என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எஸ்.வி. சேகரின் செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
    • விஷ ஊசி போட்டு டாக்டர் கொலை செய்வதுபோல் சீன் இருந்தால் டாக்டர்கள் மீது கோபம் கொள்வதா?

    பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

    கடந்த 27-ந்தேதியன்று நாரதகான சபாவில் நடைபெற்ற நாடகத்தில் மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியும் நடித்தும் அவர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் அரங்கேற்றியதாக அவர் மீது புகார் எழுந்தது.

    எஸ்.வி. சேகரின் இந்த செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக எஸ்.வி. சேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    * பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியது நான் இல்லை, நான் நடித்த எம்.எல்.ஏ. கதாபாத்திரம் தான் அப்படி பேசியது.

    * வேறொருவர் எழுதிய வசனத்தை பேசிய நடிகனான என்னை இழிவுபடுத்துவது சரியா?

    * விஷ ஊசி போட்டு டாக்டர் கொலை செய்வதுபோல் சீன் இருந்தால் டாக்டர்கள் மீது கோபம் கொள்வதா?

    * பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக சினிமாவில் வசனமே வரவில்லையா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 பிரதமர்கள் தலைமையில் அமைச்சரவையில் தி.மு.க. அரசு அங்கம் வகித்திருந்தது.
    • கச்சத்தீவை மீட்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சென்னை:

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கச்சத்தீவு தொடர்பாக தமிழக அரசு சபையில் கொண்டுவந்த தீர்மானத்தில் அ.தி.மு.க.வின் கருத்துகளை தெரிவித்துள்ளோம்.

    * தமிழக மீனவர்களின் உரிமை பறிபோய் விடும் என அப்போதே எம்.ஜி.ஆர். எதிர்த்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க. எதிர்த்து வருகிறது.

    * காலம் காலமாக கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

    * வலைகளை காய வைக்கவும், ஓய்வெடுக்கவும் கச்சத்தீவை மீனவர்கள் பயன்படுத்தினர்.

    * கச்சத்தீவு தரை வார்க்கப்பட்டதால் அன்று முதல் இன்று வரை மீனவர்களுக்கு சோதனை.

    * 5 பிரதமர்கள் தலைமையில் அமைச்சரவையில் தி.மு.க. அரசு அங்கம் வகித்திருந்தது.

    * கச்சத்தீவை மீட்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    * தேர்தல் நெருங்குவதையொட்டி மீனவர்களுக்கு நன்மை செய்வது போல் நாடகம்.

    * சட்டமன்ற தேர்தல் வருவதால் தான் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள்.

    * கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு இப்போது தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வரப்போகும் தேர்தல்தான் காரணம்.

    * 39 எம்.பி.க்களும் சேர்ந்து கச்சத்தீவு விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அழுத்தம் தரவில்லை.

    * கச்சத்தீவை மீட்க 2008-ம் ஆண்டு ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஆட்சிக்கு வந்த பின் வழக்கில் அரசையும் இணைத்தார் என்றார். 

    • கச்சத்தீவு தனித்தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
    • கச்சத்தீவு விவகாரத்திற்கும் ஜெயலலிதா சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

    கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார்.

    தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத் தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.

    இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து கச்சத்தீவு தனித்தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

    அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்காதது ஏன்?

    இந்திரா காந்தி இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை கொடுத்து இருப்பார். அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கு கொடுத்த சிகிச்சையை ஏன் ஜெயலலிதாவுக்கு கொடுக்கவில்லை? என்று அ.தி.மு.க.வினரிடம் கேள்வி எழுப்பினார்.

    கச்சத்தீவு விவகாரத்திற்கும் ஜெயலலிதா சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விஷயங்களை பேரவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.

    அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பை அடுத்து செல்வப்பெருந்தகை பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

    • இதுவரை ஒருமுறை கூட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை.
    • மாநில அரசுகளுடனும், ஓ.பி.சி. அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயனடைவதை உறுதி செய்யும் வகையில், கிரீமிலேயர் பிரிவினரை தீர்மானிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்தில் இருந்து கணிசமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஓபிசி வகுப்பினரின் நலனுக்கான பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

    கிரீமிலேயர் வருமான வரம்பு சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், 2017-ம் ஆண்டுக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக கிரிமீலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒருமுறை கூட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. இப்போது பாராளுமன்ற நிலைக்குழுவே இது குறித்து பரிந்துரை செய்திருக்கும் நிலையில், அதை ஏற்று மாநில அரசுகளுடனும், ஓ.பி.சி. அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 97 இந்திய மீனவர்கள் சிறையில் உள்ளதாக பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
    • தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.

    சென்னை:

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.

    இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத் தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வேறு மாநில மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டால் ஒன்றிய அரசு இப்படிதான் நடக்குமா?

    2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் ஒரு மீனவர்கள் கூட கைது செய்யப்படமாட்டார்கள் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் 97 இந்திய மீனவர்கள் சிறையில் உள்ளதாக பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

    அரசு முறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டுமென்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்றார்.

    இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது, கச்சத்தீவை மீட்பதற்கான உறுதியான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுப்பார் என்று நம்புகிறேன். புயல், சூறாவளிக்கு அஞ்சி வாழும் மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படைக்கும் அஞ்சி வாழும் நிலை உள்ளதாக ம.ம.க. உறுப்பினர் அப்துல் சமது பேசினார்.

    இதனிடையே கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு தெரிவிக்கப்பட்டு தான் கச்சத்தீவு கொடுப்பட்டது என்பது வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், கலைஞருக்கு இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை நான் விடுகிறேன் என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தனர். அதனை தொடர்ந்து தமிழக மீனவர்களின் உணர்வுகளுக்கு துணை நிற்பதால் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக பா.ஜ.க. அறிவித்தது.

    • இருவர் அண்ணா சாலை ஓட்டலில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒரே ஓட்டலின் இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த ஓட்டல்களில் கடந்த 30-ந்தேதி பிரியாணி வாங்கி சாப்பிட்ட 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சஸ்மா, சமீரா ஆகிய இருவர் அண்ணா சாலை ஓட்டலில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விக்னேஷ், ரபேக்கா உள்பட 6 பேருக்கு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் 8 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டா் கோரப்பட்டு உள்ளது.
    • தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் மொத்தம் 3.04 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை மின்வாரியம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுத்து வசூலித்து வருகிறது.

    குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை செலுத்தாத மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. பின்னா் அபராத தொகையுடன் மின் கட்டணத்தை செலுத்திய பிறகு மின்வாரிய ஊழியா்கள் மீண்டும் இணைப்பை வழங்குவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவது என்ற நடைமுறையை மாற்றி மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. தனது தோ்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணி நடந்து முடிந்தவுடன் மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சா் செந்தில் பாலாஜி உறுதியளித்தாா்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டா் கோரப்பட்டு உள்ளது. தகுதியான 5 முதல் 6 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது. அதற்குள் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்பட்ட பகுதிகளில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை சோதனை அடிப்படையில் தொடங்க அரசு திட்டமிட்டு உள்ளது.

    தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 1 கோடி வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகிறது. அந்த வீடுகளுக்கு முதலில் பரீட்சார்த்தமான முறையில் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்பட உள்ளது. எனவே வருகிற ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு வீடுகளுக்கு மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறையை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.
    • ஒட்டு மொத்த பாரத நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரது இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்.

    கடந்த இருபது ஆண்டுகளில், இலங்கை அரசால், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்குக் காரணம், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தந்தை மறைந்த கருணாநிதி அவர்கள், கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான்.

    கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.

    கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திரா காந்தி அவர்களின் ராஜதந்திரம் என்று கூறினார் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை. தமிழக மீனவ மக்களுக்குச் செய்த துரோகம், உங்களுக்கு ராஜதந்திரமா?

    காங்கிரஸுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிறகு, பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருந்தது திமுக. கடந்த நாற்பது ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக? இலங்கைப் போரின்போது, திமுக நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை ராணுவத்தால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சர்களாக இருந்து ஊழல் செய்வதில் மட்டுமே மும்முரமாக இருந்த திமுக, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நம் கண்முன்னே கண்ட வரலாறு.

    கடந்த 2014 ஆம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களை பத்திரமாக மீட்டது நமது பாரதப் பிரதமர் மோடி அரசு. மோடி அவர்கள் பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பாரத நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.

    கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கபட நாடகம் ஆடும் ஸ்டாலின் அவர்களையோ, திமுக காங்கிரஸ் கூட்டணியையோ, பொதுமக்கள் நம்பப் போவதில்லை என்று கூறியுள்ளார். 



    • எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து திரும்பியதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

    2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து திரும்பியதும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதற்கிடையில் இந்த இரு கட்சிகள் நெருங்கி வருவது தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் பேசுபொருளாகி இருக்கிறது.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துவமான கட்சியாக செயல்பட வேண்டும். தேர்தலில் சீட்டுக்காக திராவிட கட்சிகளிடம் கை ஏந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் தான் கூட்டணி அமையாமல் போனது என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள். எனவே இந்த தேர்தலிலும் அந்த மாதிரி சூழ்நிலை வரக்கூடாது என்று அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கருதுகிறார்கள்.

    இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

    இதையடுத்து தலைவர் பதவியை குறி வைத்து மூத்த நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகிறார்கள். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இந்த ரேசில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும் என்று பரமக்குடியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில், வேண்டும்... வேண்டும்... மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும்... வேண்டாம்... வேண்டாம்... அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்... என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

    பா.ஜ.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக உள்ளதாக கூறப்படும் நிலையில் பரமக்குடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன.
    • 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் மற்றும் கடலுக்கு அருகில் நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன. தற்போது நாழி கிணறு தீட்டத்த கட்டம் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.

    பொதுவாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பு. இந்த நேரங்களில் கடலில் இருந்து ஏதாவது கல்வெட்டுகள், மற்றும் பாறைகள் வெளியே தெரியும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் கரையில் சுமார் 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    அதனை அங்கிருந்த பவுர்ணமி சித்தர் என்பவர் அதை கண்டு கல்வெட்டு மீது திருநீறு பூசி அதில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துக்களை பார்த்த போது கந்த மாதன தீர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தது.

    இந்த கல்வெட்டு 24 தீர்த்த கட்டங்களில் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் பாவங்களை நீக்கி அவர்களை பரிசுத்தமாக்கும் என்பது ஐதீகம். இதுவும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்தினர் வந்து கல்வெட்டை எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.இந்த கல்வெட்டை ஏராளமான பக்தர்கள் பார்த்து வணங்கி சென்றனர்.

    • ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை-இலங்கை இடையே 7 விமான சேவைகளை புதிதாக தொடங்குகிறது.
    • வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்பட்ட விமானம், இனிமேல் 3 நாட்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

    ஆலந்தூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ள நிலையில் விரைவில் கல்வி நிலையங்களில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட உள்ளது. இதையடுத்து கோடை விடுமுறையை ஜாலியாக கழிக்க பெரும்பாலானோர் வெளியூர் மற்றும் வெளி நாடுகள் போன்றவைகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதனால் வெளி மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் விமானங்களிலும், வெளிநாடு செல்லும் விமானங்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. கட்டணமும் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    வழக்கமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் வழக்கமாக வருகை புறப்பாடுகள் பயணிகள் எண்ணிக்கை, நாளொன்றுக்கு சுமார் 50,000 ஆக இருந்தது, தற்போது இது 60 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. கோடை விடுமுறை நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது. சென்னை-இலங்கை இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம் வாரத்தில் 7 விமானங்களை இயக்கி வந்தன. இது வாரம் 10 விமானங்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை-இலங்கை இடையே 7 விமான சேவைகளை புதிதாக தொடங்குகிறது. இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு, மழைக்காலத்தில் மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கோடை சிறப்பாக, சென்னை-யாழ்ப்பாணம் இடையே வாரம் 7 விமான சேவைகளை தொடங்க உள்ளது.

    இவை தவிர சென்னை-குவைத் இடையே வாரத்தில் 5 விமானங்கள் இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இனிமேல் வாரத்தில் 7 விமானங்களும், சென்னை-மஸ்கட் இடையே வாரத்தில் ஒரு நாள் இயக்கப்பட்ட விமானம், இனிமேல் வாரத்தில் இரண்டு நாட்களும், சென்னை- தமாம் இடையே, வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்பட்ட விமானம், இனிமேல் 3 நாட்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

    இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரத்தில் 7 நாட்கள், சென்னை-குவைத் இடையே விமான சேவையை புதிதாக தொடங்குகிறது. மேலும் ஓமன் ஏர்வேஸ் நிறுவனம், சென்னை-மஸ்கட் இடையே வாரத்தில் 11 விமானங்களை இயக்கியது, இனிமேல் 14 விமானங்களாகவும், சென்னை-பக்ரைன் இடையே கல்ப் ஏர்வேஸ் நிறுவனம் வாரம் 7 விமானங்களை இயக்கியது, இனிமேல் 10 விமானங்களாகவும், சென்னை-டாக்கா இடையே யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரம் 3 விமானங்களை இயக்கியது. இனிமேல் 11 விமானங்களை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோடை காலத்தில் சம்மர் ஸ்பெஷல் விமானங்களாக, மொத்தம் 42 புதிய சர்வதேச விமானங்கள் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதைப்போல் உள்நாட்டு விமானங்களில், ஏர் இந்தியா விமான நிறுவனம் சென்னை-பெங்களூரு இடையே தற்போது வாரத்தில் 12 விமானங்கள் இயக்கி வரும் நிலையில், இனிமேல் அது 23 ஆகவும், டெல்லிக்கு 70 விமானங்கள் இயக்கி வரும் நிலையில் இனிமேல் 77 விமானங்க ளாகவும், மதுரைக்கு 7 விமானங்கள் இயக்கி வரும் நிலையில், இனிமேல் 14 விமானங்களாகவும், மும்பைக்கு இயக்கப்படும் 42 விமானங்கள் 49 விமானங்களாகவும் ஏர் இந்தியா அதிகரித்துள்ளது.

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கொச்சிக்கு இயக்கும் 2 விமானங்களை, 14 ஆகவும், கவுகாத்திக்கு இயக்கும் 7 விமானங்களை, 21 விமானங்களாகவும், ஐதராபாத்துக்கு இயக்கும் 7 விமானங்களை, 21 விமானங்களாகவும் வாரணாசி, நொய்டாவுக்கு 7 விமானங்களும் புதிதாக இயக்குகின்றன.

    இதைப்போல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தூத்துக்குடிக்கு இயக்கும் 28 விமானங்களை 35 ஆகவும், திருச்சிக்கு இயக்கும் 46 விமானங்களை 49 ஆகவும், கொச்சிக்கு இயக்கும் 40 விமானங்களை 47 ஆகவும், அகமதாபாத்துக்கு இயக்கும் 27 விமானங்களை 28 ஆகவும் அதிகரித்து இயக்க முடிவு செய்துள்ளது.

    ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், அயோத்தி, கொச்சி, ஐதராபாத் மதுரை, தூத்துக்குடி, புனே சீரடி, சிவமுகா ஆகிய விமான நிலையங்களுக்கு கூடுதலாக, விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.

    இதைப்போல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சம்மர் ஸ்பெஷலாக, 164 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதில் பல விமான சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. மற்ற விமான சேவைகள் படிப்படியாக, பயணிகள் கூட்டம் மற்றும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறை பயணிகள் கூட்டத்தை சமாளிக்க, கோடை காலம் முழுமைக்கும் 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 206 கோடை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜகோபாலன் மீது வெண்ணையை வீசி அன்பை பொழிந்தனர்.
    • நாளை காலை தேரோட்டம்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் பெருமாள் சன்னதியில் மூலவராக பரவாசுதேவ பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    உற்சவராக ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்தியபாமா சமேதராக மாடு மேய்க்கும் கண்ணன் திருக்கோலத்திலும், செங்கமலத் தாயார் தனி சன்னதியிலும் அருள்பாலித்து வருகின்றனர்.

    பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடக்கும் கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் ஒரு மாத திருவிழா இக்கோவிலின் முக்கியமான விழாவாகும். அப்போது 18 நாட்கள் உற்சவமும், 12 நாட்கள் விடையாற்றியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெரிய கொடிமரத்திற்கு பூஜைகள் நடைபெற்று, கருட பகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது. இதனை காண தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத் தாழி உற்சவம் இன்று (புதன்கிழமை) காலை விமரிசையாக நடந்தது. இதையொட்டி காலை நவநீத சேவையில் ராஜகோபாலன் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு 4 வீதிகளையும் வலம் வந்து, பெரிய கடைத்தெரு வழியாக சென்று காந்தி ரோட்டில் உள்ள வெண்ணெய் தாழி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    வீதிஉலா சென்ற வழியெங்கும் பக்தர்கள் அலைகடலென திரண்டு தவழும் கண்ணனாக வரும் ராஜகோபாலன் மீது வெண்ணையை வீசி அன்பை பொழிந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வெண்ணையை வீசி வழிபட்டதால் மன்னார்குடி நகரமே விழாக்கோலம் பூண்டது.

    அதனைத் தொடர்ந்து, இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருகிறார். தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    ×