என் மலர்
நீங்கள் தேடியது "அணுசக்தி ஒப்பந்தம்"
- இன்று ஈரான் தாக்குதலில் 8 பேர் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- இஸ்ரேலும், ஈரானும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை கடும் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் 200 போர் விமானங்கள், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின. அதேபோல் மாலையிலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் 9 அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது.
இதில் இஸ்ரேலின் ராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்கின. நேற்றும் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன.
இதற்கிடையே தங்களது தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேலும், ஈரானும் அறிவித்தன.
இந்த நிலையில் 3-வது நாளாக இன்று இஸ்ரேல், ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை தொடுத்தன.
இஸ்ரேலில் இன்று அதிகாலை நடத்திய தனது புதிய தாக்குதலில் ஈரானின் ராணுவ தலைமையகம், அணுசக்தி நிலையங்கள், எண்ணெய் நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள், எரிவாயு நிலையங்கள் குறிவைக்கப்பட்டன. ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமையகம் மீது ஏவுகணை வீசப்பட்டது. அதேபோல் தெக்ரானின் வடமேற்கில் உள்ள ஷாஹ்ரான் எண்ணை கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேபோல் தெக்ரானுக்கு அருகில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கியது. அங்கு பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
புஷேர் மற்றும் அபாடனில் உள்ள முக்கிய எரிசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியது. இஸ்ரேல் தாக்குதலால் உலகின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி நிலையமான தெற்கு பார்ஸ் எரிவாயு மையம் தீப்பிடித்து எரிக்கிறது.
அதேபோல் ஹைபா, தம்ரா உள்ளிட்ட ஈரானின் பல்வேறு நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலின் தாக்குதல்களால் தெக்ரான் உள்பட நகரங்களில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும் போது, ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய தெகிரானில் உள்ள இலக்குகள் மீது விரிவான தொடர் தாக்குதல்கள் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த இலக்குகளில் அணுசக்தி திட்டத்தின் தலைமையகமான ஈரானிய பாதுகாப்பு அமைச்சக தலைமையகமும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தெக்ரானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 29 குழந்தைகள் உட்பட 60 பேர் பலியானதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலின் புதிய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் கடும் தாக்குதல்களை தொடுத்தது. இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ஏவுகணைகள், டிரோன்கள் வீசப்பட்டன. இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் போர் விமான எரிபொருள் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்கின. டெல்அவிவ், ஜெருசலேம், பேட் யாம், ரெஹோவோட் உள்ளிட்ட நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகின. ஏவுகணை தாக்குதலில் டெல் அவிவ்வில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. டான் மாவட்டத்தில் உள்ள ஒரு 5 மாடி கட்டிடம் இடிந்தது. மேலும் அருகில் உள்ள மற்றொரு குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்தது.
இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் ஈரான் தாக்குதலில் 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்று ஓமனில் நடைபெற இருந்த நிலையில் அதில் பங்கேற்க ஈரான் மறுத்துவிட்டது.
இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்து நிறுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏனென்றால் நாம் மற்றொரு அணு ஆயுதத்தை அனுமதிக்க முடியாது
- டிரம்பின் கடிதம் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
அணுஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். "நீங்கள்(ஈரான்) பேச்சுவார்த்தை நடத்துவீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் அது ஈரானுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஃபாக்ஸ் பிஸ்னஸ் நெட்வொர்க்குக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "அவர்கள்(ஈரான்) அந்தக் கடிதத்தைப் பெற விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.
நாம் ஏதாவது செய்ய வேண்டும், ஏனென்றால் நாம் மற்றொரு அணு ஆயுதத்தை அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார். ஈரானின் அணு சக்தி கட்டமைப்பு இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் சூழலில் டிரம்ப் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
டிரம்பின் கடிதம் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை விரிவான விளக்கத்தை வெளியிடவில்லை.
இதற்கிடையே ஈரானின் அணுசக்தி திட்டத்தைச் சுற்றியுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானிய தூதர் காசெம் ஜலாலியுடன் விவாதித்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் ராணுவத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
- பேச்சுவார்த்தைகளில் ஈரானை மிரட்ட முடியாது.
டெக்ரான்:
அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எமுதி உள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, `ஈரானுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் நாம் ராணுவத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்' என்றார்.
இந்த நிலையில் டிரம்ப் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சில மிரட்டல் அரசாங்கங்கள் பேச்சுவார்த்தையை வலியுறுத்துவது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அல்ல. அவர்களின் புதிய கோரிக்கைகளை முன்வைப்பதற்கான ஒரு பாதையாகும்.
ஈரானால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படாத புதிய கோரிக்கைகளை அவர்கள் எழுப்புகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை ஈரான் நிச்சயமாக ஏற்காது.
பேச்சுவார்த்தைகளில் ஈரானை மிரட்ட முடியாது. வற்புறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு எதிராக நிற்போம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச நாடுகள் இணைந்து கொண்டுவந்த ஒப்பந்தத்தில் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் பலவீனமானது எனக்கூறி அமெரிக்கா விலகியது.
அதன்பின் ஈரான் ஒப்பந்தத்தில் இருந்த உறுதி மொழிகளைத் திரும்பப்பெறத் தொடங்கியது. இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் விசாரணை
- ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது
தெஹ்ரான்:
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றது முதல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்குவதாகவும் அமெரிக்கா கூறி உள்ளது.
இந்நிலையில், உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுக்கவேண்டுமானால், அறிவிக்கப்படாத அணுசக்தி தளங்களில் யுரேனிய தடயங்கள் தொடர்பான விசாரணையை சர்வதேச ஆய்வாளர்கள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கூறி உள்ளார்.
அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஈரானை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி வலியுறுத்துகிறது. மேலும், ஈரான் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அணு ஆயுத திட்டத்தை 2003 வரை நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள், மேற்கத்திய நாடுகள் மற்றும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஆகியவை கூறியுள்ளன. ஆனால், அணு ஆயுத குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
- கட்டுப்பாடுகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைய அமெரிக்கா விருப்பம்
- ஒப்பந்தத்தை மீட்டெடுப்பது தொடர்பான வரைவு திட்டம் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது
தெஹ்ரான்:
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்றுவருகிறது. இதில், அமெரிக்கா, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை சிலவற்றை நீக்குவதாகவும் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஈரான் ஆகிய நாடுகள் வியன்னாவிற்கு தூதர்களை அனுப்புவதாகக் கூறி உள்ளன. இது, உலக வல்லரசு நாடுகளுடனான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தயை புதுப்பிக்கும் கடைசி முயற்சியாக இருக்கும் என தெரிகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தையின்போது மற்ற நாடுகள் பங்கேற்குமா? என்பது உடனடியாகத் தெரியவில்லை.
பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதர் என்ரிக் மோரா இதுபற்றி கூறும்போது, ஒப்பந்தத்தை மீட்டெடுப்பது தொடர்பான வரைவு திட்டம் குறித்து இந்த பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்றார். அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அலி பகேரி கனியை ஆஸ்திரிய தலைநகருக்கு அனுப்புவதாக ஈரான் கூறி உள்ளது.






