என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த புங்கர் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 40). விவசாயி அதே பகுதி ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (37).
மகேந்திரன் ஆனந்தனுக்கு 2 லட்சம் பணம் கடன்கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பணம் தொடர்பாக அவர்களிடையே முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகேந்திரன் வீட்டுக்கு ஆனந்தன் இரவு சென்றார் அங்கு மகேந்திரன் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு கோபத்துடன் அரிவாளுடன் வந்த ஆனந்த் மகேந்திரனை சரமாரியாக வெட்டினார்.
இதில் மகேந்திரன் அலறினார். உடல் முழுவதும் ரத்தம் கொட்டியது. உடனே அங்கிருந்து ஆனந்த் தப்பி ஓடிவிட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்த மகேந்திரனை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கொலையாளி ஆனந்தை பிடிக்க வலைவீசி உள்ளனர்.
இந்த கொலைக்கு பணம் கொடுங்கல்-வாங்கல் காரணமா?அல்லதுகள்ளக் காதல் காரணமா? என்றும் போலீசார் விசாரிக்கிறார்கள். கள்ளக்காதல் காரணமாகத்தான் இந்த கொலை நடந்திருக்ககூடும் என போலீசார் கருதி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு நீர் ஆதரமாக உள்ள பவானிசாகர் அணையில் கடந்த ஒரு மாதமாக 41 அடியில் நீர் மட்டம் இருந்தது. தண்ணீர் வரத்து வினாடிக்கு சராசரியாக 100 கனஅடி இருந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்டு உள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு கூடுதல் தண்ணீர் திறக்கபட்டது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையில் இருந்து ஆற்றுக்கு குடிநீருக்காக வினாடிக்கு 565 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர்வரத்து 94 கனஅடியாக இருந்தது.
அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
இதனால் 41 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 அடியாக குறைந்து இன்று காலை 39 அடியாக குறைந்தது. தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேலும் அணையின் நீர்மட்டம் குறைய கூடும் என்பதால் விவசாயிகள் மழையை நம்பி எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
பு.புளியம்பட்டியில் பவானிசாகர் ரோட்டில் பழைய மார்க்கெட் அருகே டாஸ்மாக்கடை உள்ளது. அந்த பகுதியில் இருந்து மற்ற மதுக்கடைகள் அகற்றப்பட்டுவிட்டன.
இதனால் பழைய மார்க்கெட் அருகில் உள்ள மதுக்கடையில் குடிமகன்களின் கூட்டம் அலை மோதுகிறது. குடிமகன்கள் மக்கள் நடமாடும் பகுதியிலும் மது குடிப்பதை வாடிக்கையாக்கி விட்டனர்.
எனவே மதுக்கடைக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நேற்று அவர்கள் அந்த மதுக்கடை முன்பு திரண்டனர். மதுக்கடையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் 50 பெண்கள் உள்பட 150 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் டாஸ்மாக உதவி மேலாளர் சுப்புராஜ், சத்தியமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அவர்களிடம் பெண்கள் மதுக்கடையை உடனே அகற்றக்கோரி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 15 நாளில் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி மேலாளர் சுப்புராஜ் உறுதி அளித்தார்.
இந்த உறுதி மக்களிடம் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது பற்றி பொதுமக்கள் கூறும்போது, ‘‘பொது மக்களுக்கு பாதிப்பை கொடுக்கும் இந்த மதுக்கடையை இன்னும் 15 நாட்களில் அகற்றுவோம் என்று அதிகாரி எழுதி கொடுத்துள்ளார்.
எனவே 15 நாளில் மதுக்கடை அகற்றப்படும் என்று நம்புகிறோம். ஒரு வேளை கடையை மூடாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.
ஈரோடு டவுன் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60). இவரது மகன் பன்னீர் செல்வம்.
இவருக்கு வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள பெரியசாமி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுப்பதற்காக இன்று காலையில் புறப்பட்டு மாருதி காரில் தர்மபுரியை நோக்கி சென்றார். அவருடன் அவரது தம்பி ராமசாமியும் காரில் சென்றார்.
கார் இன்று காலை 9 மணி அளவில் புளிக்கரை ஏரி அருகே சென்றபோது எதிரே வந்த கல்லூரி வாகனமும் அந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் காரில் வந்த தம்பி ராமிசாமி பலத்த காயம் அடைந்தார்.
விபத்துக்குள்ளான அந்த கல்லூரி வாகனத்தில் 10 மாணவ, மாணவிகள் இருந்தனர். இன்று காலையில் தேர்வு எழுதுவதற்காக அந்த கல்லூரி வாகனத்தில் வந்தனர். அவர்களுக்கு இந்த விபத்தில் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
காயம் அடைந்த ராமசாமி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் இன்று தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்புறம் இருந்து ஊர்வலமாக வந்தனர்.மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை தாங்கினார்.
மாநில துணை பொதுச் செயலாளர் சபாபதி, இளம் புலிகள் மாவட்ட செயலாளர் ராமு, பொறுப்பாளர்கள் ஆதி அர்ஜூனன், மணிகண்டன் உள்பட கலந்து கொண்டனர்.
அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கேட்டை மூடினர். இதனால் தமிழ் புலிகள் கட்சியினர் உள்ளே செல்ல முடியாமல் நுழைவு வாயிலில் நின்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தமிழ் புலிகள் கட்சியினரை கைது செய்தனர்.30 பெண்கள் உள்பட 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடை ஒன்றில் பணிபுரிந்தவர் விக்னேஷ் (வயது 23). இவரும் அதே கடையில் பணிபுரியும் சக ஊழியர்கள் 4 பேரும் என மொத்தம் 5 பேர் நேற்று விடுமுறை என்பதால் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா புறப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபி வந்த அவர்கள் பிறகு அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சென்றனர். அங்கு தண்ணீர் அருவிபோல் கொட்டி கொண்டிருந்தது.
பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றுக்கு குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதை கண்ட நண்பர்கள் 5 பேருக்கும் அணையில் குளிக்க ஆசை ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் அணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
இதில் 4 பேர் குளித்து விட்டு கரைக்கு திரும்பினர். ஆனால் விக்னேஷ் மட்டும் வரவில்லை. இதனால் நண்பர்கள் தவித்தனர். கதறி அழுதனர்.
அணையின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததால் விக்னேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பங்காளபுதூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் விக்னேஷ் உடலை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இன்று (திங்கட்கிழமை) காலை 2-வது நாளாக உடலை தேடினர். அப்போது குளித்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி கரையில் விக்னேஷ் உடல் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பெருந்றையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எழுச்சி ஏற்பட்டது போல் இப்போது மதுக்கடைகளுக்கு எதிராக இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. இனிமேல் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் ஒரு மதுக்கடை கூட திறக்க முடியாது.
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்து வருவதாக முதல்- அமைச்சரும் அவரது அமைச்சர்களும் சொல்லி வருகிறார்கள். அதுதான் இல்லை தமிழகத்தில் ஒரு ஆட்சி நடப்பதாகவே தெரியவில்லை.
வருமானவரித்துறை சோதனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கி உள்ளார். மற்றொரு அமைச்சரான காமராஜ் மீது மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது. மறைந்த ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால் இவர்கள் 2 பேரும் அமைச்சர்களாக நீடிக்க முடியுமா? இவர்கள் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்காதது ஏன்? உடனடியாக அவர்களை பதவி விலக சொல்ல எடப்பாடி பழனிச்சாமி தயாரா?
ஈரோட்டில் ஜூன் 6-ந்தேதி நதிகள் இணைப்பு மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் டெல்லியில் நடந்த அறப்போராட்டத்தில் பங்கேற்ற தென்னிந்திய நதிநீர் இணைப்பு குழு தலைவர் அய்யாக்கண்ணுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படும்.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
பவானி:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கோடைமழை பெய்தது.
பவானியில் நேற்று இரவு இடி மின்னல் மற்றும் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பவானியில் உள்ள குருநாத கவுண்டர்வீதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மரங்கள் முறிந்து மின்சார கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து மின்கம்பங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது.
இதுபோல் பவானி தாசில்தார் அலுவலகம் அரசு மருத்துவமனை அந்தியூர் சாலை பவானி காளிங்க ராயன்பாளையம் அருகேயுள்ள மேட்டுநாசுவம் பாளையம் பகுதி போன்ற இடங்களில் மரங்கள்மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததில் இரவு முழுவதும் மின் சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர் அநேக இடங்களில் மின்கம்பங்களின் அடி பாகங்கள் உடைந்த நிலையிலேயே உள்ளது. அதனால் தான் இயற்கையின் சீற்றத்தை மின் கம்பங்களால் தாக்குப்பிடிக்க முடிய வில்லை என பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.
இதனால் மிகவும் மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்களை நட வேண்டும் என பவானி நகர மக்கள் மின்வாரியத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு, மறைந்த 12 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கி பேசினார்கள். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.

முன்னதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வறட்சி நிவாரணமாக இதுவரை ரூ.2 ஆயிரத்து 647 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அரசின் செயல்பாடுகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும், செயல் இழந்த அரசாக விளங்குவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். இது முற்றிலும் தவறான கருத்து. தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தளபதியாக மட்டும் தான் இருக்க முடியும். ஒருபோதும் மன்னராக முடியாது. நீட் தேர்வு குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிக்கூடங்களில் உள்ள 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக கூறுகிறார்கள்.
இதுகுறித்து மாணவ-மாணவிகளோ, பெற்றோர்களோ புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் கல்விக்கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தனியார் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெற வேண்டிய சுமார் 2000 ஆப ரேஷன்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சென்னையில் மட்டுமே 2000 ஆபரேஷன்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் டாக்டர்கள் போராட்டம் காரணமாக புறநோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை உள்ளது. டாக்டர்கள் பணிக்கு வராததால் பெண்கள், முதியவர்கள், சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
குழந்தை பிரசவ ஆபரேஷன், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை, மூளம், ஹெர்னியா, டான்சில், குழந்தைகளுக்கான நோய்கள் சிகிச்சை போன்றவை நடைபெறவில்லை.
தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் போராட்டம் நீடித்ததால் இன்றும் சிகிச்சை அளிப்பது பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வில்லை. அவசரமான சிகிச்சையை மட்டும் அவர்கள் மேற்கொண்டனர். இதனால் புறநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றதை பார்க்க முடிந்தது.
மேலும் டாக்டர்கள் ஆபரேஷன்கள் செய்யாமலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவசரமில்லாத ஆபரேஷன்களை அவர்கள் செய்யவில்லை. இதனாலும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
இது பற்றி அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரபிரபு கூறும் போது, ‘‘எங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 3-ந் தேதி முதல் அவசரமில்லாத ஆபரேஷன்களை நாங்கள் செய்யவில்லை.
அந்த வகையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவசரமில்லாத 40 ஆபரேஷன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் எமர்ஜென்சி ஆபரேஷன்களை டாக்டர்களை கொண்டு செய்து வருகிறோம்’’ என்றார்.
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் புற நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், காயங்களுக்கு கட்டு போடுதல், ஊசி போடுதல் உள்ளிட்ட பணிகளுக்காக தனியார் கல்லூரிகளில் இருந்து பயிற்சி நர்சுகள் இன்று காலை வர வழைக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வந்து இருந்தனர். அவர்கள் நோயாளிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து வருகிறார்கள். தனியார் கல்லூரியில் இருந்து பயிற்சி நர்சுகள் வரவழைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அதிகாரிகள், டாக்டர்களிடம் கேட்டபோது எதுவும் கூற மறுத்து விட்டனர்.
மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் கடந்த 19-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2 மணி நேர வேலை புறக்கணிப்பு, தர்ணா, ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இன்று 17-வது நாளாக டாக்டர்கள் போராட்டம் நீடிக்கிறது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர்கள் இன்று வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஏராளமான டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் புற நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
போராட்டம் பற்றி அரசு டாக்டர்கள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரபிரபு கூறியதாவது:-
எங்களது போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும். எங்கள் கோரிக்கை தொடர்பான வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதனை பார்த்துவிட்டு அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும்.
எங்களுக்கு சாதகமான முடிவு வராவிட்டால் நாளை சென்னையில் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக ஈரோட்டில் இருந்து 100 பேர் எனது தலைமையில் இன்று இரவு சென்னைக்கு செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் மழை வெள்ளத்தால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது. அந்த வெள்ள சேதத்துக்கான முழு நிவாரண பணிகள் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த வருடம் வர்தா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் அழிந்தன. அதற்கும் மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை. இந்த வருடம் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக இரு திராவிட கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அமைத்து வருகின்றன. இவர்கள் தண்ணீர் பிரச்சினை தீர ஏதாவது திட்டங்கள் செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
ஈரோட்டில் கனி ராவுத்தர் குளம் உள்ளது. இந்த குளம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 44 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் நிரம்பி பசுமையாக இருந்தது. தற்போது அந்த குளத்தில் 14 ஏக்கர்தான் மிஞ்சி உள்ளது. அதிலும் கோரை புற்கள், சாக்கடை நீர் நிறைந்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. அந்த குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளன.
நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் நடவடிக்கை இல்லை. அந்த 14 ஏக்கர் குளத்தையாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்து அந்த பகுதி மக்கள் தூர் வாரி வருகிறார்கள். ஆனால் அதையும் தடுக்கும் வகையில் காவல் துறையினரை ஏவி தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது. மக்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தற்போதைய முக்கிய பிரச்சினை தொடர்பாக முதல்- அமைச்சரையும், உள்ளாட்சித்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளோம்.
தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சி ஒரு வழி தான் நீட் தேர்வு ஆகும். நீட் தேர்வில் உள்ள சிறு விதி முறைகளை மாற்றம் செய்ய வேண்டும்.
விவசாயிகள் தங்கள் உரிமைக்காகவும், பொதுமக்கள் தண்ணீருக்காகவும் போராடி வருகிறார்கள். அதேபோல அனைத்து துறையிலும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் அதை விட்டு விட்டு மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்த அவசரமாக செயல்படுகிறது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா தனது செல்வாக்கை பயன்படுத்தி காலூன்ற முயற்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில செயலாளர் முத்தரசன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.






