என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    மத்தூரில் ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை மற்றும் பணத்தை திருட முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் ஒருவரின் மனைவி நேற்று மாலை தருமபுரியில் இருந்து மத்தூர் செல்லும் தனியார் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவரது கையில் ஒரு பையை வைத்திருந்தார். அதில் 7 பவுன் நகையும், ரூ.30 ஆயிரம் பணமும் வைத்திருந்தார்.

    பஸ்சில் அவர் அருகே 2 பெண்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும், நைசாக போலீஸ்காரர் மனைவியிடம் பேச்சு கொடுத்தனர். பையை கையில் வைத்துகொண்டு எதற்கு சிரமப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். எங்களிடம் கொடுங்கள் என்றனர். இதை நம்பிய அவரும், பையை அந்த 2 பெண்களிடம் கொடுத்தார்.

    இந்த நிலையில் பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி, 2 பெண்களும் பையை திறந்து நகை- பணத்தை திருட முயன்றனர். இதை கவனித்த போலீஸ்காரர் மனைவி கூச்சல் போட்டார்.

    உடனே சக பயணிகள், அந்த 2 பெண்களையும் தப்ப விடாமல் பிடித்து விட்டனர். பின்னர் அவர்களை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கட்டமடவு பகுதியை சேர்ந்த குரு என்பவரின் மனைவி காயத்ரி (வயது 22) எனவும், அதே போல் திருவண்ணாமலை மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த மணி என்பவர் மனைவி பிரியா (34) எனவும் தெரிய வந்தது.

    இவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் பண்டிகை மற்றும் திருவிழாக்களில் கூட்டமான இடங்களுக்கு சென்றும் நோட்டமிட்டு பெண்களிடம் நகை, பணத்தை திருடி வந்துள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
    கொரோனா ஊரடங்கு எதிரொலியால் ஓசூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்கள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், மலர் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திறந்தவெளி மற்றும் பசுமைக்குடில்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜாமலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் உலகத்தரம் வாய்ந்த ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் உள்ளிட்ட முக்கிய பண்டிகை கொண்டாட்டங்களுக்காக பல்வேறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், உள்நாட்டு சந்தைக்கும் அனுப்பப்படுகிறது.

    கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய 2 ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக ரோஜா வர்த்தகம் கடுமையாக பாதிக் கப்பட்டது. முழு ஊரடங்கால் ஓசூர் பகுதிகளிலிருந்து ரோஜாமலர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகாமல் தேக்கமடைந்து குப்பைகளில் கொட்டப்பட்டு விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்த விவசாயிகளுக்கு கடந்த சில மாதமாகவே ரோஜா மலர்களுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது.

    ஓசூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வரும் ரோஜா மலர்களுக்கு, 12 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா மலர்கள் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விலை கிடைத்தது. இதனால் மலர் உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா காலத்தில் இழந்த நஷ்டத்தை விவசாயிகள் மீட்டெடுத்தனர். தற்போது மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஓசூர் பகுதியில் ரோஜா மலர்களின் விலை மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

    500 முதல் 600 ரூபாய்க்கு விற்பனையான ரோஜா மலர்கள், தற்போது ஊரடங்கால் 50 முதல் 60 ரூபாய் வரை என 10 மடங்கு விலை வீழ்ச்சியடைந்து விற்பனையாகிறது. கடந்த ஒரு வார காலமாக இந்த விலை உள்ளது.

    இதுகுறித்து ஓசூர் பகுதி மலர் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் கூறும்போது, ‘‘2 ஆண்டுகளாக சரியான விலை இல்லாமல் நஷ்டத்தில் இருந்த நாங்கள், இப்போது தான் நோய்களில் இருந்து செடிகளை காப்பாற்றி நல்ல மகசூல் கிடைக்க செய்துள்ளோம். வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதற்காக மலர்களை தயார் செய்து வருகிறோம், கொரோனா நோய் தொற்று அதிகரித்தால், காதலர் தினமும் எங்களுக்கு கை கொடுக்காது என தெரிவித்தனர்.
    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் . 101 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினார் .
     
    இதுவரை மாவட்டத்தில் 46 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் . அவர்களில் 44 ஆயிரத்து 107 பேர் சிகிச்சையில் குணம் அடைந்தனர் . 

    தற்போது 1,683 பேர் சிகிச்சையில் உள்ளனர் . இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 362 ஆக உள்ளது.
    காவேரிப்பட்டணத்தில் கொரோனா ஊரடங்கின்போது போலீசார் வாகன சோதனை ஈடுபட்டபோது விதிமுறையை மீறி ஊர் சுற்றிய 30 பேருக்கு அபராதம் விதித்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    கொரானா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

    இதையொட்டி நேற்று முழு ஊரடங்கு முன்னிட்டு காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள சேலம் மெயின்ரோடு, பாலக்கோடு சந்திப்பு சாலை, பஸ் நிலையம், உள்ளிட்ட பரபரப்பு மிகுந்த அனைத்து சாலைகளிலும் மருந்து, பால் உள்ளிட்ட கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. 

    சேலம் மெயின்ரோடு முழுவதும் தடுப்புகளை அமைத்து கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. விஜயராகவன்  தலைமையில் காவேரிப்பட்டணத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

    காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி,  சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், ராஜா மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

    இதில் முகக்கவசம் அணியாமல் சென்றது உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய 30 பேருக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அடிக்கடி மது மற்றும் குட்கா பொருட்களை மர்ம கும்பல் கடத்தி வருகின்றனர்.
    ஒசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சின்ன எலசகிரி மாரியம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அந்த வழியாக, அனேகல் தாலுகா, அத்திபள்ளியை சேர்ந்த முத்து (வயது 48) மற்றும் பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்த   முரளி (30) ஆகிய இருவரும்  காரில் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களை மதுவிலக்கு பிரிவு போலீசார்   தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் கர்நாடக மதுபாட்டில்கள் 19 லிட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் விவசாய சார்ந்த தொழில்கள் அதிகம் நடைபெறுகிறது.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் புதினா பயிரிடப்படுகிறது. 

    இங்கு விளையும் புதினா சென்னை, திருச்சி, மதுரை, பெங்களூர், சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    மருத்துவ குணங்கள் கொண்ட புதினா 50 கட்டு கொண்ட ஒரு மூட்டை 50 ரூபாய்க்கு விலை போகிறது. இதற்கு அறுவடைக்கூலி, லாரி வாடகை உள்பட ஒரு மூட்டைக்கு 35 ரூபாய் செலவாகிறது. 

    இதனால் ஒரு மூட்டைக்கு 20 ரூபாய் மட்டுமே வருவாய் கிடைப்பதால் புதினா பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். 

    சூளகிரி தாலுகா பகுதியில் ஒட்டர்பாளையம், பிண்டே கானப்பள்ளி, கீரனப்பள்ளி, நஞ்சேநட்டி, பங்காநத்தம், மாரண்டஅள்ளி உள்பட பல பகுதிகளில் புதினா விளை விக்கப்படுகிறது.

    இங்கு விளையும் புதினாவை அறுவடை செய்து ஒரு மூட்டையில் 50 கட்டுகளை கட்டிய சூளகிரி கொண்டு வந்து லாரிகள்  மூலம் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. தொடர்ந்து புதினா விலை குறைந்து வருவதால் அதை பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர். 

    இதுகுறித்து சூளகிரி பகுதியைச் சேர்ந்த புதினா விவசாயிகள் கூறியதாவது:-

    சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் புதினாவை பயிரிட்டு வருகிறார்கள். குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு இங்கு இல்லாததால் அறுவடை செய்யப்பட்ட உடனே புதினாவை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். 

     மேலும் விலை மிகவும் குறைந்து இருந்தாலும் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில்தான்  வியாபாரிகள் உள்ளனர். எனவே சூளகிரி பகுதியில் குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கை திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும்
    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், சோமார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எருது விடும் விழா நடைபெற்றது. இதே போல சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களிலும் எருது விடும் விழா நடந்தது.
    கிருஷ்ணகிரி:

    பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

    ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா சிறப்பாக நடை பெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியில் எருது விடும் விழா நேற்று மாலைநடந்தது. இதையொட்டி சாலையின் இருபுறமும் தடுப்பு கம்புகள் வைத்து கட்டப்பட்டு இருந்தன. தடுப்புகளுக்கு நடுவே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாடுகள் சீறி பாய்ந்தபடி வந்தன. 300-க்கும் மேற்பட்ட மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

    இதே போல திப்பனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கும்மனூரில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திப்பனப்பள்ளி, கும்மனூர், எண்ணேகொள், தாசிரிப் பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 300-க்கும் மேற்பட்டகாளைகள் கலந்து கொண்டன. கும்மனூர் எல்லைகல் அருகே ஆடு பலியிட்ட பின்னர் மாரியம்மன் கோவிலிருந்து கும்மனூர் - திப்பனப்பள்ளி சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கு நடுவே காளைகள் சீறி பாயந்தபடி வந்தன. அவற்றை இளைஞர்கள் விரட்டி சென்றார்கள். இதில் சிறந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    அதே போல கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், சோமார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் எருது விடும் விழா நடைபெற்றது. இதே போல சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களிலும் எருது விடும் விழா நடந்தது. இதை ஏராளமானபொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 

    ஓசூரில் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை திருடி கொண்டிருந்தபோது வாலிபர் கையும் களவுமாக பிடிப்பட்டார்.
    ஓசூர்:

    ஓசூர் ஜனனி கார்டன் பகுதியில் பாரத வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது.
     
    இந்த மையத்தின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை நேற்று வாலிபர் ஒருவர் திருடிக் கொண்டிருந்தார். 

    இதனை, ஐதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலக அதிகாரிகள் கண்காணித்து, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    அவர்கள் உடனடியாக, ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்ததன்பேரில் போலீசார் அங்கு சென்று, அந்த வாலிபரை கையும், களவுமாக பிடித்தனர். 

    பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், ஓசூர் அருகே அலசநத்தம் பகுதியை சேர்ந்த குருமூர்த்திரெட்டி என்பவரது மகன் ரவி மோகன் (வயது31) என்பதும், டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து போலீசார் ரவி மோகனை கைது செய்து, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள சிசிடிவி கேமராவை பறிமுதல் செய்தனர்.
    கல்லாவி அருகே திருமணமாகி 8 மாதங்கள் ஆனநிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்தங்கரை: 

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள அம்மன் கோவில்பதி கொல்ல கொட்டாய் பகுதியை சேர்ந்தவர்ஜெகன். 

    இவரது மனைவி அருள்மொழி (வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகிறது. கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு ஜெகன் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த அருள்மொழி மனவேதனையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 8 மாதத்தில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    ஓசூரில் பார்சல் சர்வீஸ் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை மர்மகும்பல் திருடி சென்றது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 38), இவர் தனியார் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். 

    இந்தநிலையில், பொங்கல் பண்டிகைக்காக அவர் குடும்பத்துடன், மனைவியின் ஊரான அரூருக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று அவரது வீட்டுக் கதவு நீண்டநேரம் திறந்தநிலையில் கிடந்ததை கண்ட  பக்கத்து வீட்டுக்காரர் சிவா என்பவர், சரவணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். 

    இதையடுத்து அவர் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம கும்பல் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவையும் உடைத்து உள்ளே இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 4 சவரன் தங்க நகைகளையும், மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

     பின்னர் இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி மீது குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதிக்குட்பட்ட மாரச்சந்தி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 30). 

    அதேபகுதியில் குடியிருந்து வந்தவர் சுரேஷ் என்ற கெம்பன். இவர்கள் இருவரும் நண்பர்கள் மற்றும் பிரபல ரவுடிகள்  ஆவர். இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த நவம்பர் 20-ந் தேதி இரவு மாரசந்திரம் கிராமத்தில் இரவு ஏலச்சீட்டு நடந்துள்ளது.

    இதில்  மகேஷ்குமாருக்கும் கெம்பனுக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ்குமார்  மற்றும் நண்பர்கள் சேர்ந்து கெம்பனை குத்திக்கொலை செய்தனர் .

    இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்குமாரைக் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
    கைதான மகேஷ்குமார்

    இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்பேரில் மகேஷ் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவு பிறப்பித்தார். 

    இதற்கான நகல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகேஷ்குமாரிடம் வழங்கப்பட்டது.

    மத்தூர் அருகே சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்வை விடுத்து பொதுமக்கள் இன்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மத்தூர்:
     
    கிருஷணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கண்ணன்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கெட்டம்பட்டி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் வரவில்லை.  

    இதை கண்டித்து கண்ணன்டஅள்ளி பகுதியில் உள்ள திருவண்ணாமலை, பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் கெட்டம்பட்டி பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  இன்று காலை திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இது குறித்து தகவலறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். 

    இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் மறியல் போராட்டம் காரணமாக  அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×