என் மலர்tooltip icon

    செய்திகள்

    புஞ்சைபுளியம்பட்டி அருகே மதுக்கடையை முற்றுகையிட்ட பெண்கள் டாஸ்மாக் அதிகாரியுடன் மோதல்
    X

    புஞ்சைபுளியம்பட்டி அருகே மதுக்கடையை முற்றுகையிட்ட பெண்கள் டாஸ்மாக் அதிகாரியுடன் மோதல்

    புஞ்சைபுளியம்பட்டி அருகே மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரியுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    பு.புளியம்பட்டி:

    பு.புளியம்பட்டியில் பவானிசாகர் ரோட்டில் பழைய மார்க்கெட் அருகே டாஸ்மாக்கடை உள்ளது. அந்த பகுதியில் இருந்து மற்ற மதுக்கடைகள் அகற்றப்பட்டுவிட்டன.

    இதனால் பழைய மார்க்கெட் அருகில் உள்ள மதுக்கடையில் குடிமகன்களின் கூட்டம் அலை மோதுகிறது. குடிமகன்கள் மக்கள் நடமாடும் பகுதியிலும் மது குடிப்பதை வாடிக்கையாக்கி விட்டனர்.

    எனவே மதுக்கடைக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நேற்று அவர்கள் அந்த மதுக்கடை முன்பு திரண்டனர். மதுக்கடையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் 50 பெண்கள் உள்பட 150 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் டாஸ்மாக உதவி மேலாளர் சுப்புராஜ், சத்தியமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அவர்களிடம் பெண்கள் மதுக்கடையை உடனே அகற்றக்கோரி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 15 நாளில் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி மேலாளர் சுப்புராஜ் உறுதி அளித்தார்.

    இந்த உறுதி மக்களிடம் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இது பற்றி பொதுமக்கள் கூறும்போது, ‘‘பொது மக்களுக்கு பாதிப்பை கொடுக்கும் இந்த மதுக்கடையை இன்னும் 15 நாட்களில் அகற்றுவோம் என்று அதிகாரி எழுதி கொடுத்துள்ளார்.

    எனவே 15 நாளில் மதுக்கடை அகற்றப்படும் என்று நம்புகிறோம். ஒரு வேளை கடையை மூடாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.
    Next Story
    ×