என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
    • மின்சார பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.

    சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    * மக்கள் அதிகளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதுதான் நெரிசலைக் குறைக்க சிறந்த வழி.

    * பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கதான் 120 மின்சாரப் பேருந்துகளை கொண்டு வந்துள்ளோம்.

    * மின்சார பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். இதனால் நெரிசலும் மாசும் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது.
    • எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தவறு செய்கிறார்கள்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பா.ம.க. கட்சி பெயரையோ அல்லது எனது பெயரையோ பயன்படுத்தக்கூடாது. எனது இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடர்ந்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க.கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.ம.க.செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் முரளி சங்கர்,பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது. அவர் அன்புமணி ராமதாஸ் அல்ல. அன்புமணி மட்டுமே. எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தவறு செய்கிறார்கள். அன்புமணிக்கு கட்சியே இல்லை. அவர் உறுப்பினரும் இல்லை. பா.ம.க.வை கைப்பற்ற அவர் பம்மாத்து வேலை செய்து கொண்டிருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    அன்புமணி பா.ம.க. தலைவர் இல்லை என்பது வழக்கில் தெளிவுபடுத்தபட்டுள்ளது. பா.ம.க.வை நான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி ஆரம்பித்தேன். 46 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன். அன்புமணிக்கு பல்வேறு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தேன். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று ஆலமரம் போல் பா.ம.க.வை வளர்த்தேன். ஆலமரம் கிளையின் நுனியை வெட்ட நினைப்பவர்கள் கீழே விழுவார்கள். ஆயிரம் பொய் மூட்டைகளை அன்புமணி ஊடகங்களுக்கு தெரிவித்து வருகிறார். நான் வளர்த்த பூந்தோட்டத்தில் உள்ள செடிகளை பல குரங்குகள் நாசம் செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற பா.ம.க. நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஒட்டு கேட்பு கருவியை வைத்து சொந்த தந்தைக்கு ஆப்பு வைக்க துணிந்தவர்கள் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டிப்பது.

    அன்புமணியின் ஆட்டம் பாட்டம், ஆதாயம் ஆகியவைகளுக்காக அசைந்து, வளைந்து நெளிந்து தேர்தல் ஆணையத்தில் பொய்யான ஆவணங்களை கொடுத்து ஆணைத்தையே ஏமாற்றியது குறித்து ஆய்வு செய்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கோடு, கட்சியின் சின்னம், தலைவர் சம்மந்தமான விஷயத்தில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும் மோசடி வேலைகளையும் சேர்த்து சி.பி.ஐ. விரைந்து விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், வியூகம் அமைக்கவும் ராமதாசுக்கு முழுஅதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    • கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் தடுப்பு மணல் மூட்டைகளையும் தாண்டி தண்ணீர் வந்து உள்ளது.
    • புழல் ஏரியில் 21.20 அடியும், பூண்டி ஏரியில் 35 அடியும் தண்ணீர் முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழையாக கொட்டியது. மேலும் டிட்வா புயலின் தாக்கத்தாலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டின.

    செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமான 24 அடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 750 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீராக 500 கனஅடி தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. நேற்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் மழை கொட்டியது. இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அதன் கரையோரப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது.

     

    செம்பரம்பாக்கம், பழஞ்சூர் பகுதியில் ஏரியின் கரையோரத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. சுமார் 3 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் குன்றத்தூர் அருகே புதுப்பேடு, தாராவூர், குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியிலும் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் சென்று உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஏரியில் 23 அடிவரை தண்ணீர் தேக்கினால் பாதிப்பு இருக்காது. தற்போது ஏரியில் 24 அடி முழுவதும் நிரம்பி உள்ளதால் கரையோரம் உள்ள குடியிருப்புக்குள் தடுப்பு மணல் மூட்டைகளையும் தாண்டி தண்ணீர் வந்து உள்ளது என்றனர்.

    இதேபோல் புழல் ஏரியில் 21.20 அடியும், பூண்டி ஏரியில் 35 அடியும் தண்ணீர் முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. புழல் ஏரிக்கு 270 கனஅடி தண்ணீர் வருகிறது. 50 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரிக்கு 850 கன அடியும் தண்ணீர்வருகிறது. 500 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் 18.86 அடியில் 12.72 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 45 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 461 மி.கன அடி தண்ணீர் உள்ளது.ஏரிக்கு நீர் வரத்து இல்லை.

    • பொதுப்போக்குவரத்தின் பயன்பாடு குறைவதால், போக்குவரத்து நெரிசல், மாசு அதிகரித்துள்ளது.
    • அரசின் நடவடிக்கையால் டிட்வா யுலின் பாதிப்பு வெகுமாக குறைக்கப்பட்டது.

    சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

    * சுற்றுச்சூழல் தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    * பசுமைப் பள்ளி வகுப்பறையில் வெப்பநிலையை குறைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    * தி.மு.க. அரசின் நடவடிக்கையால் தமிழ்நாட்டில் அலையாத்தி மரக்காடுகளின் பரப்பளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    * பெண்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.

    * பொதுப்போக்குவரத்தின் பயன்பாடு குறைவதால், போக்குவரத்து நெரிசல், மாசு அதிகரித்துள்ளது.

    * பொதுமக்கள், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.

    * தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது மற்றொரு கண்.

    * காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பெண்களின் பங்கு அளப்பரியது.

    * அரசின் நடவடிக்கையால் டிட்வா யுலின் பாதிப்பு வெகுமாக குறைக்கப்பட்டது.

    * சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெற்ற ஐ.ஏ.எஸ். சுப்ரியா சாகு போன்றோரால் அரசுக்கு நல்ல பெயர்.

    * காலநிலை தொடர்பாக மாவட்ட அளவில் நடத்தப்படும் ஒருநாள் முகாம், இனி 2 நாட்கள் நடத்தப்படும்.

    * கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17% நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது. ரூ.24,670 கோடி நிதி கேட்டதில் ரூ.4,130 கோடியை மட்டும் கொடுத்துள்ளது.

    * எத்தனையே பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வென்றுள்ளது. அதேபோல் காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த பொதுக்கூட்டத்தில் விஜய் 30 நிமிடமாவது உரையாற்ற வேண்டும் என செங்கோட்டையன் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    • நாளை பிரசாரம் நடைபெற உள்ளதை ஒட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துடன் இணைந்து செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பொதுக்கூட்டத்திற்கு இந்து சமய அறநிலைத்துறை, போலீஸ் சார்பில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றதை தொடர்ந்து போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டது.

    இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து கார் மூலம் நேரடியாக பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. விஜய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார். அந்த வாகனம் நிறுத்தப்படும் பகுதியை பொதுமக்கள் பார்க்கும் வகையில் மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து பகுதிகளிலும் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தடுப்பு வேலி பகுதியிலும் சுமார் 400 முதல் 500 பேர் வரை நிற்கும் வகையில் இடவசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    நடிகர் விஜய் முதல் முதலில் கட்சியை தொடங்கி விக்கிரவாண்டி அருகே முதல் மாநாட்டை நடத்தினார். அப்போது அவர் 46 நிமிடங்கள் பேசினார். அதைத்தொடர்ந்து ஆகஸ்டில் மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய் 35 நிமிடங்கள் பேசினார். கடந்த 9-ந்தேதி புதுவையில் மேற்கொண்ட பிரசாரத்தில் விஜய் 12 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார்.

     

    இந்த பொதுக்கூட்டத்தில் விஜய் 30 நிமிடமாவது உரையாற்ற வேண்டும் என செங்கோட்டையன் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிரசாரத்தை ஒட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் கூடு தல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை பிரசாரம் நடைபெற உள்ளதை ஒட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தீயணைப்பு துறை வாகனங்கள். ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் என்பதால் விஜயின் பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்கோட்டையன் இணைந்த பிறகு முதல் முதலில் நடைபெறும் கூட்டம் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை செங்கோட்டையன் மிகவும் ரகசியமாக வைத்துள்ளதாக தெரிகிறது.

    மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    • தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.
    • பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ சிந்தாமணியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம் என தமிழக முதலமைச்சர் கூறியது தரவுகள் அடிப்படையிலேயே தான். தற்போது அது உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் முதலமைச்சர் கூறுவது மாய பிம்பம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

    தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது, அது உண்மையில்லை. தமிழகத்தில் ஆரம்ப கல்வியில் இடைநிற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அளவில் உயர்நிலை, மேல்நிலைக் கல்வியில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 7.7 சதவீதமாகவே உள்ளது.

    இதில் மாணவர்கள் பலர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளில் சேருகின்றனர். எனவே இடைநிற்றல் சதவீத கணக்கில் வருகிறது. மேலும் இந்த சதவீதமும் குறையும். தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.

    திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது வேதனைக்குரிய செய்தி. இந்த துயர செய்தி குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாலும் போன உயிர் திரும்ப வராது. மாணவர் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் சகோதரருக்கு கல்வி சார்ந்த உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

    • தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருக்கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது.
    • தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேலுள்ள பஞ்சலிங்கம் சுவாமி கோவில் மற்றும் அருவி உள்ளது.

    இங்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

     

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக திருமூர்த்திமலை மலை மேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் அருகில் செல்லும் தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருக்கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
    • காலி சரக்கு ரெயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரெயில் பாதையை அமைக்க வேண்டும்.

    புதிய ரெயில்கள், ரெயில் நிறுத்தங்கள், ரெயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினார்.

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் மக்கள் கோரிக்கையை வலியுறுத்திய விஜய் வசந்த் அவர்கள் கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்தார்.

    புதிய ரெயில்கள்

    நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி வாரந்திர ரெயில், கன்னியாகுமரி – ஐதராபாத் தினசரி விரைவு ரெயில் ஆகிய புதிய ரெயில்களின் தேவையை முன் வைத்தார்

    ரெயில்கள் நீட்டிப்பு

    புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும், புனலூர் - மதுரை ரெயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும், மங்களூரு – திருவனந்தபுரம் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், ஹவுரா – திருச்சி ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டித்தல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்காக திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரெயில்களை நீட்டிக்க வேண்டும் எனவும், தாம்பரம் – நாகர்கோவில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி ரெயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    ரெயில் நிறுத்தங்கள்

    காந்திதாம் விரைவு ரெயில் மற்றும் ஜாம்நகர் ரெயில்கள் குழித்துறை ரெயில் நிலையத்திலும், புனலூர்-மதுரை ரெயில் பள்ளியாடி ரெயில் நிலையத்திலும், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி (intercity) ரெயில் இரணியல் ரெயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டும் என கோரினார்.

    உட்கட்டமைப்பு வசதிகள்

    ரெயில் இரட்டிப்பு பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக மந்தமான நிலையில் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி அதனை துரிதபடுத்த ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கன்னியாகுமரியில் மின்சார லோகோ ஷெட் (electric loco shed), நாகர்கோவில் டவுன் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு செல்ல இரண்டாவது நுழைவு வாயில், நாகர்கோவில் டவுன், இரணியல் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள், மோசமான நிலையில் காணப்படும் குழித்துறை ரெயில் நிலையம் செல்லும் சாலையை செப்பனிடுதல், மழை காலங்களில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள், பயணிகள் வசதி கருதி ரெயில் நிலையங்களின் மேம்பாடு ஆகியவற்றை சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்தார்.

    தொலைநோக்கு திட்டங்கள்:

    ராமேஸ்வரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி கடற்கரை ரெயில் பாதை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடைமுறைபடுத்த வேண்டும் என கேட்டுகொண்டார். அதுபோன்று அறிவிக்கப்பட்டுள்ள அங்கமாலி-எருமேலி-விழிஞ்சம் ரெயில் பாதையின் ஒரு பகுதியை கன்னியாகுமரி மாவட்டம் நெட்டா-குலசேகரம்-பூதப்பாண்டி வழியாக ஆரல்வாய்மொழி சென்றடையும் விதமாக நீட்டிப்பதற்கு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். அது போன்று காலி சரக்கு ரெயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரெயில் பாதையை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    • இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது.
    • 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பா.ம.க. கட்சி பெயரையோ அல்லது எனது பெயரையோ பயன்படுத்தக் கூடாது. எனது இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடர்ந்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கலந்து கொண்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க.கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.ம.க.செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி,அருள் எம்.எல்.ஏ.,பொதுச் செயலாளர் முரளி சங்கர்,பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி தொடர்ந்து பா.ம.க.பெயரையும், டாக்டர் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வருகிற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா? என டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.
    • விருதுநகரில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. இன்று அதிகாலை 3 மணிமுதல் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய வீதிகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள், அன்றாட பணிகளுக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

    ராமநாதபுரம் நகரம், பட்டிணம் காத்தான், பேராவூர் உட்பட சுற்று வட்டார கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், கீழக்கரை மேம்பால பகுதி, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குளம் போல் மழை நீர் தேங்கியது.

    இதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதலே விட்டுவிட்டு லேசான முதல் கனமழை பெய்து வருகிறது.

    ராமேசுவரத்தில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவதி அடைந்தனர். பஸ் நிலையம், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.

    மாவட்டத்தின் அதிகபட்ச மழையாக தங்கச்சிமடத்தில் 33 மி.மீ மழையும், பாம்பனில் 29 மில்லி மீட்டரும், ராமேசுவரத்தில் 27 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ராமநாதபுரத்தில் 22 மில்லி மீட்டர் மழை இன்று காலை 6 மணி வரை பெய்துள்ளது.

    விருதுநகரில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்ததால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தடி குடைகளை பிடித்தபடி சென்றனர். இன்று காலை முதல் பெய்யும் சாரல் மழையால் நகரில் குளிர்ந்த சீதோஷ்ன நிலை நிலவி உள்ளது.

    அருப்புக்கோட்டை, சிவகாசி, பாலையம்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
    • புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    நெல்லை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற 20, 21-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.

    அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி.நகர் பகுதியில் பாலம் அருகே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நெல்லை மேற்கு ஆவுடையப்பன், மத்தி அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு கிரகாம்பெல் மற்றும் நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதில் 2-வது நாளான 21-ந்தேதி பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பின்னர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்து அரசு சார்பில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு தலைமையில், கலெக்டர் சுகுமார், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல், மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என். நேரு நேற்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அன்று இரவு வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். மறுநாள் 21-ந்தேதி காலை ரெட்டியார்பட்டியில் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    அங்கு புதிய அரசு பஸ் வழித்தடங்களை தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்குகிறார். தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ.181.89 கோடியில் முடிவடைந்த 31 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.356.59 கோடி மதிப்பில் 11 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இவ்வாறாக மொத்தம் ரூ.538.48 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    மேலும் ரூ.100 கோடியே 95 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 924 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். மொத்தம் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டங்களை நெல்லை மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணிக்கிறார் என்றார்.

    தொடர்ந்து பொருநை அருங்காட்சியகத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். அதன் பின்னர் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ள தரிசன பூமி மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவுதான் கடந்த ஒரு வாரமாக தங்கம் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

    சென்னை:

    தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காமல் ஏறத் தொடங்கியது. கடந்த 12-ந்தேதியில் இருந்து அதன் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டது. சென்னையில் கடந்த 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.96,400 என்று இருந்த நிலையில், 12-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆனது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்றது. இதன் மூலம் தங்கம் இமாலய உச்சத்தை தொட்டது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விலை உயர்ந்த போதே தங்க வியாபாரிகள் ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிவிடும் என்று சொன்னார்கள். அது நேற்று முன்தினம் நிஜமாகிப் போனது.

    அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவுதான் கடந்த ஒரு வாரமாக தங்கம் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.



    மேலும் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், ஒரே நாளில் நேற்று 'அந்தர்பல்டி' அடித்து விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,400-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அந்த வகையில் இன்று வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 222 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    16-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,800

    15-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,120

    14-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    13-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    12-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    16-12-2025- ஒரு கிராம் ரூ.211

    15-12-2025- ஒரு கிராம் ரூ.215

    14-12-2025- ஒரு கிராம் ரூ.210

    13-12-2025- ஒரு கிராம் ரூ.210

    12-12-2025- ஒரு கிராம் ரூ.216

    ×