என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை நவம்பரில் தொடங்கும்: அமைச்சர் தகவல்
- பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.
- பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை தற்போது பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணி 2008-ல் தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக இடையில் முடங்கியது.
கோர்ட்டு வழக்கு தீர்ப்புக்கு பிறகு தி.மு.க. ஆட்சி வந்ததும் 2022-ல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 500 மீட்டர் தூரம் அளவுக்கு இணைக்கப்பட வேண்டிய பணிகள் மீண்டும் வேகப்படுத்தப்பட்டு தூண்கள் அமைத்த போது அதன் மீது வைக்கப்பட்ட 'கார்டிடார்' பாரம் தாங்காமல் கீழே சரிந்து விழுந்தது.
பின்னர் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் பாலத்தின் மீது வைத்து சரி செய்தனர். இப்போது பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது. ஒரு சில பணிகள் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது.
இந்த நிலையில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் நங்கநல்லூரில் நடைபெற்றது.
இந்த முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொது மக்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், 'வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் திட்டப்பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெறுவதால் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் சேவை நவம்பர் மாதம் தொடங்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தொடங்கி வைப்பார் என்று கூறினார்.






