என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோப்புப்படம்
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் செப்டம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது
- குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ்நிலையம் சி.எம்.டி.ஏ.சார்பில் கட்டப்பட்டு வருகிறது.
- மாதவரம் பேருந்து நிலையம் இன்னும் முழுமை அடையவில்லை.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு வெளியூர் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடைமேடை, தண்டவாளம் உள்ளிட்ட சுமார் 75 சதவீத பணிகள் முடிந்துஉள்ளன.
இதேபோல் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. பணிகள் விரைவில் முடிந்து திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய பஸ்நிலையத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ்நிலையம் சி.எம்.டி.ஏ.சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்துக்கான பணிகள் முடிவடைந்து விட்டன. பருவமழையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. பருவமழை பெரியளவில் இல்லையெனில் வருகிற நவம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடங்கப்பட்டபோது சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் தற்போது அவை அனைத்தும் முறையாக தீர்க்கப்பட்டுள்ளன.
ஆரம்ப கட்டத்தில் எந்தக் கட்டுமானத்திலும் சிறிய சிக்கல்கள் இருக்கும். ஆனால் திட்டமிடல் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் ஆரம்பித்த பஸ் நிலையம் இப்போது திட்டமிட்டு பயணிகள் வசதிக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
உதாரணமாக, திருச்சி விமான நிலையம் தொடங்கி பல வருடங்கள் ஆகியும் விமான சேவை முறையாக இல்லை. ஆனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கடந்த 2023 டிசம்பர் 31 அன்று திறக்கப்பட்ட நாளில் இருந்தே மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.
கிளாம்பாக்கத்தில் ரெயில் நிலையம் அமைக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் ரெயில் நிலையமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் காவல் நிலையம் இல்லாத காரணமாக தற்போது அதற்கும் கட்டமைப்புப் பணிகள் முடிவடைவதில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார்.
மாதவரம் பேருந்து நிலையம் இன்னும் முழுமை அடையவில்லை. அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்த பிறகு தென் மாவட்டங்களுக்கு பெரிதும் பயணிகள் சேவையை வழங்கும் வகையில் அதிக பஸ் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






