என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டசபையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான பேச்சு- அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
- கச்சத்தீவு தனித்தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
- கச்சத்தீவு விவகாரத்திற்கும் ஜெயலலிதா சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார்.
தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத் தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.
இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து கச்சத்தீவு தனித்தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்காதது ஏன்?
இந்திரா காந்தி இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை கொடுத்து இருப்பார். அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கு கொடுத்த சிகிச்சையை ஏன் ஜெயலலிதாவுக்கு கொடுக்கவில்லை? என்று அ.தி.மு.க.வினரிடம் கேள்வி எழுப்பினார்.
கச்சத்தீவு விவகாரத்திற்கும் ஜெயலலிதா சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விஷயங்களை பேரவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பை அடுத்து செல்வப்பெருந்தகை பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.






