என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இறந்த நபர் தீவிரவாதியா?... அவரை கடுமையாக தாக்கியது ஏன்? - ஐகோர்ட் அடுக்கடுக்கான கேள்வி
- தமிழகத்தில் நடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணைக்கு சென்றவர்களில் 24 பேர் (லாக்கப் மரணம்) இறந்து உள்ளனர்.
- தொடரும் போலீஸ் நிலைய மரணங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் எனவும் நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணியாற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவலாளி அஜித்குமார் உள்ளிட்ட சிலரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மற்றவர்களை விடுவித்துவிட்டு அஜித்குமாரிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
இந்தநிலையில் அவர் திடீரென உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவரது சாவில் மர்மம் உள்ளது என்றும் போலீசார் தாக்கியதில் தான் அவர் இறந்துவிட்டார் என்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் சம்பந்தமாக 6 குற்றப்பிரிவு போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேற்று உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று காலையில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ராஜராஜன், மாரீஸ் குமார், மற்றும் வக்கீல் அருண் சுவாமிநாதன் ஆகியோர் முறையிட்டனர்.
அப்போது வக்கீல்கள் கூறுகையில், போலீசார் கடுமையாக தாக்கியதில் தான் காவலாளி அஜித்கு மார் பரிதாபமாக இறந்துள்ளார். தமிழகத்தில் நடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணைக்கு சென்றவர்களில் 24 பேர் (லாக்கப் மரணம்) இறந்து உள்ளனர். தொடரும் போலீஸ் நிலைய மரணங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் எனவும் நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள், போலீஸ் நிலையங்களில் சில ஆண்டுகளில் 24 சந்தேக மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து தங்களது தரப்பு பதில் என்ன என அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர். அது மட்டுமில்லாமல் இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக பதில் அளிக்க அரசு வக்கீல் உரிய அவகாசம் கோரினார். பின்னர் இந்த விவகாரம் சம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.






