என் மலர்
நீங்கள் தேடியது "Thiruuttarakosamangai temple"
- கடந்த 1-ந்தேதி மரகத நடராஜர் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- பிரதான மூர்த்திகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களே சுவரி உடனுறை மங்கள நாதர் சுவாமி கோவில் உள்ளது. உலகின் முதல் சிவாலயமாக கருதப்படும் இந்த ஸ்தலத்தில் மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
மேலும் இங்குள்ள மரகத நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா நாளன்று சந்தனம் களையப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வார்கள்.
இதுபோன்று பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு உள்ள இந்த கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் இன்று (4-ந்தேதி) நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. நேற்று வரை ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றன. விழாவில் சிகர நிகழ்ச்சியான கும்பாபி ஷேகம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி இன்று அதி காலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மங்களநாதர்-மங்களேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் அதனைத் தொடர்ந்து ஆறாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
காலை 9 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகசாலை யில் இருந்து புனித நீர் உள்ள கும்பத்துடன் வலம் வந்தனர். சரியாக 9.30 மணிக்கு மங்களநாதர்-மங்களேஸ்வரி கோவில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள் சிவனே போற்றி என பக்தி கோஷ மிட்டு வழிபட்டனர். தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வடக்கு வாசல் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
கும்பாபிஷேக விழாவில் ராமநாதபுரம் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., ராமநாதபுரம் சேதுபதி ராணி, ராஜேஸ்வரி நாச்சியார், இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி மரகத நடராஜர் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நடராஜரை தரிசிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் இன்று இரவு மரகத நடராஜருக்கு 32 வகையான திரவ பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் சந்தனம் பூசப்பட்டு நடை சாத்தப்படும். அதன் பின் ஆருத்ரா நாளன்று மரகத நடராஜர் சன்னதி திறக்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை என்ற ஸ்தலத்தில் மங்கள நாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம், தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மூலம் திருப்பணிகள் முடி வடைந்துள்ளன. 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.
ஆருத்ரா தரிசன விழாவின் போது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி அன்று திருஉத்திரகோச மங்கை கோவிலில் மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும் என்பதால் தமிழ கத்தின் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேக விழா விற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பேரில் கீழக்கரை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து திவான் பழனிவேல் பாண்டியன் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-
கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு மரகத நடராஜர் சன்னதி திறக்கப் பட்டு சந்தன காப்பு களை யப்பட்டது. 4-ந்தேதி வரை 3 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்திருக்கும்.
4-ந் தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சாத்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சாத்தப்படுகிறது. கும்பாபி ஷேகம் நடைபெறும் நாளன்று மேல்பகுதி தளத் தில் மட்டும் சுமார் 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத் திற்கு தேவையான அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடை பெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செங்கல் கட்டமைப்புடன் கூடிய இதில் கலசங்கள் இல்லை.
- ஆதிசிதம்பரம் எனப்படும் தனி கோவிலாக நடராஜ பெருமான் எழுந்தருளியுள்ளார்.
ராமேசுவரம், உத்திரகோசமங்கை ஆகிய இருகோவில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுரம் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது.

பழமையான திருக்கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் கோபுரம் உரிய அமைப்பில் உள்ளது. இடதுபுறம் உள்ளது மொட்டையாகக் காட்சி தருகின்றது. வலப்புரம் கோபுரமும் மிகப்பழமையானதாகும்.
செங்கல் கட்டமைப்புடன் கூடிய இதில் கலசங்கள் இல்லை. ஏழு நிலைகளை கொண்டுள்ளது. இரு வெளிக் கோபுரங்களுக்கும் உள்கோபுரங்கள் உள்ளன. வலப்புற உள்கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இடப்புற உள்கோபுரம் மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது.
வலப்பால் உள்ள கோபுரத்தின் முன்னால் நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர் தரிசனம், உட்புறம் வலதுபக்கம் குளத்தை கடந்து, உள்கோபுரம் பார்த்து வணங்கிவிட்டு உள்ளே சென்றால், இடதுபுற பிராகாரத்தில் வாகனங்கள், வாயிலைத்தாண்டி இடதுபக்கம் திரும்பினால் யோக தட்சிணாமூர்த்தி தனியே கால் மேல் கால் மடித்துப்போட்டு, அபயவரத முத்திரைகளுடன் ஒரு கையை உயர்த்தி ஒரு கையைத் தாழ்த்தி அமர்ந்து காட்சி தருகின்றார். சிவலிங்க பாணமும், நாகப் பிரதிஷ்டையும் அருகில் உள்ளன.
விநாயகரைத் தொழுது பலிபீடம், கொடிமரம், நந்தி இவற்றை வணங்கியவாறே உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடையலாம். முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார்.

மற்ற தூண்களில் பாஸ்கர சேதுபதி, சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர். இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் தரிசனம்.
பிரகாரச் சுவரில் திருவாசகப் பகுதிகளான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அறுபத்து மூவர் மூலத்திருமேனிகளின் தரிசனம், சப்த மாதாக்கள், முடிவில் விநாயகரும் ரிஷபாரூடரும் காட்சி தருகின்றனர்.

வலம் முடித்து துவார பாலகர்களை வணங்கிய பின்னர் உள்ளே சென்றால் மூலவரின் திவ்யமான தரிசனம் கிடைக்கும். எதிரில் நந்திதேவர் நீர் கட்டும் அமைப்பில், அனுக்ஞை விநாயகரைக் கும்பிட்டு உட்புறமாகப் பார்த்தால் மங்களேசுவரர் மங்களகரமாக காட்சியளிக்கிறார்.
அடுத்த தரிசனம் மங்களாம்பிகை. நான்கு கரங்களுடன் அபயம் செய்கிறார். ஒருகரம் தொடையில் நிறுத்தி, இருகரங்களில் தாமரையும், ருத்ராட்சமும் ஏந்தித் தரிசனம் தருகிறாள். இந்த கோவிலில் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம்.
நடராஜாவுக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவ மாடிக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது. பிரகார அழகு ராமேசுவரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன.

உலா வருவதற்குரிய நடராஜத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் வல்லபை விநாயகரைத் தரிசிக்கலாம்.
ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோவிலாக நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ளார். இது கோவிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. பலிபீடம், கொடி மரம், நந்தி தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சியளிக்கின்றனர். சுற்றிலும் அகழி அமைப்பு. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சன்னிதியாக காட்சி அளிக்கிறது.
இதையடுத்து முன்மண்டபத்தின் சிறிய மேடையில்தான் உச்சிக்காலத்தில் ஸ்படிக, மரகதலிங்கங்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர். அதைத் தரிசிக்கும் போதே வலதுபக்க சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும், இடதுபக்கம் திரும்பி உமா மகேசுவரரையும் ஒரு சேரத் தரிசிக்கலாம்.
உமாமகேசுவரர் சந்நிதிக்குப் படிகளேறிச் சென்று தரிசித்துவிட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கி பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டு உள்ளதையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியையும் காணலாம்.
கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் உபதேசிக்க எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அற்புதமாக உள்ளது.
நடராஜர் கோவிலுக்குப் பக்கத்தில் தனியே சஹஸ்ரலிங்க சன்னிதி உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக்கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் உட்புறத்தில் தல விருட்சத்தின் வேர் உள்ளது. வியாசரும், காகபுஜண்டரும் இங்குத்தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தல விருட்சமான இலந்தைமரம் உள்ளது.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு 4-ந்தேதி கும்பாபிஷேகம்.
- இன்று மாலை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்படுகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களேசு வரி உடனுறை மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.
சமஸ்தான தேவஸ்தானம், தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மூலம் திருப்பணிகள் முடிவடைந்துள்ளன. 4-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது இன்று மாலை திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்படுகிறது.
இதுகுறித்து திவான் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-
கும்பாபிஷேகம் நடை பெறுவதை முன்னிட்டு இன்று மாலை மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு அவருக்கு சாத்தப்பட்டுள்ள சந்தனக்காப்புகளையப்படுகிறது. 4-ந்தேதி வரை 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்திருக்கும். தொடர்ந்து 4-ந்தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சாத்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சாத்தப்படுகிறது.
கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று மேல்பகுதி தளத்தில் மட்டும் சுமார் 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத்திற்கு தேவையான அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், 2-வது நாளாக இன்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் நடை பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
ஆருத்ரா தரிசன விழாவின் போது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி அன்று திரு உத்தரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும் என்பதால் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
- பக்தர்களுக்கு விலையில்லா சந்தனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-
திருஉத்தரகோசமங்கை மங்களநாதசாமி கோவில் வளாகத்தில் மரகதத்திலான நடராஜர் சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காட்சியளிக்கும் இந்த நடராஜர் சிலை ஆருத்ரா தரிசனத்தை யொட்டி சந்தனக்காப்பு களையப்படும்.
நாளை மறுநாள் (5-ந் தேதி) காலை 8 மணிக்கு சந்தனம் களைதலும், 9 மணிக்கு மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். இரவு 11 மணிக்கு மேல் மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து வருகிற 6-ந்தேதி அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 1.50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போலி சந்தன பாக்கெட் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தர்கள் சிரமமில்லாமல் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் பொது தரிசனம், ரூ.10, ரூ.100, ரூ.250 என 4 பிரிவுகளாக மரத்தடுப்புகள் அமைத்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வி. ஐ, பி, வி.வி.ஐ.பி.க்களுக்கு தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் சிரமமின்றி வெளியில் செல்ல 2 புதிய பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.100, ரூ.250 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு விலை யில்லா சந்தனம் வழங்கப்படும். மேலும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 28 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர 20 காமிரா கூடுதலாக பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் 12 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரிசையில் நீண்ட நேரமாக நிற்கும் பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் குறிப்பிட்ட இடத்திற்கே சென்று சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கிட கோவில் நிர்வாகத்தால் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இரவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பால் வழங்கப்படும்.
மதுரை, காரைக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர் உள்பட முக்கிய ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள புதிய கலையரங்கத்தில் வருகிற 5-ந்தேதி காலை 9 மணி முதல் 6-ந் தேதி காலை 9 மணி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 26 குழுவினர் பங்கேற்க உள்ளனர். ராமநாதபுரம் சமஸ்தா னம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி ராஜேஸ்வரி நாச்சியார் அறிவுரையின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






