என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிரதமர் மோடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
- இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் மோடி அங்கிருந்து 6-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபத்தில் வந்து இறங்குகிறார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் வகையில் புதிய ரெயில் மேம்பாலம் ரூ.545 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
முன்னதாக ஏப்ரல் 4, 5-ந் தேதிகளில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் மோடி அங்கிருந்து 6-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபத்தில் வந்து இறங்குகிறார். அதனை தொடர்ந்து திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் செல்ல உள்ளன. இதற்காக நேற்று உச்சிப்புளிக்கு வந்த 4 எம். ஐ.17 ஹெலிகாப்டர்கள் இங்கிருந்து இலங்கை காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.
திறப்பு விழா நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி அன்று காட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு செல்லும். அங்கு காலை 10.40 மணிக்கு பிரதமர் மோடியை அழைத்துக் கொண்டு 11.40 மணிக்கு மண்டபம் முகாம் ஹெலிபேடில் வந்து இறங்கும். இவற்றில் மூன்று ஹெலிகாப்டர் மண்டபத்திற்கும், ஒரு ஹெலிகாப்டர் உச்சிப்புளி கடற்படை தளத்திற்கும் இயக்கப்பட உள்ளன. இதன் ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.
- கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
- சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டுமென்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
சென்னை:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார்.
அவர் முன்மொழிந்துள்ள தீர்மானத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத் தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.
இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அரசு முறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டுமென்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
- . வருகிற 6-ந்தேதி மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது.
மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
அகில இந்திய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று காலை மதுரை தமுங்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை வழங்க, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் பத்மநாபன் செங் கொடியை பெற்றுக்கொண் டார். பின்னர் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கொடியேறி பாலகிருஷ்ணன் நினைவு அரங்கில் கட்சியின் பொது மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக்க சர்க்கார் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ. எம்.எல். விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி. பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் பொது மாநாடு தொடங்கி நடைபெற்றது.
முன்னதாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை வந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மாநாட்டு அரங்கினை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர்.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை 5 மணிக்கு கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் தலைப்பில் மாநில உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கிற்கு மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்கிறார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உரையாற்றுகிறார். கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, சி.பி.ஐ.எம். ஒருங்கிணைப் பாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டில் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, வெற்றிமாறன், பிரகாஷ் ராஜ், மாரி செல்வராஜ், ஞானவேல், சசிக்குமார், பிரகாஷ்ராஜ், ராஜூமுருகன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். பொது மாநாட்டை தொடர்ந்து இன்று பிற்பகல் தொடங்கி வரும் 6-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
மாநாடு நடைபெறும் 6 நாட்களும் மாலை நேரங்களில் தோழர் ஜானகி அம்மாள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி மேடையில் கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்கள் நடைபெறுகின்றன. வருகிற 6-ந்தேதி மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது. இதனை வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்கின்றனர். அன்று மாலை 4 மணிக்கு வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
அந்நிகழ்வில் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்வர் பினராய் விஜயன், அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ராமகி ருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி, சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் ரெயில், வாகனங்கள் மூலம் நேற்று காலை முதலே மதுரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் மதுரை மாநகர் முழுவதும் செங்கொடிகள் பறக்க விடப்பட்டு ஆங்காங்கே வரவேற்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு என்பதால் அகில இந்திய அளவில் கட்சியின் பிரதிநிதிகள் முக்கிய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
- வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை என்ற ஸ்தலத்தில் மங்கள நாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம், தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மூலம் திருப்பணிகள் முடி வடைந்துள்ளன. 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.
ஆருத்ரா தரிசன விழாவின் போது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி அன்று திருஉத்திரகோச மங்கை கோவிலில் மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும் என்பதால் தமிழ கத்தின் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேக விழா விற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பேரில் கீழக்கரை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து திவான் பழனிவேல் பாண்டியன் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-
கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு மரகத நடராஜர் சன்னதி திறக்கப் பட்டு சந்தன காப்பு களை யப்பட்டது. 4-ந்தேதி வரை 3 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்திருக்கும்.
4-ந் தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சாத்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சாத்தப்படுகிறது. கும்பாபி ஷேகம் நடைபெறும் நாளன்று மேல்பகுதி தளத் தில் மட்டும் சுமார் 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத் திற்கு தேவையான அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடை பெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் வித்யா (வயது 22). இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 30-ந்தேதி வீட்டில் உள்ள பீரோ சரிந்து விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வித்யா பிணமாக கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.
இந்த நிலையில் வித்யாவின் காதலன் திருப்பூரை சேர்ந்த வெண்மணி (22), காதலி மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காம நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வித்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. வேறு சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான வெண்மணியை, வித்யா காதலித்து வந்ததால் அவரது சகோதரர் சரவணகுமார்(24) தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சரவணகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது தங்கை வித்யா கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அந்த கல்லூரியில் படிக்கும் திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இது எங்களுக்கு தெரியவரவே நாங்கள் வித்யாவை கண்டித்தோம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினோம்.
இருப்பினும் காதலை கைவிடாமல் வெண்மணியுடன் பேசி வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே வெண்மணியின் வீட்டினர் எனது தங்கையை பெண் கேட்டு எங்களது வீட்டிற்கு வந்தனர். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வது பற்றி பேசிக்கொள்வோம் என்று எச்சரித்து அனுப்பினோம். இந்த சம்பவத்திற்கு பிறகு வித்யாவை கடுமையாக எச்சரித்தேன். ஒழுங்காக படிக்க வேண்டுமென்றால் கல்லூரிக்கு செல்... இல்லையென்றால் வீட்டிலேயே இருக்குமாறு மிகவும் கண்டிப்புடன் கூறினேன்.
இதனால் கடந்த 2 மாதங்களாக என்னிடம் எனது தங்கை பேசாமல் இருந்து வந்தார். கடந்த 30-ந்தேதி எனது பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டனர். வித்யா மட்டும் தனியாக இருந்தார். அவருடன் பேச முயற்சித்த போது அவள் பேசமறுத்து விட்டாள். இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வித்யாவின் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாள். சிறிது நேரத்தில் இறந்து விட்டாள். இதனால் என்னசெய்தென்று தெரியாமல் தவித்தேன்.
கொலையை மறைக்க வீட்டில் இருந்த பீரோவை இறந்து கிடந்த வித்யா உடலின் மீது தள்ளி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தேன்.அவர்களிடம் வித்யா மீது பீரோ சரிந்து விழுந்ததில் இறந்து விட்டாள் என்று நாடகமாடினேன். வெளியில் சென்றிருந்த எனது பெற்றோரும் வந்தனர். அவர்களிடம் நடந்த விவரத்தை கூறினேன்.
பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் மயானத்தில் உடலை புதைத்து விட்டோம். இனிமேல் யாருக்கும் சந்தேகம் வராது என்று எண்ணியிருந்தேன். இந்த நிலையில் போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து வித்யாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் பிரச்சினையில் தங்கையை கொன்று சகோதரர் நாடக மாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2,000 பேர் வருகை தருகின்றனர்.
- இந்த ஆண்டு 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை :
தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கி உள்ளன. அப்போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசகையில், இந்த ஆண்டு 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசும் 'ஜல் ஜீவன் திட்டம்' மூலம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்குகிறது என்றார்.
புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2,000 பேர் வருகை தருகின்றனர். அதனால் அதனை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரன், சுற்றுலாத்துறை மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி நிலைக்கு ஏற்ப கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.
இதனிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். மழைக்காலங்களில் ஏர்போர்ட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
- கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்பட வில்லை.
விருதுநகர்:
விருதுநகர் சிவன் கோவில் அருகில் பெருமாள் கோவில் தெரு பேட்டை பகுதி உள்ளது. இங்குள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் தினக் கூலி தொழிலாளர்கள், கட்டிட வேலைக்கு செல்வோர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது குடிசை வீட்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீர் என தீப்பற்றியது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் தூக்கம் கலைந்து அலறி யடித்துக் கொண்டு வெளி யேறினர். ஆனால் அதற்குள் அந்த வீட்டின் பெரும்பாலான பகுதி எரிந்து சேதம் அடைந்தது.
அதிகாலை நேரத்தில் மிதமான காற்றும் வீசியதால் தீயானது மளமளவென பரவி அந்த பகுதியில் அருகிலிருந்த 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளிலும் தீப்பற்றியது. அப்போது அந்த வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மேலும் அருகில் இருந்த பால் பண்ணையிலும் தீ பரவியது.
உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 15-க்கும் மேற்பட்டோர் 3 தீயணைப்பு வாகனங்களில் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இந்த விபத்தில் வீட்டிலிருந்து உயிர் தப்பி வெளியே ஓடி வந்த கணேஷ் மூர்த்தி என்பவர் பலத்த காயம டைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்து குறித்து பஜார் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்தை விருதுநகர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்பட வில்லை. ஆனால் பல லட்சம் மதிப்பிலான குடிசை வீடுகளில் இருந்த உடமைகள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
- மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து வர வேண்டும்.
- மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல்.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் தரிசனம் செய்ய வருகை தந்தார்.
அவருக்கு விழா கமிட்டியினரும், கிராம மக்களும் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்களின் திருப்பணிகள் நடந்து வருகிறது.
2028-ம் ஆண்டு வரும் கும்பகோணம் மகாமக பெருவிழா மிகப்பெரிய விழாவாக நிச்சயமாக கொண்டாட அரசு முயற்சிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
அரசியல் என்பது யார் வேண்டுமானாலும் வருவது என்பது கூடாது. கடுமையாக உழைத்து அனுபவரீதியாக மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அரசியலுக்கு வர வேண்டும். சினிமா அரசியல் தேவையில்லை. சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும்.
சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என்று நினைப்பது தவறு. மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல். மக்களுக்காக பல்வேறு துறைகளில் தொண்டு செய்யக் கூடியவர்கள் போற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வருகிற 5-ந் தேதி சேப்பாக்கத்தில் மோதுகிறது.
- www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 5-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
சென்னை:
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25-ந்தேதி வரை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து கிடுகிடுவென விலை உயர்ந்து வந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் கடந்த 28-ந் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது. அதேபோல் நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.520 அதிகரித்து இருந்தது. இப்படியாக விலை உயர்ந்து, நேற்றும் அதிரடி உச்சத்தை காட்டியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து425-க்கும், ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று, கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.8,510-க்கும் சவரன் ரூ.68,080-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலையை போல, வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080
31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600
30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880
29-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880
28-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,720
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-04-2025- ஒரு கிராம் ரூ.114
31-03-2025- ஒரு கிராம் ரூ.113
30-03-2025- ஒரு கிராம் ரூ.113
29-03-2025- ஒரு கிராம் ரூ.113
28-03-2025- ஒரு கிராம் ரூ.114
- ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கடலூர் மாவட்டம் எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.
பைக்கில் கஞ்சா போதையில் வரும் சிறார்கள், லாரி ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன்களை பறித்து செல்வதாக கூறிய ஓட்டுநர்கள், ஜி-பே பாஸ்வேர்டையும் வாங்கி சென்று பணத்தை திருடுவதாக தெரிவித்தனர்.
ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பாதிப்பை உருவாக்கும்.
- பிரதமரிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தங்களை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பாதிப்பை உருவாக்கும். பிரதமரிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டு நடவடிக்கை குழு தீர்மானங்களை பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் நேரில் சந்தித்து வழங்க நேரம் கேட்டு பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார்.






