என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு மதுரையில் தொடங்கியது

    • அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • . வருகிற 6-ந்தேதி மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது.

    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    அகில இந்திய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று காலை மதுரை தமுங்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை வழங்க, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் பத்மநாபன் செங் கொடியை பெற்றுக்கொண் டார். பின்னர் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து கொடியேறி பாலகிருஷ்ணன் நினைவு அரங்கில் கட்சியின் பொது மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக்க சர்க்கார் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ. எம்.எல். விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி. பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் பொது மாநாடு தொடங்கி நடைபெற்றது.

    முன்னதாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை வந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மாநாட்டு அரங்கினை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர்.

    மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை 5 மணிக்கு கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் தலைப்பில் மாநில உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கிற்கு மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

    மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்கிறார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உரையாற்றுகிறார். கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, சி.பி.ஐ.எம். ஒருங்கிணைப் பாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    மாநாட்டில் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, வெற்றிமாறன், பிரகாஷ் ராஜ், மாரி செல்வராஜ், ஞானவேல், சசிக்குமார், பிரகாஷ்ராஜ், ராஜூமுருகன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். பொது மாநாட்டை தொடர்ந்து இன்று பிற்பகல் தொடங்கி வரும் 6-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    மாநாடு நடைபெறும் 6 நாட்களும் மாலை நேரங்களில் தோழர் ஜானகி அம்மாள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி மேடையில் கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்கள் நடைபெறுகின்றன. வருகிற 6-ந்தேதி மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது. இதனை வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்கின்றனர். அன்று மாலை 4 மணிக்கு வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

    அந்நிகழ்வில் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்வர் பினராய் விஜயன், அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ராமகி ருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி, சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் ரெயில், வாகனங்கள் மூலம் நேற்று காலை முதலே மதுரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் மதுரை மாநகர் முழுவதும் செங்கொடிகள் பறக்க விடப்பட்டு ஆங்காங்கே வரவேற்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு என்பதால் அகில இந்திய அளவில் கட்சியின் பிரதிநிதிகள் முக்கிய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×