர் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல சென்னை தடத்தில் 1460 சிறப்பு பஸ்களும் பிற தடங்களில் 1151 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை, 16-ந் தேதி மாட்டுப்பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் என அடுத்தடுத்து தொடர் விடுமுறை நாட்கள் வருகிறது.
இது தவிர 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) வாரவிடுமுறை என்பதால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது.
இதனால் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி 11-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 14-ந் தேதி (ஞாயிறு) வரை கூடுதலாக சிறப்பு பஸ்கள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
இதேப்போல் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.
மேலும் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது .
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பஸ்கள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது .
மேலும், பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில்சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
பொங்கலுக்கு முன் 11.1.2024 முதல் 14.1.2024 வரை 4 நாட்களுக்கு சென்னையிலிருந்து மேற்படி இடங்களுக்கு 1850 சிறப்பு பஸ்களும், கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி தடங்களில் 1295 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 3145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அதேபோன்று பொங்கலுக்கு பின் 16.1.24 முதல் 18.1.24 வரை அவரவர் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல சென்னை தடத்தில் 1460 சிறப்பு பஸ்களும் பிற தடங்களில் 1151 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
எனவே பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் சிரமமம் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும் . மொபைல் செயலி மூலமும் முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க.வில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நடந்து கொண்டு இருக்கிறது.
- மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.813 கோடி வழங்கி உள்ளது.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை நேற்று மாலை தொடங்கினார்.
அவருக்கு வழிநெடுகிலும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் அண்ணாமலை பேசுகையில்:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் நம் நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

தி.மு.க.வில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு திருக்குறள், தமிழ் மொழி இருக்கைகள், காசி தமிழ் சங்கம், 46 சங்க இலக்கியங்கள் என மொழி பெயர்ப்புக்கு ரூ. 700 கோடி செலவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தமிழை புகுத்தி வருபவர் பிரதமர் மோடி.
வருகிற தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அமைத்து கும்பகோணம் மகாமகத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியா முழுவதும் ஒரு கோடி மக்கள் திரண்டு மகாமக விழாவை சிறப்பாக நடத்துவோம்.
மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.813 கோடி வழங்கி உள்ளது. நடப்பாண்டில் மத்திய அரசு மேலும் ரூ. 900 கோடி வழங்கி உள்ளது. மொத்தம் ரூ. 1,713 கோடி செலவு செய்யப்படாமல் தமிழக அரசு கணக்கில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
- பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு பிறகு அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக திருவையாறு பகுதியில் விளையும் கரும்புகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. ஆண்டுதோறும் திருவையாறு மற்றும் சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பகுடி, நடுபடுகை, நடுக்காவேரி பகுதிகளில், பொங்கலுக்கான செங்கரும்பு ஆண்டுதோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்படும்.
இப்பகுதிகளில் விளையும் கரும்பின் சுவையும், தன்மையும் சிறப்பாக இருப்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஒரு மாதத்திற்கு முன்பே கரும்பை பார்த்து, முன்பணமும் விவசாயிகளிடம் கொடுத்து சென்று விடுவார்கள்.இதனால் தான் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கரும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டும் நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
ஆனால் பருவநிலை மாற்றம், மற்ற மாவட்டங்களில் பெய்த பருவமழையில் பாதியளவு கூட தஞ்சை மாவட்டத்தில் பெய்யாதது போன்ற காரணங்களால் பத்து மாத பயிரான பொங்கல் கரும்பு தற்போது 6 அடிக்கு மேல் வளந்திருக்க வேண்டிய நிலையில் மூன்று அடிக்கு மேல் வளராமல், தோகை பழுப்பு நிறமாக மாறி உள்ளது. மேலும் பூச்சி தாக்குதலால் ஒரு கரும்பு பாதித்தால், அருகில் உள்ள மற்ற கரும்புகள் பாதிப்பை சந்தித்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட கரும்புகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கூடுதல் செலவு செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே காவிரியில் போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை விளைச்சல் கடுமையாக சரிவை சந்தித்தது. சம்பா, தாளடியும் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இருக்குமா என கேள்விக்குறி உள்ளது. அதேபோல் தற்போது பொங்கல் கரும்பு விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து நடுப்படுகையை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறும்போது:-
இந்தாண்டு ஏற்பட்ட பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை செலவு செய்தும், பூச்சி தாக்குதலால் பாதிப்பு கரும்புகளை அழிக்கும் நிலை உள்ளது.
ஒரு ஏக்கரில் பயிரிடப்படுள்ள கரும்பு விதைகள், 50 சதவீதம் முற்றிலும் வீணாகி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கரும்பை வாங்க ஆர்வம் காட்டாமல், பயிரை பார்த்து விட்டு திரும்பி சென்று விடுகிறார்கள். இருப்பினும் நல்ல முறையில் உள்ள கரும்பை காப்பாற்ற போராடி வருகிறோம். தோட்டக்கலைத்துறையினர் பூச்சி தாக்குதலுக்கு என்ன காரணம், என்ன வகையான நோய் என கண்டறிய வேண்டும்.
தமிழக அரசு பொங்கல் தொகுப்பில், எங்கள் பகுதியில் நல்ல முறையில் இருக்கும் கரும்பை கொள்முதல் செய்தால், எங்களுக்கு நிவாரணம் வழங்கியது போல் இருக்கும். 50 சதவீதம் செலவு தொகையாவது கிடைக்கும் என்றார்.
- பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.
- 24 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் டிரைவர் உள்பட 28 பேர் இருந்தனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அவில்தார் சத்திரம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.
இந்த விபத்தில் டிரைவர், பயணிகள் என 24 பேர் படுகாயமடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 24 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது.
- உப்பு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் சில நாட்கள் விட்டு விட்டு தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்தது. அதன் பின்னர் மழை இன்றி கோடை காலம் போல் வெயில் சுட்டெரித்து வந்தது. மேலும் காலை நேரங்களில் பனிப்பொழிவும் காணப்பட்டது.
இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி தஞ்சையில் நேற்று மதியம் கனமழை கொட்டியது. இடைவிடாமல் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. குறிப்பாக ஒரத்தநாட்டில் அதி கனமழை பெய்தது. இங்கு அதிகபட்சமாக 86.10 மி.மீ. மழை கொட்டியது. இதேபோல் பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவையாறு, வெட்டிக்காடு, மதுக்கூர், பேராவூரணி, அதிராம்பட்டினம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது.
தொடர் மழையால் பாபநாசம் அருகே உள்ள வளத்தாமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த இளையராஜா மனைவி ராஜேஸ்வரி என்பவரது குடிசை வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து அரசின் உரிய நிவாரணம் வழங்க தாசில்தார் மணிகண்டன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 5 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. தொடர் மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. மாவட்டத்தில் அதிகபட்சமாக நன்னிலம், குடவாசலில் 50 மி.மீ. மழை கொட்டியது.
நாகை மாவட்டத்தில் பகல் முழுவதும் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருக்குவளையில் 83 மி.மீ. மழை கொட்டியது. இதேபோல் நாகை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி , தலைஞாயிறு, வேதாரண்யம், கோடியக்கரையிலும் கனமழை பெய்தது. தொடர் மழையால் மாவட்டத்தில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. உப்பு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து 4 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கின.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரே நாளில் 1650.48 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-
ஒரத்தநாடு-86.10, திருக்குவளை-83, செம்பனார்கோவில்-62.4, வேளாங்கண்ணி-62, மயிலாடுதுறை-61, பட்டுக்கோட்டை-60,
திருவிடைமருதூர்-52.80, மதுக்கூர்-52.60, நன்னிலம்-50, திருவாரூர்-30, சீர்காழி-41, தரங்கம்பாடி-29.3, தஞ்சாவூர்-27.20.
டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. போதிய காவிரி நீர் இல்லாததால் பயிர்கள் வாடி வந்த நிலையில் தற்போது பெய்த கனமழையால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இருந்தாலும் தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தால் மட்டுமே பயிர்களுக்கு முழுமையான தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
- வருகிற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
- நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் இன்று 10 மாவட்டங்களிலுள்ள அ.ம.மு.க சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்பதாகக் கூறுவது ஊக அடிப்படையிலான தகவல். வருகிற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்சனை. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். இது சட்டத்துக்கு புறம்பானது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தஞ்சையில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஒரேநாளில் ஆசிரியை, தபால் ஊழியர் வீடுகளின் கதவை உடைத்து நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் பற்றிய விவரம் வருமாறு ;-
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி கே.எம்.ஏ. உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 46). இவர் பொய்யுண்டார் கோட்டையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதேப்போல் தஞ்சை விளார்ரோடு நியுபாத்திமா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுமதி (46). இவர் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தார். பதறியடித்து பார்த்தபோது பீரோவை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் மகேஸ்வரி, கோமதி தனி தனியாக அளித்த புகார்களின் பேரில் தமிழ்பல்கலைக்கழகம் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது வீடுகளிலும் ஒரே கும்பல் கொள்ளையடித்தனரா ? அல்லது வேறு வேறு கும்பல் கொள்ளையடித்தனரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. தஞ்சையில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தொடக்க நாளான 26-ம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது.
- தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 30-ந் தேதி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியாகராஜர் சுவாமிகள் . இவரை தியாக பிரம்மம் என அழைக்கிறார்கள்.
இவருடைய சமாதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இசை கலைஞர்கள் ஒன்று கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சி தியாகராஜர் ஆராதனை விழா என அழைக்கப்படுகிறது.
அதன்படி தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 26-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
இதை முன்னிட்டு திருவையாறு தியாகராஜர் ஆசிரமத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா அடுத்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. தொடக்க நாளான 26-ம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. விழாவில் சபையின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி, மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 30-ந் தேதி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடைபெறுகிறது. அப்போது உலகெங்கிலும் உள்ள சங்கீத வித்வான்கள், இசைக் கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






