நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ. விரைந்து விசாரிக்க வேண்டும்- ராமதாஸ்

என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது. எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தவறு செய்கிறார்கள்.
நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ. விரைந்து விசாரிக்க வேண்டும்- ராமதாஸ்
Published on

திண்டிவனம்:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பா.ம.க. கட்சி பெயரையோ அல்லது எனது பெயரையோ பயன்படுத்தக்கூடாது. எனது இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் சேலம் தலைவாசலில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ராமதாஸ் உட்பட 22 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க.கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.ம.க.செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் முரளி சங்கர்,பொருளாளர் சையத் மன்சூர் அலி, முன்னாள் எம்.பி. துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது. அவர் அன்புமணி ராமதாஸ் அல்ல. அன்புமணி மட்டுமே. எங்கள் கட்சி பெயரை பயன்படுத்தி தவறு செய்கிறார்கள். அன்புமணிக்கு கட்சியே இல்லை. அவர் உறுப்பினரும் இல்லை. பா.ம.க.வை கைப்பற்ற அவர் பம்மாத்து வேலை செய்து கொண்டிருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அன்புமணி பா.ம.க. தலைவர் இல்லை என்பது வழக்கில் தெளிவுபடுத்தபட்டுள்ளது. பா.ம.க.வை நான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி ஆரம்பித்தேன். 46 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன். அன்புமணிக்கு பல்வேறு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தேன். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று ஆலமரம் போல் பா.ம.க.வை வளர்த்தேன். ஆலமரம் கிளையின் நுனியை வெட்ட நினைப்பவர்கள் கீழே விழுவார்கள். ஆயிரம் பொய் மூட்டைகளை அன்புமணி ஊடகங்களுக்கு தெரிவித்து வருகிறார். நான் வளர்த்த பூந்தோட்டத்தில் உள்ள செடிகளை பல குரங்குகள் நாசம் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பா.ம.க. நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஒட்டு கேட்பு கருவியை வைத்து சொந்த தந்தைக்கு ஆப்பு வைக்க துணிந்தவர்கள் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டிப்பது.

அன்புமணியின் ஆட்டம் பாட்டம், ஆதாயம் ஆகியவைகளுக்காக அசைந்து, வளைந்து நெளிந்து தேர்தல் ஆணையத்தில் பொய்யான ஆவணங்களை கொடுத்து ஆணைத்தையே ஏமாற்றியது குறித்து ஆய்வு செய்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கோடு, கட்சியின் சின்னம், தலைவர் சம்மந்தமான விஷயத்தில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும் மோசடி வேலைகளையும் சேர்த்து சி.பி.ஐ. விரைந்து விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், வியூகம் அமைக்கவும் ராமதாசுக்கு முழுஅதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com