என் மலர்
நீங்கள் தேடியது "வேளச்சேரி ரெயில் நிலையம்"
- வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு வரும் புறநகர் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-ம் தளத்துக்கு வரும்.
- பயணிகள் ரெயில்களை வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில் சேவைகள் பொதுமக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மின்சார ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த ரெயில்களை நம்பி நீண்ட தூரத்தில் இருந்தும் பொதுமக்கள் சென்னைக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். சென்னை மக்களின் ஒரு வரப்பிரசாதமாக புறநகர் ரெயில் சேவைகள் இருந்து வருகிறது.
சென்னையில் தீராத தலைவலியாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பஸ், கார், இருசக்கர வாகனங்களில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியுமா...? என்பது கேள்விக்குறிதான். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் கேட்கவே வேண்டாம். சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் நத்தை போலதான் ஊர்ந்து செல்லும். இதில் இருந்து தப்பிக்க ரெயில் சேவைகள் பொதுமக்களுக்கு, பெரிதும் கை கொடுத்து வருகிறது.
கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவை பயன்பாட்டில் இருந்த நிலையில் மற்றொரு புதிய வழித்தடமாக கடற்கரை, வேளச்சேரி வழியாக பரங்கிமலைக்கு பறக்கும் ரெயில் பாதை திட்டம் 1995-ல் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் முதற்கட்டமாக கடற்கரையில் இருந்து சிந்தாதிரிபேட்டை, கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரி வரை ரெயில் இயக்கப்பட்டது.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வேளச்சேரி- பரங்கிமலையை இணைக்கும் வகையில் ரூ.730 கோடி செலவில் கடந்த 2008-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு பாதை அமைப்பதில் நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக தலையிட்டதால் தீர்வு ஏற்பட்டது. இதனால் பணிகள் மீண்டும் வேகமெடுத்தன. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததால் மீண்டும் பணிகள் முடங்கியது.
பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வேளச்சேரி-பரங்கிமலை இணைப்பு பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ளகரம், ஆதம்பாக்கம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளது.
தண்டவாளம் அமைக்கும் பணிகள் நூறு சதவீதம் நிறைவடைந்ததால் ரெயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) அல்லது ஜனவரிக்குள் இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இணைப்பின் மூலம் பரங்கிமலை ரெயில் நிலையம் பெரிய சந்திப்பாக மாறி இருக்கிறது.
பறக்கும் ரெயில், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் ஆகிய 3 ரெயில் சேவைகளும் சந்திக்கும் மிகப்பெரிய ரெயில்வே முனையமாக பரங்கிமலை மாறி உள்ளது.
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு வரும் புறநகர் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-ம் தளத்துக்கு வரும். இதில் ஆதம்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் பாதைக்கு மேலே மேம்பாலத்தின் மீது மெட்ரோ ரெயில் செல்லும். பரங்கிமலை வழியாக சோழிங்கநல்லூர் செல்லும் மெட்ரோ ரெயில்கள் இந்த வழித்தடத்தில் மடிப்பாக்கம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம் வழியாக செல்லும்.
வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரெயில் வந்து செல்லும் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தின் 2-ம் தளத்தில் பயணச்சீட்டு வழங்குமிடம், அலுவலக அறைகள், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளன.
மெட்ரோ ரெயில் நிலையத்தின் தரை தளத்தில் இருந்து பறக்கும் ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், பரங்கிமலை மின்சார ரெயில் நிலையம் ஆகியவற்றுக்கு பயணிகள் எளிதாக செல்லும் வகையில் படிக்கட்டுகள், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரெயில் சேவைகளும் பரங்கிமலையில் செயல்பட தொடங்கியதும் பரங்கிமலையின் முகமே மாறி இருக்கும்.
வேளச்சேரி- பரங்கிமலை வழித்தடத்தில் ஒரு ரெயில் என்ஜீன் மற்றும் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு தண்டவாளம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதை அறிய சோதனை நடத்தப்பட்டது.
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தி ரெயிலின் இயக்கம், பிரேக் சிஸ்டம், மின் இணைப்புகள், சிக்னல் இணைப்புகள், ஆகியவை பரிசோதிக்கப்பட்டது.
இந்த சோதனை ஓட்டம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து பயணிகள் ரெயில்களை வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சோதனைக்கு பின்னர் ரெயில்களை இயக்க ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளிப்பார். அதன்பிறகு ரெயில்கள் வேளச்சேரி-பரங்கிமலை இடையே இயக்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பகுதி மக்களின் கனவு நிறைவேற இருக்கிறது. சென்னை புறநகர் பகுதியான பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் சென்னையின் பிறபகுதிகளுக்கு இனி விரைவாக பயணிக்க முடியும்.
சென்னை ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர்., அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி போன்ற சென்னையின் மையப்பகுதிக்கு செல்வது புறநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பயணம் இனி எளிதாகி விடும்.
குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பறக்கும் ரெயில் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் போக்குவரதது நெரிசலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.
பரங்கிமலை ரெயில் நிலையம் சமீபத்தில் தான் நவீன மயமாக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. தற்போது பறக்கும் ரெயில் நிலையமும் செயல்பட இருப்பதால் பரங்கிமலையின் முகமே மாறிவிடும். தாம்பரம் போல மிகமிக, முக்கியமான ரெயில் நிலையமாக உருவெடுக்கும். இங்கிருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அது மட்டுமின்றி இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.
பரங்கிமலையில் புறநகர் மின்சார ரெயில் சேவை, மெட்ரோ ரெயில் சேவை, பறக்கும் ரெயில் சேவை, மாநகர பஸ் சேவைகள் ஒரே இடத்தில் கிடைப்பதாலும் இங்கிருந்து வேளச்சேரி போன்ற பகுதிகளுக்கு மிகவும் எளிதாக செல்லலாம் என்பதாலும் எப்போது பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.
- ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
- திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம், 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே கடந்த 1984-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியது. 1995-ம் ஆண்டு இதற்கான பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 2-ம் கட்ட பணிகள் மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே 1998-ம் ஆண்டு தொடங்கி, 2004-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், 2-ம் கட்ட பணி விரிவாக்கமாக கடந்த 2008-ம் ஆண்டு வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரூ.495 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியிருந்த ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்கு பின்பு கோர்ட்டு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. அப்போது, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரெயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போது அந்த பாலம் சரிசெய்யும் பணி முடிவடைந்துள்ளது. எஞ்சிய ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் நவம்பர் மாதம் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு, இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும். அதன்படி, வரும் நவம்பர் மாதம் இறுதியில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.
- பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.
- பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை தற்போது பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணி 2008-ல் தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக இடையில் முடங்கியது.
கோர்ட்டு வழக்கு தீர்ப்புக்கு பிறகு தி.மு.க. ஆட்சி வந்ததும் 2022-ல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 500 மீட்டர் தூரம் அளவுக்கு இணைக்கப்பட வேண்டிய பணிகள் மீண்டும் வேகப்படுத்தப்பட்டு தூண்கள் அமைத்த போது அதன் மீது வைக்கப்பட்ட 'கார்டிடார்' பாரம் தாங்காமல் கீழே சரிந்து விழுந்தது.
பின்னர் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் பாலத்தின் மீது வைத்து சரி செய்தனர். இப்போது பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது. ஒரு சில பணிகள் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது.
இந்த நிலையில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் நங்கநல்லூரில் நடைபெற்றது.
இந்த முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொது மக்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், 'வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் திட்டப்பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெறுவதால் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் சேவை நவம்பர் மாதம் தொடங்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தொடங்கி வைப்பார் என்று கூறினார்.
- வேளச்சேரி-புழுதிவாக்கம்-ஆதம்பாக்கம் வரை தூண்கள் அமைக்கப்பட்டு தண்டவாளம் பதிக்கப்பட்டது.
- ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே 600 மீட்டர் தூரத்துக்கு பணிகள் தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
சென்னை:
சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம் கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை முதல் கட்டமாக இயக்கப்பட்டது. பின்னர் வேளச்சேரி வரை இது நீட்டிக்கப்பட்டது.
இதனால் பறக்கும் ரெயிலில் அதிக பயணிகள் பயணித்து வருகின்றனர். ஆரம்பத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரெயில் இயக்கப்பட்டது. பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமானதால் 9 பெட்டிகள் கொண்ட ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதன் அடுத்தகட்டமாக வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 2007-ம் ஆண்டு 3 கி.மீ தூரத்துக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் வேளச்சேரி-புழுதிவாக்கம்-ஆதம்பாக்கம் வரை தூண்கள் அமைக்கப்பட்டு தண்டவாளம் பதிக்கப்பட்டது. ஆனால் ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே 600 மீட்டர் தூரத்துக்கு பணிகள் தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
அந்த வழி பாதையில் உள்ள வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததால் கடந்த 11 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் இருந்தது.
2020-ம் ஆண்டு அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு பணிகள் நடைபெறத் தொடங்கியது. இப்போது ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிந்துவிடும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதுகுறித்து சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் நிலையத்தை நீட்டித்து அப்போதைய முதல்- அமைச்சர் கருணாநிதி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் 3 கி.மீ தூரத்தில் 2.4 கி.மீ தூரம் தூண்கள் அமைத்து பணிகள் முடிந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் 600 மீட்டர் தூரம் பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.
தற்போது அந்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரெயில் பணிகள் முடிவடைந்து விடும். அதன் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தொடங்கி வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.






