என் மலர்
வழிபாடு

திருஉத்திரகோசமங்கை கோவிலில் எப்படி வழிபடவேண்டும்?
- செங்கல் கட்டமைப்புடன் கூடிய இதில் கலசங்கள் இல்லை.
- ஆதிசிதம்பரம் எனப்படும் தனி கோவிலாக நடராஜ பெருமான் எழுந்தருளியுள்ளார்.
ராமேசுவரம், உத்திரகோசமங்கை ஆகிய இருகோவில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுரம் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது.
பழமையான திருக்கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் கோபுரம் உரிய அமைப்பில் உள்ளது. இடதுபுறம் உள்ளது மொட்டையாகக் காட்சி தருகின்றது. வலப்புரம் கோபுரமும் மிகப்பழமையானதாகும்.
செங்கல் கட்டமைப்புடன் கூடிய இதில் கலசங்கள் இல்லை. ஏழு நிலைகளை கொண்டுள்ளது. இரு வெளிக் கோபுரங்களுக்கும் உள்கோபுரங்கள் உள்ளன. வலப்புற உள்கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இடப்புற உள்கோபுரம் மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது.
வலப்பால் உள்ள கோபுரத்தின் முன்னால் நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர் தரிசனம், உட்புறம் வலதுபக்கம் குளத்தை கடந்து, உள்கோபுரம் பார்த்து வணங்கிவிட்டு உள்ளே சென்றால், இடதுபுற பிராகாரத்தில் வாகனங்கள், வாயிலைத்தாண்டி இடதுபக்கம் திரும்பினால் யோக தட்சிணாமூர்த்தி தனியே கால் மேல் கால் மடித்துப்போட்டு, அபயவரத முத்திரைகளுடன் ஒரு கையை உயர்த்தி ஒரு கையைத் தாழ்த்தி அமர்ந்து காட்சி தருகின்றார். சிவலிங்க பாணமும், நாகப் பிரதிஷ்டையும் அருகில் உள்ளன.
விநாயகரைத் தொழுது பலிபீடம், கொடிமரம், நந்தி இவற்றை வணங்கியவாறே உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடையலாம். முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார்.
மற்ற தூண்களில் பாஸ்கர சேதுபதி, சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர். இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் தரிசனம்.
பிரகாரச் சுவரில் திருவாசகப் பகுதிகளான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அறுபத்து மூவர் மூலத்திருமேனிகளின் தரிசனம், சப்த மாதாக்கள், முடிவில் விநாயகரும் ரிஷபாரூடரும் காட்சி தருகின்றனர்.
வலம் முடித்து துவார பாலகர்களை வணங்கிய பின்னர் உள்ளே சென்றால் மூலவரின் திவ்யமான தரிசனம் கிடைக்கும். எதிரில் நந்திதேவர் நீர் கட்டும் அமைப்பில், அனுக்ஞை விநாயகரைக் கும்பிட்டு உட்புறமாகப் பார்த்தால் மங்களேசுவரர் மங்களகரமாக காட்சியளிக்கிறார்.
அடுத்த தரிசனம் மங்களாம்பிகை. நான்கு கரங்களுடன் அபயம் செய்கிறார். ஒருகரம் தொடையில் நிறுத்தி, இருகரங்களில் தாமரையும், ருத்ராட்சமும் ஏந்தித் தரிசனம் தருகிறாள். இந்த கோவிலில் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம்.
நடராஜாவுக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவ மாடிக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது. பிரகார அழகு ராமேசுவரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன.
உலா வருவதற்குரிய நடராஜத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் வல்லபை விநாயகரைத் தரிசிக்கலாம்.
ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோவிலாக நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ளார். இது கோவிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. பலிபீடம், கொடி மரம், நந்தி தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சியளிக்கின்றனர். சுற்றிலும் அகழி அமைப்பு. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சன்னிதியாக காட்சி அளிக்கிறது.
இதையடுத்து முன்மண்டபத்தின் சிறிய மேடையில்தான் உச்சிக்காலத்தில் ஸ்படிக, மரகதலிங்கங்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர். அதைத் தரிசிக்கும் போதே வலதுபக்க சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும், இடதுபக்கம் திரும்பி உமா மகேசுவரரையும் ஒரு சேரத் தரிசிக்கலாம்.
உமாமகேசுவரர் சந்நிதிக்குப் படிகளேறிச் சென்று தரிசித்துவிட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கி பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டு உள்ளதையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியையும் காணலாம்.
கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் உபதேசிக்க எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அற்புதமாக உள்ளது.
நடராஜர் கோவிலுக்குப் பக்கத்தில் தனியே சஹஸ்ரலிங்க சன்னிதி உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக்கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் உட்புறத்தில் தல விருட்சத்தின் வேர் உள்ளது. வியாசரும், காகபுஜண்டரும் இங்குத்தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தல விருட்சமான இலந்தைமரம் உள்ளது.






