search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேதன்யாகு"

    • ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டது.
    • வடக்கு இஸ்ரேலில் வான்வழித்தாக்குதலுக்காக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர்.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதி உள்பட 12 பலியானார்கள்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனாலும் அதை வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இஸ்ரேல் தடுத்தது.

    ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து தாக்குதலை நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியது.

    மத்திய ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன.

    ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.மேலும் ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்ததை உறுதிப்படுத்தின. இஸ்ரேல் தாக்குதலையடுத்து ஈரானின் மேற்கு பகுதியில் வான்வெளி மூடப்பட்டு உள்ளது. பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

    முக்கிய நகரங்களான இஸ்பஹான், ஷிராக்ஸ் மற்றும் தெஹ்ரான் ஆகியவற்றில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இஸ்ரேல் தாக்கு தலையடுத்து பல மாகாணங்களில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    வடக்கு இஸ்ரேலில் வான்வழித்தாக்குதலுக்காக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர்.

    ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இருந்து தெற்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்பஹானில் ஒரு பெரிய ராணுவ விமான தளம், யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப்பகுதியான நடான்ஸ் நகரம் உள்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள் உள்ளன.

    இதற்கிடையே இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்பஹானில் மூன்று டிரோன்கள் வாகனத்தில் காணப்பட்டதாகவும், அவற்றை நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று ஈரான் எச்சரித்திருந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

    • சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • பதிலடியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எங்கள் நாட்டின் இரண்டு தளபதிகள் உயிரிழந்ததால் அதற்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரைத்தது. சூளுரைத்ததுபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தியது. அதேபோல் ஈரான் நேரடியாகவும் தாக்குதல் நடத்தியது.

    ஈரான் தாக்குதலை எதிர்பார்த்த இஸ்ரேல் அமெரிக்கா உதவியுடன் அனைத்து ஏவுகணைகளையும் வான் எல்லையிலேயே எதிர்த்து வெற்றிகரமாக அழித்து தாக்கியது. இதனால் இஸ்ரேல் நாட்டில் பெரும் சேதம் ஏற்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. தாங்களும் தயார் என நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

    அதேவேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளார்.

    ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்- ஈரான் மோதல் காரணமாக உலகப்போர் மூளும் என அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் டெலிபோன் மூலம் பேசினார். அப்போது ஈரான் தாக்குதலை தொடர்ந்து நிதானத்த கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், ஈரான் தவறான கணக்கு போட்டுள்ளது. உலகளாவிய அளவில் தனிமைப்படுத்துதலை அதிகப்படுத்தியுள்ளது. பதற்றம் அதிகரிப்பு யாருக்கும் நலன் இல்லை மற்றும் மத்திய கிழக்கில் பாதுகாப்பின்மையை மேலும் தீவிரமாக்கும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது" எனத் தெரிவித்துள்ளார்.

    ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் இங்கிலாந்தின் விரைவான மற்றும் வலுவான ஆதரவு நன்றி என நேதன்யாகு ரிஷி சுனக்கிடம் தெரிவித்துள்ளார்.

    • ரஃபா நகரில் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் இலக்கு நிறைவடையும் என நேதன்யாகு ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. ஆறுமாதங்களை தாண்டியும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    முதலில் காசா முனையின் வடக்குப் பகுதியில்தான் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பதற்கு தெற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என தென்பகுதியிலும் தரை தாக்குதலை விரிவுப்படுத்தியது.

    ஹமாஸ் அமைப்பின் வலுவான இடமாக கருதப்பட்ட கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தியது. அந்த நகரத்தை இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு துவம்சம் செய்துவிட்டது. ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த சுரங்கப்பாதைகளை அழித்தது.

    இந்த நிலையில்தான் ரஃபா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும், ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போரின் இலக்கு நிறைவடையும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

    ஆனால் ரஃபாவில் வசித்து வரும் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் அமெரிக்கா ரஃபா தாக்குதலை விரும்பவில்லை. பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 7-ந்தேதி) கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவ துருப்புகளை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்தது. இதனால் கான் யூனிஸ் நகருக்கு மக்கள் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேதன்யாகு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "அது நடக்கும் (ரஃபா மீது தாக்குதல்). தேதி இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விரிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    அதேவேளையில் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, ரஃபா மீதான தரைவழி தாக்குதல் தவறானதாக இருக்கும். மக்களை பாதுகாப்பதற்கான நம்பகத்தன்மையான திட்டத்தை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கெய்ரோவில் விவாதித்து வரும் நிலையில் நேதன்யாகு இவ்வாறு பேசியுள்ளார்.

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    ரஃபா மீது தரைவழி தாக்குதலை நடத்த ராணுவத்தை ஒருங்கிணைப்பதற்காக கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவம் வெளியேறியுள்ளது என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    • பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

    டெல்அவில்:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது.

    டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

    டெல்அவிலில் இன்று அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே இன்று மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை எகிப்தில் தொடங்குகிறது.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பை அமெரிக்கா புறக்கணித்தது.
    • போர் தொடங்கியபோது இருந்த நிலையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக இஸ்ரேல் கருதுகிறது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரம்ஜானை முன்னிட்டு இடைக்கால போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதோடு ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் அமெரிக்காவுக்கு உடன்பாடு இல்லை.

    அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். ஆனால், ஹமாஸ்க்கு எதிரான போரில் இலக்கை அடைவதற்கு ரஃபா மீது தாக்குதல் நடத்துவது அவசியம் என நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக தங்களது அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்க நேதன்யாகு முடிவு செய்தார். இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர்.

    இந்த நிலையில்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்கா, இந்த முறை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. மேலும், வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதனால் 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 14 உறுப்பினர் நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனால் இஸ்ரேல் அமெரிக்கா மீது அதிருப்தி அடைந்துள்ளது. போர் தொடங்கியதுபோது இருந்த தங்களது நிலைப்பாட்டில் இருந்து தற்போது அமெரிக்கா வெளியேறியதாக கருதுகிறது. இதனால் பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்கா செல்ல இருந்து இஸ்ரேல் அதிகாரிகள் பயணத்தை நேதன்யாகு ரத்து செய்துள்ளார்.

    நேதன்யாகு நடவடிக்கையால் வெள்ளை மாளிகை குழப்பம் அடைந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு தகவல்தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பி கூறுகையில் "இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் முடிவு வெள்ளை மாளிகைக்கு குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல பிரதமர் நேதன்யாகுவின் அலுவலகம், அமெரிக்கா மாறிவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், ஜோ பைடனின் நிர்வாகம் தங்களது அணுகுமுறையில் இருந்து மாறவில்லை.

    நாங்கள் சில கருத்துகளை விளக்க வேண்டிய நிலை உள்ளது. இது நான்பைண்டிங் தீர்மானம் (NonBinding Resolution). ஹமாஸ்க்கு எதிரான இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் திறனை இது எந்த வகையிலும் பாதிக்காது." என்றார்.

    • வடக்கு காசாவை தொடர்ந்து முக்கியமான நகரமாக கருதப்படும் ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டம்.
    • காசாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் ரஃபா பகுதியில் உள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டுவதற்காக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்கு பகுதியை துவம்சம் செய்து விட்டது. இங்கிருந்து பெரும்பாலான மக்கள் தெற்குப் பகுதியான ரஃபா, கான் யூனிஸ்க்கு இடம் மாறினர். கான் யூனிஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இலக்கை எட்ட வேண்டுமென்றால் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அதற்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எகிப்து-காசா எல்லை மூடப்படும் அபாயம் ஏற்படும். மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க முடியாத நிலை ஏற்படும்.

    இதனால் ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இதற்கிடையே அங்குள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார். அப்போது ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், தாக்குதலுக்குப் பதிலாக வேறு வழிகள் இருந்தால் அதை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதற்கு நேதன்யாகு வேறு வழிகள் இருந்தால் கடைபிடிக்க முயற்சி செய்கிறோம் என உறுதி அளித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் சுமார் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள்.

    காசா முனையில் மொத்தம் 2.3 மல்லியன் பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போர் காரணமாக ரஃபா பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இவர்களை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிப்போம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    • பாலஸ்தீன கைதிகள்- பிணைக்கைதிகள் விடுவிப்பு பரிமாற்றம்.
    • பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு இல்லாமல் பிடித்து வைக்கப்பட்டவர்கள் உயிருடன் திரும்பமாட்டார்கள்.

    இஸ்ரேல் படை- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தொடங்கி 2 மாதத்தை கடந்து விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இடையில் 7 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    ஆனால் மீண்டும் போர் தொடங்கி இருப்பதால் தற்போது இஸ்ரேல் ராணுவத்தினர் காசா முழுவதும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தரை வழியாகவும், வான்வெளி வழியாகவும் இடைவிடாமல் குண்டுகளை வீசி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    தொடர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள காசா நகரம் இனி மேம்படுத்த முடியாத அளவில் கடும் பேரழிவை சந்தித்து இருக்கிறது. அந்த நகரமே சின்னாபின்னமாகி விட்டது.

    இந்த போரில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பாவி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதுவரை 17,997 பேர் சண்டையில் இறந்து விட்டதாக காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை வலியுறுத்தி வந்த போதிலும் அந்நாடு தனது முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்த 240 பேரில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 105 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீன கைதிகளை அந்நாடு விடுதலை செய்தது.

    இந்த சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் படையினர் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் இரு படையினரும் நேருக்கு நேர் சண்டையிட்டு வருகின்றனர்.

    ஹமாசிடம் இன்னும் பலர் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்த பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் பிணைக்கைதிகளை அவர்கள் உயிருடன் பிடிக்க முடியாது என ஹமாசின் ஆயுதப்பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் காசாவில் புதிய போர் நிறுத்தம் கொண்டு வரவும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியில் கத்தார் நாடு ஈடுபட்டு வருகிறது.

    ஆனால் ஹமாஸ் எச்சரிக்கையை புறந்தள்ளிவிட்டு காசா மீது இன்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே ஹமாஸ் தலைவருக்காக உயிரை இழக்காதீர்கள். சரணடையுங்கள் என ஹமாஸ் அமைப்பினருக்கு நேதன்யாகு எச்சரித்துள்ளார்.

    • காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழப்பு.
    • பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் வடக்குப் பகுதிகளை அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைத்துவிட்டது. தற்போது தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், சண்டை முடிவுக்கு வருவதாகவும், ஹமாஸ் அமைப்பினர் இனிமேல் சரணடைவதுதான்... என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நேதன்யாகு கூறுகையில் "சண்டை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கிவிட்டது. சண்டை முடிகிறது.

    எஹ்யா சின்வருக்காக உயிர் இழக்காதீர்கள். ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். கடந்த சில தினங்களாக பல ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்களது படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்" என்றார்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்ததாக நேதன்யாகு கூறியபோதிலும், அதற்கான ஆதாரத்தை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பும் நேதன்யாகு கருத்தை புறக்கணித்துள்ளது.

    சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    முன்னதாக,

    ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதோடு, எல்லைக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டில் 1200 பேர் உயிரிழந்தனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது. இதுவரை காசாவில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகிறார்கள்.

    பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த வருகின்றனர்.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடன் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவின் வடக்குப்பகுதி சீர்குலைந்துள்ளது. தற்போது தெற்கு பகுதியிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு முனைகளில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேல் காசாவை துவம்சம் செய்தது.

    இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

    இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் "ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் மோதலை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. நேற்று அதிபர் ஜோ பைடன் நேதன்யாகு மற்றும் ஜோர்டான் அதிபர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    நேதன்யாகுவிடம் ஜோ பைடன் பேசும்போது, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேதன்யாகு ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    • ஜெருசலேம் ஜெப ஆலய பயங்கரவாத தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவித்தார்.
    • அதில் எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    மேற்கு கரையின் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்பு படை கடந்த செவ்வாய்கிழமை தேடுதல்வேட்டை நடத்தியது. இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கும் பாலஸ்தீன ஆயுதக்குழுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் இஸ்ரேல் - மேற்குகரை இடையே பதற்றம் அதிரித்தது.

    இதற்கிடையே, இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தலம் அருகே நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த 21 வயது பாலஸ்தீனியர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    துப்பாக்கிச்சூடு நடத்திய பாலஸ்தீனியரை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 42 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் கூறினர். இந்த தாக்குதல் சம்பவங்களால் இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேலின் ஜெருசலேமில் பாலஸ்தீனியர் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஜெருசலேம் ஜெப ஆலய பயங்கரவாத தாக்குதலுக்கான எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜெருசலேம் ஜெப ஆலயத் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை ஏற்கனவே கைது செய்யத் தொடங்கியுள்ளோம். யார் நம்மை காயப்படுத்த முயன்றாலும் அவரையும், அவருக்கு உதவுபவர்களையும் நாங்கள் காயப்படுத்துவோம் என தெரிவித்தார்.

    ×