என் மலர்tooltip icon

    ஈரோடு

    • நம்பியூர் பகுதியில் 2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர்.
    • இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேணுகோபால், வெற்றிவேல்.

    வேணுகோபால் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வெற்றிவேல் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேணு கோபால் தனது வீட்டை நேற்று முன்தினம் பூட்டி விட்டு தனது மற்றொரு வீடான திருப்பூரில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    நேற்று தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ மற்றும் அறைகளில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் வெற்றிவேல் தனது வீட்டை இந்திராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது வீட்டிலும் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோ மற்றும் அறைகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.

    2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர். மேலும் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்தோடு அருகே வயிற்று வலி குணமாகவில்லை என கூறி வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் டீயில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சக்தி மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சோபனா (37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சோபனாவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்றுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சோபனா தற்கொலை செய்ய முடிவு எடுத்து சம்பவத்தன்று டீயில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார்.

    இதையடுத்து சோபனாவை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

    அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்தியூரில் சிறுமியை திருமணம் செய்து கர்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பவானி:

    அந்தியூர் காளியப்பா வீதியை சேர்ந்தவர் சிவசக்தி (24). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு சிவசக்தி தன்னுடைய மனைவியை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அப்போது அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் 17 வயது சிறுமி என தெரிய வந்தது.

    இதை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் விசாரணை நடத்தி பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் சிவசக்தி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்ற போது சிவசக்தி தலைமறைவாகி விட்டார்.

    இதை தொடர்ந்து தலை மறைவான சிவசக்தியை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

    இநத நிலையில் சிவசக்தி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று சிவசக்தியை போக்சோ சட்ட த்தின் கீழ் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரை ஈரோடு மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
    • இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.

    ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, துணை இயக்குனர் (மாநில திட்டம்) அசோக், ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வின் போது கூடுதல் இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:

    இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    உளுந்து விதை பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு உற்பத்தி மானியம் வழங்குகிறது. இவ்விதை பண்ணை கலவன்கள் இன்றி வயல் தரத்தில் தேர்ச்சி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யப்பட்டு விதை சுத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    விதை சுத்தி நிலையத்தில் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலைய த்துக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனையில் பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்றதும் சான்றட்டை இணைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்ட தீணைப்பு துறை அலுவலர் உத்தரவுப்படி தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இப்பயிற்சியில் எதிர்வரும் மழை வெள்ள காலங்களில் தங்கள் உயிரை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கொடுமுடி மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.
    • இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து 10 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 15 டன் தக்காளி லோடு விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. நேற்று வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையானது. நேற்று 15 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

    இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து 10 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. நேற்றைவிட இன்று வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் அதிகரித்தது. இன்று சுமாரான தக்காளி ஒரு கிலோ ரூ.45-க்கும், நல்ல தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.

    ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

    இதனால் உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிடியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாம்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம்,கெத்துமுட்டி பாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், அவல்பூந்துறை, கனகபுரம், கவுண்டிச்சிபாளையம், செங்காட்டுவலசு, பூங்காட்டுவலசு, சென்னிமலைபாளையம், புதுப்பாளையம் மற்றும் பல்லாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • இதய பிரச்சனை காரணமாக முதியவர் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எண்ணமங்கலம் செல்லாம்பாளையம் மேலூரை சேர்ந்தவர் கந்தசாமி(80). இவருக்கு இதய பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் கந்தசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.

    சம்பவதன்று வீட்டில் இருந்து வெளியேறி வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றார். அங்கு அவரது லுங்கியால் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து பர்கூர் போலீசார் விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் மூச்சு விட சிரமப்பட்டு திடீரென பலியானார்.
    • இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் பேரவூரணி சங்கமங்களம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (22). இவர் ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் நேரு வீதியில் தங்கி தனியார் கார்மெண்சில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் அவரது அறையிலேயே இருந்தார். அன்று மாலை அவரது சகோதரர் வந்து பாலமுருகனை பார்த்தபோது மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    இதையடுத்து பாலமுருகனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாலமுருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடைக்காலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் அதிகளவில் வந்தது.
    • அதிகாலை முதலே மீன்களை வாங்க மக்கள் ஆர்வத்துடன் மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர். இதனால் இன்று மீன் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனிபாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன.

    இங்கு கடல் மீன்கள் அதிகளவில் விற்கப்படு வதால் இங்கு எப்போதும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கு ம். குறிப்பாக வார இறுதி நாட்களான ஞாயிற்று க்கிழமை அன்று வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வந்தது. இதனால் ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

    12 டன் முதல் 15 டன் வரை வரத்தாகி வந்த நிலையில் மீன்பிடி தடை காலங்களில் வெறும் 6 டன் வரை மட்டுமே மீன் வரத்தாகி வந்தது. மேலும் கேரளாவில் இருந்து மட்டுமே மீன்கள் வந்தது.

    இந்நிலையில் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இதனால் கடந்த 15-ந் தேதி முதல் தமிழக மீனவர்கள் மீண்டும் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இதன் காரணமாக ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தடைக்காலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்று க்கிழமை என்பதால் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் அதிகளவில் வந்தது. இன்று 12 டன் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    இதன் காரணமாக மீன்கள் விலையும் அதிகரித்துள்ளது. வஞ்சரம் மீன் ஒரு கிலோ கடந்த வாரம் வரை ரூ. 850 முதல் 900 - வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ .300 அதிகரித்து ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1, 200-க்கு விற்பனையானது. இதேபோல் மற்ற மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    கிளி - 500, வவ்வால் - 700, விளா- 350, மஞ்சள் சாரை - 500, சீலா - 250, அயிலை - 300, சங்கரா - 400, மத்தி- 200, கொடுவா - 350, இறால் - 600, நண்டு - 400.

    இதே போல் கருங்க ல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து இன்று அதிகமாக இருந்தது.

    அதிகாலை முதலே மீன்களை வாங்க மக்கள் ஆர்வத்துடன் மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர். இதனால் இன்று மீன் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. 

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 12 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • தற்போது தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 12 நாட்களுக்கு மேலாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 953 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போது தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளனர்.

    ×