என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் இயங்கவில்லை.
- சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த நிலையில் பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் முதியவர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
இந்தநிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் இயங்கவில்லை. இதனால் செல்போன் டார்ச்லைட் உதவியுடன் மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்
- சென்னை உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்குவழங்கப்படும் இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று என்று செவிலியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு செவிலியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- நிஷாகந்தி மலர்கள் பொதுவாக இரவில் மட்டுமே மலரக்கூடிய அரிய வகை மலர்.
- காய்ச்சல், சளி, மூச்சுக் குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் உகார்தே நகர் பகுதியில் ஜான் கென்னடி என்பவர் வீட்டில் பிரம்மகமலம் என்றழைக்கப்படும் நிஷாகந்தி மலர்செடிகளை மாடித்தோட்டத்தில் பல வருடங்களாக வளர்த்து வருகிறார்.
அரிய வகை பிரம்ம கமலப்பூ நிஷாகந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலர்களின் செடிகள் கள்ளிச்செடி இனத்தை சேர்ந்தவை ஆகும். இவற்றின் தண்டுகளை வெட்டி வைத்தாலே வளரக்கூடிய தன்மை உடையது.
நிஷாகந்தி மலர்கள் வெண்ணிற வண்ணத்தில் 3 இதழ்களை கொண்டதாகவும் மிகவும் அழகாகவும் இருக்கும். மலரும் பொழுது சுமார் 10 மீட்டர் சுற்றளவு பூவின் நறுமணம் இருக்கும்.
நிஷாகந்தி மலர்கள் பொதுவாக இரவில் மட்டுமே மலரக்கூடிய அரிய வகை மலர். மலர்ந்த சில மணி நேரங்களில் குவிந்து மொட்டுகள் போல் காட்சி அளிக்கும். மலர்ந்த சில மணி நேரங்களில் பலர் விளக்கேற்றி வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நிஷாகந்தி மலர்கள் மருத்துவ குணம் கொண்டது என்று கூறப்படுகிறது. காய்ச்சல், சளி, மூச்சுக் குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
கொடைக்கானலில் உகார்தே நகர் பகுதியில் வசிக்கும் ஜான் கென்னடி வீட்டில் மாடி தோட்டத்தில் மலர்ந்திருக்கும் நிஷாகந்தி பூக்களை அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனர்.
- கோவையில் 27-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
- 26 மற்றும் 27-தேதிகளில் தமிழக வெற்றிக் கழக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு.
கோவை:
கோவை செட்டிப்பாளையம் பகுதியில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து வனத்துறை அலுவலகத்தில் நடக்கும் விழாவில் பெத்திக்குட்டை வனவிலங்குகள் மறுவாழ்வு மைய கட்டிடத்தை தொடங்கி வைத்து வனத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிடுகிறார்.
மாலையில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து சர்வதேச தரத்திலான ஆக்கி மைதானம் அமைக்கும் பணியையும் தொடங்கிவைக்கிறார்.
இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 26-ந் தேதி மாலையே கோவை வருகிறார். அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
கனிமொழி
இதேபோல தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.யும் கோவை வருகை தர உள் ளார். தி.மு.க. மகளிர் அணி சார்பில் வருகிற 25-ந் தேதி மாலை கணியூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் கருத்தரங்கு நடக்கிறது.
இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசுகிறார். கோவை வருகை தரும் கனிமொழி எம்.பி.க்கும் உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க. நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
விஜய் கட்சி மாநாடு
இதற்கிடையே தமிழக வெற்றிக்கழக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடக்கிறது. 2 நாள் மாநாட்டிலும் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். இதற்காக அவர் 26-ந் தேதி கோவை வருகை தர உள்ளார்.
கட்சித் தொடங்கிய பிறகு முதன்முறையாக விஜய் கோவை வருவதால் அவருக்கும் உற்சாக வர வேற்பு அளிக்க தமிழக வெற்றிக்கழகத்தினர் தட புடல் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இவ்வாறு அரசியல் பிரமுகர்கள் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., விஜய் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் கோவை வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
- ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
- சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இசை வேளாளர் சாதிச் சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தன் மகளுக்குச் சாதிச் சான்றிதழ் கோரி மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் எனக் குறிப்பிட்டுச் சாதிச் சான்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,
* ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
* தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப்பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.
* சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக்கூடாது.
* சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் உள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
- லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது.
- இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல்நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சோனகன்விளை நீல்புரம் பகுதியில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு லோடு ஆட்டோவில் சென்றுள்ளார்.
அப்போது நீல்புரத்தை சேர்ந்த ஜெபராஜ் என்ற கற்கண்டு (வயது 60) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்துள்ளார். அப்போது லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது.
இதில் கண்ணனை, ஜெபராஜ் அடித்தாராம். இது தொடர்பாக நேற்று இரவு கண்ணனுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நீல்புரம் ஜெபராஜ் வீட்டிற்குச் சென்று தட்டிகேட்டுள்ளனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன் ஆதரவாளர்கள் ஜெபராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெபராஜ் திருச்செந்தூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை ஜெபராஜ் தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன் நவீன்(32) திருச்செந்தூருக்கு விரைந்து வந்துள்ளார்.
அங்கு அவரது தந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நவீன் ஆதரவாளர்களும், மற்றொரு தரப்பினரும் திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பு வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
அப்போது இருதரப்பின ரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவரை மாறி மாறி அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.
இந்த சம்பவத்தில் நவீன், திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தவேல் (21), நட்டார் ஆனந்த் (20) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதற்கிடையே சம்பவ இடத்தில் தெருவோர ஓட்டலில் பிரைடு ரைஸ் வாங்க வந்த தூத்துக்குடி பூபால்ராயபுரம் விஜயபி ரகாஷ் (27) என்பவருக்கு முதுகு, கால் ஆகிய இடங்கள் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
காயமடைந்த அனைவருக்கும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த கந்தவேல், நட்டார் ஆனந்த் ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெபராஜ், அவரது மகன் நவீன் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சி்கிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஏ.டி.எஸ்.பி. திபு, டி.எஸ்.பி. மகேஷ்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் விரைந்து சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குரும்பூர் மற்றும் திருச்செந்தூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதட்ட மான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். இந்த சம்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் அவதிஅடைந்தனர்.
- விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களால் தாமதம்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு, சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்பட்டு செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 164 பயணிகள் வந்து இருந்தனர்.
ஆனால் திடீரென சிங்கப்பூர் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப் பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதைப்போல் இன்று காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.
மேலும் காலை 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய, ஏர் இந்தியா பயணிகள் விமானம் தாமதமாக, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு சென்றது.
சிங்கப்பூர், டெல்லி, மும்பை விமானங்கள் 3 மணி நேரம் வரை திடீரென தாமதமாக சென்றதால் அதில் பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் அவதி
அடைந்தனர். அவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, அந்த விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களால் தாமதமாக விமானங்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
- பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
- மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வருகிற 25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வருகிற வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரு துறையின் பிரச்சனையை 10 நிமிடத்தில் எப்படி பேசமுடியும்.
- அ.தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம்.
சென்னை:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
* சட்டசபை சபாநாயகர் இன்று நடந்து கொண்ட விதம் ஜனநாயக படுகொலை.
* ஒரு துறையின் பிரச்சனையை 10 நிமிடத்தில் எப்படி பேசமுடியும். ஆக்கப்பூர்வமாக கருத்துகளை கூறுவதற்கு நேரம் கொடுக்க மறுக்கிறார்கள்.
* மக்கள் பிரச்சனை பேசுவதற்கு அனுமதி கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.
* அ.தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம்.
* முறையாகத்தான் அனுமதி கேட்டேன். தவறாக இருந்தால் நீக்கி விடுங்கள் என்று கூறினேன்.
* டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக யாரும் பதில் கூறவில்லை.
* யாரும் பதில் கூறாததால் ரூ.1000 கோடி முறைகேடு புகார் நிரூபணம் ஆகிறது.
* மதுபாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதலாக விற்பதால் ரூ.5,400 கோடி கிடைக்கிறது என்றார்.
- சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது.
- சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.
ஆவடியில் இருந்து வந்த புறநகர் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது.
ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் 3-வது பெட்டியில் 2 ஜோடி சக்கரங்கள் தடம் புரண்டது. சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.
மிதமான வேகத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
- காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த கவினாஸ்ரீ என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் இளங்கலை பட்டதாரிகள்.
இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரது அய்யர்சாமி-கவினாஸ்ரீ காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இருவீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசினர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர்.
உடனே அங்கிருந்து பொது மக்கள் மற்றும் போலீசார் அவர்களிடமிருந்து காதல் ஜோடியை காப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 குடும்பத்தினரிடம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.
- சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
- போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
இதற்கிடையில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க. மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. மகளிரணி கண்டன போராட்டத்தில் நடிகை கவுதமி பங்கேற்றார்.
போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.






