என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் முகாமிடும் அரசியல் பிரமுகர்கள்- உற்சாகத்தில் தொண்டர்கள்
- கோவையில் 27-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
- 26 மற்றும் 27-தேதிகளில் தமிழக வெற்றிக் கழக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு.
கோவை:
கோவை செட்டிப்பாளையம் பகுதியில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து வனத்துறை அலுவலகத்தில் நடக்கும் விழாவில் பெத்திக்குட்டை வனவிலங்குகள் மறுவாழ்வு மைய கட்டிடத்தை தொடங்கி வைத்து வனத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிடுகிறார்.
மாலையில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து சர்வதேச தரத்திலான ஆக்கி மைதானம் அமைக்கும் பணியையும் தொடங்கிவைக்கிறார்.
இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 26-ந் தேதி மாலையே கோவை வருகிறார். அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
கனிமொழி
இதேபோல தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.யும் கோவை வருகை தர உள் ளார். தி.மு.க. மகளிர் அணி சார்பில் வருகிற 25-ந் தேதி மாலை கணியூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் கருத்தரங்கு நடக்கிறது.
இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசுகிறார். கோவை வருகை தரும் கனிமொழி எம்.பி.க்கும் உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க. நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
விஜய் கட்சி மாநாடு
இதற்கிடையே தமிழக வெற்றிக்கழக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடக்கிறது. 2 நாள் மாநாட்டிலும் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். இதற்காக அவர் 26-ந் தேதி கோவை வருகை தர உள்ளார்.
கட்சித் தொடங்கிய பிறகு முதன்முறையாக விஜய் கோவை வருவதால் அவருக்கும் உற்சாக வர வேற்பு அளிக்க தமிழக வெற்றிக்கழகத்தினர் தட புடல் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இவ்வாறு அரசியல் பிரமுகர்கள் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., விஜய் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் கோவை வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.






