என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.
- பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை தற்போது பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணி 2008-ல் தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக இடையில் முடங்கியது.
கோர்ட்டு வழக்கு தீர்ப்புக்கு பிறகு தி.மு.க. ஆட்சி வந்ததும் 2022-ல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 500 மீட்டர் தூரம் அளவுக்கு இணைக்கப்பட வேண்டிய பணிகள் மீண்டும் வேகப்படுத்தப்பட்டு தூண்கள் அமைத்த போது அதன் மீது வைக்கப்பட்ட 'கார்டிடார்' பாரம் தாங்காமல் கீழே சரிந்து விழுந்தது.
பின்னர் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் பாலத்தின் மீது வைத்து சரி செய்தனர். இப்போது பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது. ஒரு சில பணிகள் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது.
இந்த நிலையில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் நங்கநல்லூரில் நடைபெற்றது.
இந்த முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொது மக்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், 'வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் திட்டப்பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெறுவதால் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் சேவை நவம்பர் மாதம் தொடங்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தொடங்கி வைப்பார் என்று கூறினார்.
- வருகிற 9-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை தருகிறார்.
- கூட்டணி கட்சியினர் ஏதாவது பிரச்சனை என்றால் முதலமைச்சரிடம் தெரிவிப்பார்கள்.
திருவாரூர்:
திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பிஎல் 2 பாக நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 9-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை தருகிறார். 9 மற்றும் 10-ம் தேதி திருவாரூருக்கு வருகை தந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
கூட்டணி கட்சியினர் ஏதாவது பிரச்சனை என்றால் முதலமைச்சரிடம் தெரிவிப்பார்கள். உடனடியாக அதனை முதலமைச்சர் சரி செய்து வைப்பார்.
கட்சி தலைமையை பொறுத்தவரை ஆங்காங்கே கட்சியில் இருப்பவர்கள் அங்குள்ள பிரச்சனைகளை கூறுவார்கள். அதனை முதலமைச்சர் உடனடியாக சரி செய்து வைப்பார். தோழமை கட்சியினர் முதலமைச்சர் உடன் இணக்கமான முறையில் உள்ளனர்.
சிவகங்கை காவலாளி மரணம் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பணம் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர்.
- திருமாவளவன் ஒரு நாளைக்கு ஒரு நிலைப்பாடு எடுப்பவர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-
தமிழக மக்கள் மனதில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எனவே அ.தி.மு.க.வுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. எனவே நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். உங்களால் சரியாக உழைக்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள். உழைப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். வீடுதோறும் நிர்வாகிகள் சென்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். குறிப்பாக இளைஞர்களை கட்சியில் இணைக்க முயல வேண்டும். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என்றார்.
அதன் பின் நத்தம் இரா.விசுவநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க.வுக்கு தமிழகத்தில் 10 சதவீத வாக்கு வங்கி கூட கிடையாது. கூட்டணி மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவை வைத்துக் கொண்டு தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என கூறி வருகின்றனர். விஜய் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவரா? என்பதை தற்போது கூற இயலாது. அரசியல் களத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை வைத்து தமிழகத்தில் எதிர்கட்சிகள் பல்வேறு அரசியல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இடம்பெறும். வருகிற தேர்தலிலும் இந்த கூட்டணிதான் மகத்தான வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பார்.
பணம் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர். அப்படி இருந்தால் டாடா பிர்லா போன்ற தொழிலதிபர்கள் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்று இருக்கலாம். திருமாவளவன் ஒரு நாளைக்கு ஒரு நிலைப்பாடு எடுப்பவர். அவர் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அது ஒரு போதும் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
- நவீன சாதனங்களை உருவாக்க வேண்டும் என ஆண்டு தோறும் பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 25 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது.
திருச்சி:
முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது. சி.டி.ஏ.ஜெயசீலன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்த முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான ஓய்வுதாரர்களுக்கு 1.5 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இது போன்ற ஓய்வு முகாம்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்று மாலைக்குள் 6 ஆயிரம் ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்க்கும் தீர்க்கப்படும். இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு நமக்கான ஆயுத தளவாடங்களை நாமே தயாரித்துக் கொள்ள முடிகிறது.
ஒரு காரிடார் உத்தரபிரதேசத்திலும் 2-வது தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூரில் டிபன்ஸ் காரிடார் உருவாக்கப்படுகிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்களை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம். பல்வேறு நாட்களாக விடுக்கப்பட்ட கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஊதியம் திட்டத்தை பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. முப்படைகளுக்குமான முதன்மை அதிகாரி பதவி உருவாக்கப்பட்டது. நவீன சாதனங்களை உருவாக்க வேண்டும் என ஆண்டு தோறும் பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 25 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது.
நம்முடைய நம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் பறக்க கூடிய ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
5-ந்தேதி மற்றும் 6-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்
இன்று முதல் 2-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் 4-ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தமிழகத்தில் நடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணைக்கு சென்றவர்களில் 24 பேர் (லாக்கப் மரணம்) இறந்து உள்ளனர்.
- தொடரும் போலீஸ் நிலைய மரணங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் எனவும் நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணியாற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவலாளி அஜித்குமார் உள்ளிட்ட சிலரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மற்றவர்களை விடுவித்துவிட்டு அஜித்குமாரிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
இந்தநிலையில் அவர் திடீரென உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவரது சாவில் மர்மம் உள்ளது என்றும் போலீசார் தாக்கியதில் தான் அவர் இறந்துவிட்டார் என்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் சம்பந்தமாக 6 குற்றப்பிரிவு போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேற்று உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று காலையில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ராஜராஜன், மாரீஸ் குமார், மற்றும் வக்கீல் அருண் சுவாமிநாதன் ஆகியோர் முறையிட்டனர்.
அப்போது வக்கீல்கள் கூறுகையில், போலீசார் கடுமையாக தாக்கியதில் தான் காவலாளி அஜித்கு மார் பரிதாபமாக இறந்துள்ளார். தமிழகத்தில் நடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணைக்கு சென்றவர்களில் 24 பேர் (லாக்கப் மரணம்) இறந்து உள்ளனர். தொடரும் போலீஸ் நிலைய மரணங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் எனவும் நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள், போலீஸ் நிலையங்களில் சில ஆண்டுகளில் 24 சந்தேக மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து தங்களது தரப்பு பதில் என்ன என அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர். அது மட்டுமில்லாமல் இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக பதில் அளிக்க அரசு வக்கீல் உரிய அவகாசம் கோரினார். பின்னர் இந்த விவகாரம் சம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
- குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ்நிலையம் சி.எம்.டி.ஏ.சார்பில் கட்டப்பட்டு வருகிறது.
- மாதவரம் பேருந்து நிலையம் இன்னும் முழுமை அடையவில்லை.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு வெளியூர் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடைமேடை, தண்டவாளம் உள்ளிட்ட சுமார் 75 சதவீத பணிகள் முடிந்துஉள்ளன.
இதேபோல் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. பணிகள் விரைவில் முடிந்து திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய பஸ்நிலையத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ்நிலையம் சி.எம்.டி.ஏ.சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்துக்கான பணிகள் முடிவடைந்து விட்டன. பருவமழையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. பருவமழை பெரியளவில் இல்லையெனில் வருகிற நவம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடங்கப்பட்டபோது சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் தற்போது அவை அனைத்தும் முறையாக தீர்க்கப்பட்டுள்ளன.
ஆரம்ப கட்டத்தில் எந்தக் கட்டுமானத்திலும் சிறிய சிக்கல்கள் இருக்கும். ஆனால் திட்டமிடல் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் ஆரம்பித்த பஸ் நிலையம் இப்போது திட்டமிட்டு பயணிகள் வசதிக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
உதாரணமாக, திருச்சி விமான நிலையம் தொடங்கி பல வருடங்கள் ஆகியும் விமான சேவை முறையாக இல்லை. ஆனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கடந்த 2023 டிசம்பர் 31 அன்று திறக்கப்பட்ட நாளில் இருந்தே மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.
கிளாம்பாக்கத்தில் ரெயில் நிலையம் அமைக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் ரெயில் நிலையமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் காவல் நிலையம் இல்லாத காரணமாக தற்போது அதற்கும் கட்டமைப்புப் பணிகள் முடிவடைவதில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார்.
மாதவரம் பேருந்து நிலையம் இன்னும் முழுமை அடையவில்லை. அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்த பிறகு தென் மாவட்டங்களுக்கு பெரிதும் பயணிகள் சேவையை வழங்கும் வகையில் அதிக பஸ் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?
- அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே,
பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.
காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்கண்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் "காவல்துறை அமைச்சர்" மு.க.ஸ்டாலினிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள்.
1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?
2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?
3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து "உண்மையை" வரவழைக்க மாவட்ட SP ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?
4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?
5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல்துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா?
6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித்குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?
7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?
8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட அறிவாலயம் அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு?
9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்! என்று பதிவிட்டுள்ளார்.
- காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு ‘வாட்டர் பெல்’ அடிக்கப்படும்.
- பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
சென்னை:
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளைத் தரும். அந்த வகையில், மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக 'வாட்டர் பெல்' திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, 'வாட்டர் பெல்' திட்டத்தை உடனே பள்ளிகளில் அமல்படுத்த அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பள்ளியில் ஒருநாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இது வழக்கமான ஒலியில் இருந்து மாறுபட்ட ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும். காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு 'வாட்டர் பெல்' அடிக்கப்படும். பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து நேரத்தை மாற்றி கொள்ளலாம்.
அதன்படி தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது. வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, காலை மணிக்கு பெல் அடித்ததும் மாணவர்கள் தண்ணீர் அருந்தினர்.
- வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
- மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரிக் குறைப்பு முறைகேட்டின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் லட்சக்கணக்கான தனியார் கட்டிடங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பு முறைகேடு புகாரில் கைதாகி உள்ள நபர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்பதும், கொத்தடிமைகளைப் போல குறைந்த ஊதியத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
- சமூகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக போக்குவரத்து தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதில், இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்பதும், கொத்தடிமைகளைப் போல குறைந்த ஊதியத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது.
மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றி, நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எப்போதும் காரில் வரும் மோகன்ராஜ் நேற்று பைக்கில் வந்துள்ளார்
- கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.
கூவத்தூர் அடுத்த பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது.50) இவர் கல்பாக்கம் அடுத்த காத்தாங்கடை கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் பங்கு நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் பெட்ரோல் பங்கை மூடிவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு புறப்படும் போது காத்தாங்கடை சந்திப்பு பகுதியில் காரில் பதுங்கி இருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் மோகன்ராஜை வழிமறித்து கையில் இருந்த பட்டாகத்தி மற்றும் அருவாலால் அவரதே கழுத்து, தோல்பட்டை, முதுகில் வெட்டி விட்டு அங்கிருந்து காரில் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் உயிருக்கு போராடிய நிலையில் கொத்துயிரும், கொலையுருமாக ரத்த வெள்ளத்தில் கிடந்த மோகன்ராஜை அப்பகுதியில் கடை வைத்திருப்போர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர். தகவலரிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி அறிவழகன், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
எப்போதும் காரில் வரும் மோகன்ராஜ் நேற்று பைக்கில் வந்துள்ளார், இதையறிந்த மர்ம கும்பல் மோகன்ராஜை கொலை செய்ய காத்தாங்கடை சந்திப்பில் காரில் நீண்ட நேரமாக காத்திருந்து, திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளார்கள்.
கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த கொலை ஏதேனும் கொடுக்கல் வாங்கல் பணப் பிரச்சனையா? நிலத்தகராரா? பெட்ரோல் பங்கில் ஏதும் பிரட்சனையா? கோயில் விவகாரமா? அல்லது வேறேதும் காரணங்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய் பிரணீத் உத்தரவின் பெயரில் கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, திருக்கழுகுன்றம் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கூவத்தூர் போலீசார் சந்தேகத்தின் பெயரில் நாவங்கால் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆன்மீக பக்தரும் பெட்ரோல் பங்கு அதிபருமான மோகன்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இ.சி.ஆரில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இந்த கொலை சம்பவம் கூவத்தூர், காத்தாங்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






