search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.
    • இஸ்ரேல் ராணுவம் ஒரு சிக்கலான சண்டையில் ஈடுபட்டுள்ளது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி முழுவதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில் குழந்தைகள் பெண்கள் உள்பட 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். போரால் காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    காசா மீதான போரை உடனே நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு ஐ.நா. மற்றும் பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும்போது, 'காசாவில் ஹமாசுக்கு எதிரான போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும். இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    காசாவில் இன்னும் பிணைக் கைதிகளாக உள்ள அனைத்து இஸ்ரேலியர்களையும் வீட்டிற்கு அழைத்து வர உறுதியளிக்கிறேன். இஸ்ரேல் ராணுவம் ஒரு சிக்கலான சண்டையில் ஈடுபட்டுள்ளது. அதன் இலக்குகளை அடைய நேரம் தேவை. ஹமாஸ் அகற்றப்பட்டு பணயக்கைதிகள் திரும்பும் வரை போர் பல மாதங்களுக்கு தொடரும். காசா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று நாங்கள் உத்தரவாதம் அளிப்போம். நாங்கள் படிப்படியாக ஹமாசின் திறன்களை அழித்து வருகிறோம். அந்த அமைப்பின் தலைவர்களையும் ஒழிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரம் அருகே பயங்கர சத்தம் கேட்டதாக தூதரக அதிகாரி தகவல்.
    • டெல்லி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, கடிதம் ஒன்றை கண்டு பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டதாக, தூதரக அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக மோப்ப நாய்களுடன் டெல்லி போலீசார், வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது காலியான நிலத்தில் கொடியுடன் சுற்றப்பட்ட கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலின் துணை தூதர் ஒஹாத் நகாஷ் கெய்னர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் "5 மணிக்குப் பிறகு சில நிமிடங்களில் தூதரகத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டது. தூதரக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுடைய பாதுகாப்பு குழு டெல்லி போலீசாருடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது" எனத் தெரித்துள்ளார்.

    இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என இந்தியா செல்ல இருக்கும இஸ்ரேல் நாட்டினருக்கு அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், இந்தியாவில் மக்கள் அதிகமாக கூடும் மால்கள், மார்க்கெட்கள் போன்ற இடங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். ரெஸ்டாரன்ட், ஓட்டல், பப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டினர் என அடையாளப்படுத்தும் போன்ற அடையாளங்களை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சகம் "இஸ்ரேல் பாதுகாப்பு குழுவுடன் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 140 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    • ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர், 2½ மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
    • காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர், 2½ மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் மும்முனை தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

    இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். இதற்கிடையே காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நேற்று இரவு காசா முனை பகுதி முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும், இதில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே காசாவில் ஹமாஸ் அமைப்பின் மிகப் பெரிய சுரங்கப் பாதையை கண்டு பிடித்து உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இந்த சுரங்கப்பாதை 4 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். ஹமாஸ் அமைப்பினரி டம் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 100-க்கும் மேற்பட்டோர் இருக்கும் நிலையில் மூன்று, வயதான ஆண் பிணைக் கைதிகளின் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டது.

    அதில், "அவர்கள் தங் களை விரைவில் மீட்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து பேசினர். பிணைக் கைதிகளின் வீடியோவை வெளியிட்ட தற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்து உள்ளது. மருத் துவ சிகிச்சை தேவைப்படும் அப்பாவி, வயதானவர்களின் குடும்பங்களுடன் ஹமாஸ் நடத்தும் கொடூரமான குற்ற செயல்களை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது 240-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது.
    • ஏழு நாள் போர் நிறுத்தம் மூலமாக சுமார் 90 பேர் மீட்கப்பட்டனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து 1,200 பேரை கொலை செய்தனர். துப்பாக்கியால் சுட்டு கொடூரமான வகையில் தாக்குதல் நடத்தினர். குழந்தைகள் முதல் முதியோர் வரை 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது. சுமார் 46 நாட்கள் தாக்குதலுக்குப் பிறகு பிணைக்கைதிகளை மீட்க போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    சுமார் ஏழு நாட்கள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

    ஏறக்குறைய வடக்கு காசாவை தடம் தெரியாத வகையில் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ்க்கு எதிரான போர் இறுதி கட்டத்தை எட்டியதாக தெரிவித்துள்ளது.

    தாக்குதலை அதிகப்படுத்தி பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஆனால், பிணைக்கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறாமல் உள்ளது.

    இந்த நிலையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள மூன்று முதியோரின் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் மூன்று முதியோர்களும் தாடியுடன் சற்று உடல் மெலிந்து காணப்படுகின்றனர்.

    இந்த வீடியோ வெளியான நிலையில், "முதியோருக்கு எதிரான கொடுமை" என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. "இது ஒரு கிரிமினல், பயங்கரவாத வீடியோ" எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அந்த மூன்று பேரும் 79 வயதான பெரி, 80 வயதான யோரம் மெட்ஸ்கெர், 84 வயதான அமிராம் கூப்பர் எனத் தெரியவந்துள்ளது.

    மூன்று பேரில் நடுவில் அமர்ந்து இருக்கும் பெரி "மிகவும் கடினமான சூழ்நிலையில் உடல் ஆராக்கியம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எந்தவித நிபந்தனையும் இன்றி எங்களை மீட்க வேண்டும்" என இஸ்ரேலிடம் கெஞ்சுவது போன்று அந்த வீடியோவில் உள்ளது.

    ஹமாஸ் தாக்குதலின்போது பெர், கிப்பட்ஸ் நிர் ஓஜ் எனற இடத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். தனது மனைவி சோபாவிற்கு பின்னால் மறைந்திருக்க ஹமாஸ் பயங்கரவாதிகளை விரட்ட முயற்சித்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியடைந்த மனைவியை காப்பாற்ற, அவர் ஹமாஸிடம் சிக்கிக் கொண்டார்.

    மெட்ஜ்கெரின் மருமகள் வீடியோவை பார்த்து ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடைந்தேன். எனது மாமனார் உயிருடன் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், அவர் தற்போது தாடியுடன், உடல் எடை குறைந்து இருக்கும் நிலையை பார்க்கும்போது அதிர்ச்சியடைந்தேன்.

    • ஹமாஸின் வலுவான பகுதியாக அறியப்படும் ஷெஜையா பகுதியில் கடும் சண்டை.
    • ஹமாஸ் அமைப்பினருக்கும்- இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே நேரடி சண்டை நடைபெற்று வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா மீது தாக்குதல் நடத்திய நிலையில் தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹமாஸின் முக்கிய இடமாக கருதப்படும் ஷெஜையா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினற்கும் இடையே நேரடி சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் சண்டையின்போது, இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நபர்கள் எனக் தவறுதலாக கருதி மூன்று பிணைக்கைதிகளை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    "இஸ்ரேல் ராணுவம் நேற்று தவறுதலாக மூன்று பிணைக்கைதிகளை சுட்டுக்கொலை செய்துள்ளது. அவர்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் தரக்கூடியவர்கள் என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, இந்த நிகழ்வில் இருந்து உடனடியாக பாடம் கற்றுக் கொள்ளப்பட்டு, போரிட்டு வரும் வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    மேலும் சோகமான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

    சுட்டுக்கொலை செய்யப்பட்ட மூன்ற பேர்களில் இருவரின் பெயரை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று ஒருவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

    அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். தாக்குதலை தீவிரப்படுத்தி அவர்கள் மீட்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் சண்டையிட்டு வருகிறது.

    • ஒன்றரை மாத போருக்குப்பின் 4 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
    • பின்னர் மேலும் இரண்டு நாள் அதன்பின் ஒருநாள் என மொத்தம் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட உலக நாடுகள் விரும்புகின்றன. அமெரிக்காவும் கட்டாயம் போர் நிறுத்தம் தேவை என்கிறது. அதோடு கத்தாருடன் இணைந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனாகத்தான் ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருந்திருந்த சுமார் 90 பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் இருந்து 270 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதுடன், மீண்டும் காசா மீது தாக்குதல் தொடங்கியது.

    தற்போது ஹமாஸ் பிடியில் 135 பிணைக்கைதிகள் இருப்பதாகவும், இவர்களில் 115 பேர் உயிருடன் இருக்கலாம் எனவும் இஸ்ரேல் பிரதம மந்திரி அலுவலகம் நம்புகிறது.

    இதற்கு முன்னதாக கத்தாரின் தோகாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதே இடத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதில் இஸ்ரேல் சார்பில் மொசாட் தலைவர் டேவிட் பார்னியா கலந்து கொள்ள இருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் அவரது பயணத்தை ரத்து செய்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தலைமையலான இஸ்ரேல் போர் கேபினட், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் நாட்டின் உயர் அதிகாரி செல்லக்கூடாது என முடிவு எடுத்து, டேவிட் பார்னியாவின் பயணத்தை ரத்து செய்துள்ளது.

    • ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட ஐ.நா. சபையில் தீர்மானம்.
    • உதவி செய்து வந்தாலும் அமெரிக்காவும் போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்கிறது.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இரண்டு மாதங்களை கடந்து 3-வது மாதமாக நடைபெற்று வருகிறது.

    வடக்கு காசாவை முற்றிலும் சீர்குலைத்துள்ளது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தற்போது பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மேலும், பிணைக்கைதிகள் முழுமையாக மீட்கப்படாமல் உள்ளனர்.

    இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. சபையில் 153 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், போர் நிறுத்தம் தேவை என இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் சர்வதேச நாடுகள் ஆதரவோடு அல்லது ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எலி கோஹன் தெரிவித்துள்ளார். மேலும், "தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு பரிசு (gift) போன்று அமைந்துவிடும். திரும்ப வந்து இஸ்ரேல் மக்களுக்கு மிரட்டல் கொடுக்க அனுமதித்துவிடும்" என்றார்.

    அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் செல்லும் அவர் நேதன்யாகுவை சந்திக்கிறார். இதற்கிடையே, போருக்குப்பின் கையாளப்படும் காசாவை கையாளப்படும் விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    • காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.
    • நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்படும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் பிரகடனம் செய்து காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த போர் எப்போதுதான் முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட் கூறியதாவது:-

    காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வரும். காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.

    அமெரிக்கா கேட்கும் மற்றும் சொல்லும் அனைத்தையும் நான் கருத்தில் கொள்கிறேன். மேலும் அமெரிக்கா செய்து கொண்டிருப்பதை அனைத்து கேபினட் மந்திரிகளுடன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். அமெரிக்கா எங்களுக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் காண்போம்.

    நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன். அப்படி அவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து நாங்கள் யோசிப்போம்.

    கடந்த சில நாட்களாக ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்துள்ளனர். இது பயங்கரவாத குழுவிற்கு என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது. யாரெல்லாம் சரண் அடைகிறார்களோ அவர்கள் உயிர்கள் காக்கப்படும். ஹமாஸின் சீனியர் கமாண்டர்கள், பயங்கரவாதிகள் ஆகியோர் நிலைமை சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும். 3-வது வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.

    • காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழப்பு.
    • பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் வடக்குப் பகுதிகளை அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைத்துவிட்டது. தற்போது தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், சண்டை முடிவுக்கு வருவதாகவும், ஹமாஸ் அமைப்பினர் இனிமேல் சரணடைவதுதான்... என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நேதன்யாகு கூறுகையில் "சண்டை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கிவிட்டது. சண்டை முடிகிறது.

    எஹ்யா சின்வருக்காக உயிர் இழக்காதீர்கள். ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். கடந்த சில தினங்களாக பல ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்களது படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்" என்றார்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்ததாக நேதன்யாகு கூறியபோதிலும், அதற்கான ஆதாரத்தை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பும் நேதன்யாகு கருத்தை புறக்கணித்துள்ளது.

    சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    முன்னதாக,

    ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதோடு, எல்லைக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டில் 1200 பேர் உயிரிழந்தனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது. இதுவரை காசாவில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகிறார்கள்.

    பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பாலஸ்தீனத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் போரினால் உயிரிழந்துள்ளனர்
    • எங்கள் போர் மிக நியாயமானதுதான் என நேதன்யாகு அறிவித்துள்ளார்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீன காசா முனை பகுதி மீது இஸ்ரேல் தொடங்கிய போர் தற்போது 60 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுவரை 17,700 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 48,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐ.நா. சபையில் போர் இடைநிறுத்தத்தை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா, தனது "வீடோ" எனும் சிறப்பு அதிகாரத்தை (Veto) பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.

    இப்பின்னணியில் தங்களின் நிலைப்பாடு குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, "அமெரிக்கா எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன். ஹமாஸ் அமைப்பை ஒழிக்க நாங்கள் நடத்தி வரும் போர் மிக நியாயமானதுதான். அது மேலும் தொடரும்" என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹென் (Eli Cohen), "மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும், போர் குற்றங்களையும் நடத்தும் ஹமாஸ் அமைப்பினர், போர் இடைநிறுத்தம் ஏற்பட்டால் மீண்டும் காசா முனை பகுதியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள்" என கூறினார்.

    இஸ்ரேலின் ராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி (Herzi Halevi) தங்கள் தாக்குதலில் இன்னமும் அழுத்தம் காட்டப்படும் என எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில், காசாவில் 36 சதவீத வீடுகளில் உணவு பற்றாக்குறை நெருக்கடியாக மாறியுள்ளது என்றும் காசா முனை பகுதியில் பாதுகாப்பான இடம் என ஏதுமில்லை என்றும் காசா பகுதியின் சுகாதார துறை அறிவித்துள்ளது.

    • காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருள்களை சர்வதேச அமைப்புகள் அனுப்பி வருகின்றன.
    • சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை ஹமாஸ் கொள்ளையடிக்கிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் போர் நிறுத்தம் அறிவித்தது.

    இதையடுத்து, காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருள்களை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அனுப்பி வருகின்றன.

    இந்நிலையில், காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் குற்றம்சாட்டின.

    மேலும், காசாவின் தேவைகளை விட ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாதத்துக்கே முன்னுரிமையை அளித்து வருவதாகக் கூறிய இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தாக்குதல்கள் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் திருடும் வீடியோக்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    • ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த வருகின்றனர்.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடன் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவின் வடக்குப்பகுதி சீர்குலைந்துள்ளது. தற்போது தெற்கு பகுதியிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு முனைகளில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேல் காசாவை துவம்சம் செய்தது.

    இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

    இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் "ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் மோதலை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. நேற்று அதிபர் ஜோ பைடன் நேதன்யாகு மற்றும் ஜோர்டான் அதிபர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    நேதன்யாகுவிடம் ஜோ பைடன் பேசும்போது, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேதன்யாகு ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    ×