search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடி வழக்கு"

    • புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
    • ஸ்ரீதர் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வாவு யூவியாஸ் பாக்மி (வயது 47).

    இவரது மூத்த மருமகன் ஜின்னா என்பவரின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பகுதி நேர வேலை சம்பந்தமாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி அந்த மர்மநபரிடம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு அதில் அவர் அனுப்பிய 'லிங்க்' மூலம் டெலிகிராம் குரூப்பில் இணைந்து, வேலை செய்வதற்கு அவர் அனுப்பிய மற்றொரு லிங்க் மூலம் பதிவும் செய்துள்ளார்.

    பின்னர் அந்த மர்மநபர் தூண்டுதலின்பேரில் வாவு யூவியாஸ் பாக்மி அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். அதன் பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த நவம்பர் 22-ந்தேதி அந்த மர்மநபர், ஜின்னாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது பெயர் ஸ்ரீதர் என்றும் நான் தங்களுடைய பணத்தை எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறி கூகுல்பே மூலமாக ஜின்னாவின் வங்கி கணக்கிற்கு ரூ. 20 ஆயிரம் பணமும், அதனைத் தொடர்ந்து ரூ. 30 ஆயிரமும், அதற்கு மறுநாள் ரூ 9 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.

    இதனையடுத்து ஸ்ரீதர் ஜின்னாவின் செல்போன் எண் மூலம் வாவு யூவியாஸ் பாக்மியை தொடர்பு கொண்டு அவர்களுடைய குடும்ப விபரங்களை பற்றி கூறி, வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவு செய்துள்ளார். பின்னர் கடந்த டிசம்பர் 20-ந் தேதி முதல் வாட்ஸ்அப்பில் வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது மூத்த மருமகன் ஜின்னாவின் குடும்பத்தினருக்கும் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி ஸ்ரீதர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி தாங்கள் மோசடி செய்யப்பட்டது மற்றும் சமூக வலைதளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

    அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை வடக்கு தாலுகா தத்தனேரி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    • ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி 75 வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை கட்டுமான நிறுவனம் போலியாக கையெழுத்து போட்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
    • பூர்ணஜோதி கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    சென்னை:

    சென்னை மாதவரம் பகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீசின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமாக இடம் உள்ளது.

    இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்துடன் பூர்ணஜோதி கூட்டு ஒப்பந்தம் போட்டுள்ளார்.

    இதன்படி குறிப்பிட்ட இடத்தில் 274 வீடுகளை கட்டுவது என்றும் இதில் 75 வீடுகளை சுதீசின் மனைவியான பூர்ணஜோதியிடம் ஒப்படைத்து விடுவது என்றும் குறிப்பிடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

    கட்டுமான நிறுவனத்துடன் முறைப்படி போடப்பட்ட இந்த ஒப்பந்தங்களை மீறி கட்டுமான நிறுவனத்தின் அதிபர் சந்தோஷ்சர்மா செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி 75 வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை கட்டுமான நிறுவனம் போலியாக கையெழுத்து போட்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

    இதன்மூலம் பூர்ணஜோதியை ஏமாற்றி ரூ.43 கோடி மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

    இதுபற்றி பூர்ணஜோதி கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கட்டுமான நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
    • திருமங்கலம் போலீசார், நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு 'சினேகம் பவுண்டேஷன்' பெயரைப் பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.



    இந்நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, வழக்கு தொடர்பாக திருமங்கலம் போலீசார், நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நடிகை ஜெயலட்சுமி கைதாகியுள்ளார்.

    • 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    • குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அடையாறு காந்திநகரில் 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் சுப்பிரமணியன் இவர் சுபிக்ஷா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டையும் நடத்தி வந்தார்.

    இதனால் சுபிக்ஷா சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டு வந்த அவர், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். தங்களது நிதி நிறுவனத்தில் 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறி நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமானோர் சுபிக்ஷா சுப்பிரமணியத்தின் நிதி நிறுவனத்தில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்தனர்.

    ஆனால் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனம் தாங்கள் கூறியது போல பொதுமக்களின் முதலீடு பணத்துக்கு உரிய வட்டியை தராமல் ஏமாற்றி வந்தது. முதலீட்டு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனத்தை நடத்திய சுபிக்ஷா சுப்பிரமணியன் 17 துணை நிறுவனங்களையும் நடத்தி 500-க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடியாக பணம் பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பால சுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டது. மொத்தம் 51 கோடியே 47லட்சத்து 29 ஆயிரத்து 861 ரூபாய் அளவுக்கு சுபிக்ஷா சுப்பிரமணியனும் அவரது கூட்டாளிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியன் மற்றும் நிதி நிறுவனம் முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப் பட்ட 17 பேரும் நேர்மையற்ற முறையில் முறைகேட்டில் ஈடுபட்டது, மோசடியாக செயல்பட்டது, பொதுமக் களை அச்சுறுத்தியது, சொத்துக்களை மறைத்தது, கிரிமினல் சதியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்தனர்.

    இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி கருணாநிதி 543 பக்கங்களை கொண்ட தீர்ப்பை இந்த வழக்கில் வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீ வித்யாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மொத்தமாக ரூ.191.98 கோடி அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அதில் ரூ.180 கோடியை டெபாசிட் செய்த அனைவருக்கும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்து உள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீனா, சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • விசாரணை அறிக்கை 45 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

     திருப்பூர்:

    பனியன் தொழில் நகரான திருப்பூரில் இன்று (வியாழக்கிழமை) பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட உள்ளது. போனஸ் வாங்கியதும் கடைவீதிகளுக்கு சென்று தீபாவளி பண்டிகைக்கு ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊர் புறப்படுகிறார்கள்.

    கடந்த திங்கட்கிழமை முதல் திருப்பூர் கடைவீதிகளில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இன்று முதல் பொதுமக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு நடந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குமரன் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் புதிய கட்டுமான பணிகள் தொடங்கி நடக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பெரும்பாலானவை இங்கிருந்து இயக்கப்படுவதால் அதற்கேற்ப பஸ்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் மாநகராட்சியின் உரக்கிடங்கு இருந்த பகுதியை சுத்தம் செய்து அங்கு பஸ்களை நிறுத்தி எடுத்துச்செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

    பஸ்நிலையம் முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பஸ்சில் முண்டியடித்து ஏறுவதை தடுக்க கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையில் ஏற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இன்று முதல் 3 நாட்களுக்கு பயணிகள் அதிகம் வருவார்கள். அவர்கள் பஸ் நிலையத்துக்குள் காத்திருப்பதற்காக தற்காலிக கூடாரங்கள் நேற்று காலை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் புதிய பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் கைவரிசை காட்டுவார்கள் என்பதால் மப்டியில் குற்றப்பிரிவு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகரில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிக்கிறார்கள். இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் ரோந்துப்பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 296 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடைகள் அமைந்துள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    • கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அனிஷ் அதிர்ச்சி அடைந்தார்.
    • விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருகம்பாக்கம், நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் அனிஷ் அகமது. தனியார் நிறுவன ஊழியர். இவர் பிரபல தனியார் வங்கியின் "கிரெடிட் கார்டு" பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அனிஷ் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் ரூ.5ஆயிரம் பரிசு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டு "லிங்க்" ஒன்று வந்தது. இதை உண்மை என்று நம்பிய அவர் அந்த "லிங்க்"கை பயன்படுத்தி தனது கிரெடிட் கார்டின் எண் மற்றும் தகவல்களை ஒவ்வொன்றாக பதிவு செய்தார். பின்னர் ரகசிய ஓ.டி.பி எண்ணையும் பதிவு செய்தார்.

    சிறிது நேரத்தில் அவரது "கிரெடிட் கார்டு" கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அனிஷ் அதிர்ச்சி அடைந்தார். வங்கியில் இருந்து அனுப்புவது போல் குறுந்தகவல் அனுப்பி நூதனமான முறையில் மர்மநபர்கள் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.

    இந்த கும்பல் இதேபோல் மேலும் பலருக்கு பரிசு விழுந்து இருப்பதாக 'லிங்க்' அனுப்பி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை நடிகர் அதர்வா மதிப்பதில்லை எனவும் மதியழகன் புகார்.
    • அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் சரமாரி குற்றச்சாட்டு.

    ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் அதர்வா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் மதியழகன் புகார் மனு அளித்துள்ளார்.

    தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை நடிகர் அதர்வா மதிப்பதில்லை எனவும் மதியழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

    படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டாமல், பணத்தை திருப்பி தராமல் 4 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் வேதனை தெரிவித்துள்ளார்.

    மேலும், அதர்வா தனது அப்பா முரளியின் பெயரை வைத்து ஏமாற்றி வருவதாகவும், அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

    • பணம் கையாடல் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
    • சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அகிலாவின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் கையாடல் நடைபெற்று உள்ளதாக கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு விசாரணை நடத்தினார்.

    இந்த விசாரணையில் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த புகார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் விவசாயிகள் பெயரில் வழங்கப்படும் திருமண உதவி திட்டம், கல்வி உதவித் திட்டம், இறந்தால் இறுதி சடங்கு செய்ய உதவி திட்டம், விபத்து காப்பீடு திட்டம் என பல திட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்தது தெரியவந்தது.

    அந்த பணம் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அகிலா மற்றும் 4-க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்ததும் தெரிய வந்தது.

    அவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகவும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பணம் கையாடல் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று திட்டக்குடி சென்றனர். அங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய அகிலாவை கைது செய்து அழைத்து சென்றனர். அவர் ரூ.4½ கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

    சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அகிலாவின் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுச்சேரியை சேர்ந்த ஜான்பால் என்பவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை இழந்துள்ளார்.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவையில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆன்லைன் மூலம் பணத்தை இழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்டாக கருதாமல் தொடர்ந்து ஆன்லைன் மோசடியில் சிக்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி கனகசெட்டி குளம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 34). இவர் நேருவீதியில் கடை வைத்துள்ளார். இவருடைய செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. எதிர் முனையில் சாட்டிங் செய்த நபர் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் பிட்காயின் விலை தற்போது மிகவும் குறைந்துள்ளது. எனவே பிட்காயின் வாங்குவதற்கு தற்போது சரியான தருணம், அதில் முதலீடு செய்தால் பல மடங்கு சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை நம்பிய ஹரிகிருஷ்ணன், செல்போனில் வந்த வங்கி கணக்கிற்கு ஒரே தவணையில் ரூ.21 லட்சம் அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு பிட்காயின் எதுவும் வரவில்லை.

    இதையடுத்து, தனக்கு செல்போனில் குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஹரிகிருஷ்ணன் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராமதாஸ் (42) என்பவர் பிட்காயின் வாங்குவதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை .

    இதுபோல் புதுச்சேரியை சேர்ந்த ஜான்பால் என்பவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை இழந்துள்ளார்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவையில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோசடி வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
    • விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு மூன்றாவது முறையாக அழைப்பு விடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பழங்கால பொருட்கள் விற்பனையாளர் மோன்சன் மாவுங்கல். இவர் பொதுமக்கள் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் மோன்சன் மாவுங்கல், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரித்தபோது, மோன்சன் மாவுங்கல் மோசடியில் போலீஸ் அதிகாரி உள்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில் மோன்சன் மாவுங்கல்லுக்கு எதிரான வழக்கு எர்ணாகுளம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கேரள மாநில போலீஸ் ஐ.ஜி. லட்சுமணன் மீது மோசடி, உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தன. அவர் அந்த மோசடி வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

    மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐ.ஜி. லட்சுமணன் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் மருத்துவ காரணங்களை கூறி இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆகவே விசாரணைக்கு ஆஜராகு மாறு குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு மூன்றாவது முறையாக அழைப்பு விடுத்தனர்.

    மேலும் மோசடி வழக்கில் ஐ.ஜி. லட்சுமணனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி குற்றப்பிரிவு போலீசார் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மோசடி வழக்கு விசாரணையை தவிர்க்க முயற்சிப்பதாகவும், முரண்பாடான மருத்துவ சான்றிதழ்களை அளித்து விசாரணை அதிகாரி முன்பு ஆஜராவதை தவிர்க்க முயற்சிப்பதாக வும் ஐ.ஜி. லட்சுமணன் மீது குற்றப்பிரிவு தெரிவித்தது.

    இந்நிலையில் மோசடி வழக்கில் ஐ.ஜி.லட்சுமணனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை அதிகாரி அவரிடம் விசாரணை நடத்தினார்.

    அதே நேரத்தில் ஐ.ஜி. லட்சுமணனுக்கு கேரள ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவரை குற்றப்பிரிவு போலீசார் விடுவித்தனர்.

    • கைது செய்யப்பட்ட கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • மோசடி வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி ஒருவர் உண்ணாமலைகடை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவரது இ-மெயிலுக்கு விமான நிலையத்தில் வேலை தொடர்பான அழைப்பு வந்திருந்தது. அதில் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட செல்போனில் பேசினார். அப்போது சென்னையில் நேர்முகத்தேர்வு நடைபெறுவதாகவும், அதற்கு வருமாறு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்று நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டார்.

    அப்போது விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்கள். இதைத்தொடர்ந்து அந்த பட்டதாரி வாலிபர் தனது சகோதரருக்கும் வேலை வாங்கி தர வேண்டும் என்று தெரிவித்தார். சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்திற்கு பணம் செலுத்தினார். ரூ.2½ கோடி வரை பணம் செலுத்தியிருந்தார். ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. அதன்பிறகு தான் இவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்திடம் தான் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக பட்டதாரி வாலிபர் சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலமாக புகார் செய்தார். இதையடுத்து சைபர் கிரைம் சூப்பிரண்டு தேவராணி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பட்டதாரி வாலிபர் ஏமாற்றப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தியபோது திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 45), அவரது மனைவி அம்பிகா (36) ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    போலீசார் தேடுவதை அறிந்து அவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நேற்று கேரளாவுக்கு விரைந்து சென்று ரஞ்சித், அம்பிகா இருவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மோசடி வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி.
    • கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்.

    நெல்லையில் உள்ள நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக நியோமேக்ஸ் நெல்லை கிளை நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இருவரும் சிவகங்கை, தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த சைமன் ராஜா, கபில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ×